(சோழ மன்னர்கள் -41.)
பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!
முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120). (ஏழாம் பகுதி)
–இறுதிப் பகுதி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன், புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன். }
சூரியனுக்குக் கோயில்-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கன்னோசி மன்னர்கள் சூரியனுக்கு கோயில் எழுப்பி வழிபாடு
செய்யும் வழக்கமுள்ளவர்கள். அவர்களைப்போல குலோத்துங்கனும் சோழப்பேரரசில்
சூரியனுக்கு ஒரு கோயில் எழுப்பி அதற்கு குலோத்துங்க சோழமார்த்தாண்டாலயம் எனப்
பெயரிட்டு அதற்கு நாள் வழிபாட்டிற்காக நிவந்தங்களும் வழங்கியுள்ளான் சூரியனுக்குத்
தனிக் கோயில் அமைக்கப் பெற்ற காரணத்தால் அவ்வூர் இன்றளவும் சூரியனார் கோயில் என்று
அழைக்கப் படுவதைக் காணமுடிகின்றது.
இவற்றையெல்லாம் ஆராய்ந்து
பார்க்கும்போது கன்னோசி இராச்சியத்திற்கும் சோழப் பேரரசிற்கும் குலோத்துங்கனது
ஆட்சிக்காலத்தில் நட்பு நிலவியதை அறியலாம்.
முதலாம் குலோத்துங்கனது ஆட்சியின் தொடக்க
காலங்களில் ஈழ நாடு சோழ இராச்சியத்திலிருந்து விலகிவிட்டதை அறியமுடிகின்றது. கி.பி
1070 ல் மன்னன் அதிராசேந்திர சோழன் மகப்பேறு இல்லாத நிலையில்
இறந்த காரணத்தாலும், சோழர் மரபில் வேறு அரசகுமாரன் ஒருவனும் இல்லாததாலும் ஒருசிலகாலம் மன்னன்
இல்லாது சோழப்பேரர அவதியுற்றவேளையில் ரோகணத்தில் இருந்து கலகம் செய்து வந்த
சிங்களர் ஈழத்தை தம் வசப்படுத்தியிருத்தல் வேண்டும்.
குலோத்துங்கனது ஆட்சியின்
இறுதி ஆண்டுகளில் வேங்கி நாடும் சோழ இராச்சியத்தின் ஆளுகையில் இல்லை என்பதையும்
அறியமுடிகின்றது.
சுங்கந் தவிர்த்த சோழன்-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒட்டக்கூத்தர்
தம் மூவர் உலாவில் ‘புவிராச ராசர்மனு முதலோர் நாளில் தவிராத சுங்கந் தவிர்த்தோன்’
என முதலாம் குலோத்துங்க சோழனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
‘உறுபொருளும் உல்கு
பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்’
எனும் குறட்பாவிற்கு பொருள் கூறும்
பரிமேலழகர், ‘உல்கு பொருள்’ என்பது சுங்கமாகிய பொருள்- அதாவது கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது (வரியானது)-என்கின்றார். நச்சினார்க்கினியரின்
பட்டினப்பாலை உரையினின்றும் இதனை அறியலாம்.
அதாவது, வாணிபத்தின் பொருட்டு சாலைகள்
வழியாய் வண்டிகளாலும் கடல் வழியாய் கப்பல்களினாலும் எடுத்துச் செல்லப்படும்
மற்றும் கொண்டுவரப்படும் பொருட்களுக்கு அரசாங்கத்தினர் வாங்கிய வரிவகை ‘சுங்கம்’
என்று குறிக்கப்பெற்றது என்பதையும் அவ் வரிவிதிப்பானது வள்ளுவரது காலந்தொட்டே
இருந்ததையும் அறிய முடிகின்றது.
அவ்வாறு காலங் காலமாய் விதிக்கப்பட்ட
வரியினை மக்களுக்கு நலம்புரியும் வகையில் சோழப்பேரரசனாக முடிசூடிக்கொண்ட பின்
முற்றிலும் நீக்கிவிட்டான் முதலாம் குலோத்துங்க சோழன் என்பதை அறிய முடிகின்றது.
இதன் காரணமாகவே ‘சுங்கந் தவிர்த்த சோழன்’ என மக்களால் பாராட்டப் பெற்றான் முதலாம் குலோத்துங்கன்.
சோழப் பேரரசு முழுவதும் நிலம் அளக்கப்பட்டமை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதலாம் குலோத்துங்க சோழன் தனது
ஆட்சிக்காலத்தில் செய்த மற்றுமொரு சிறப்பான செயல் என்னவெனில் சோழ இராச்சியம்
முழுதிலும் உள்ள நிலங்களை அளக்கச் செய்தாகும்.
கி.பி. 1086 ம் ஆண்டில்
தொடங்கப் பெற்ற இந்த நில அளவை இரண்டாண்டுகள் மேற்கொள்ளப்பட்டு சோழ இராச்சியத்தின்
நிலப்பரப்பு
முழுமையும் அளந்து முடிக்கப்பட்டது
என்பதை திருவீழிமிலைக் கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகின்றது.
இந்நில அளவையின் மூலம் சோழப் பேரரசு
முழுவதிலும் இருந்த நிலங்களை அளந்து அதன்மூலம் விளைநிலங்களின் சரியான பரப்பளவினை
அறிந்து அவற்றின் மீதான நிலவரி ஒழுங்கு படுத்தப்பட்டது.
முதலாம் குலோத்துங்கனின் தாய்வழிப் பாட்டன்
முதலாம் இராசேந்திரனின் தந்தையாகிய இராசராச சோழனுக்கு அடுத்ததாக, ஏறத்தாழ எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப்
பின்னர், சோழப் பேரரசு முழுவதையும் அளந்த சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் ஆவான்.
இவ்வாறு அளக்கப்பட்ட நிலங்களில்
விளைநிலங்கள் மீது மட்டிலுமே இம்மன்னனால் வரி விதிக்கப்பட்டது என்பதையும் ஏனைய
நிலங்கள் வரிவிதிப்பிலிருந்து
நீக்கபட்டிருந்ததையும் அறியமுடிகின்றது.
நீர்வளம் மேம்படுத்தியது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சோழ இராச்சியத்திற்குட்பட்ட பகுதிகளில்
அந்தந்த பகுதிகளின் இயற்கை அமைப்பிற்கு ஏற்ப ஆறுகளையும் ஏரிகளையும் வெட்டி
அப்பகுதிகளை வளப்படுத்திய தம் முன்னோர்களைப் போலவே முதலாம் குலோத்துங்கனும்
சோழப்பேரரசினில் நீர் வளத்தினை மேம்படுத்தும் பொருட்டு (இக்காலத்தில் ஆந்திர
மாநிலம் சித்தூர் மாவட்டத்திலிருக்கும்) புங்கனூரில் சோழப்பேரேரி எனும் பெயரில்
ஓர் ஏரியையும், (இக்காலத்தில் தஞ்சை மாட்டம் பாபநாசம் பகுதியில் உள்ள) முனியூரில் குலோத்துங்க
சோழப்பேரேரி எனும் பெயரில் ஓர் ஏரியையும் அமைத்தான் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றது.
கிராம சபை ஆட்சி
~~~~~~~~~~~~~~~~~~~~
முதலாம் பராந்தக சோழனால் தோற்றுவிக்கப்பட்ட,
குடவோலை மூலம் கிராமசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படும், கிராம சபையின்
கிராம ஆட்சி முறை இவ் வேந்தனது ஆட்சிக்காலத்தில் இருந்தன என்பதை தொண்டை
மண்டலத்தில் அமைந்திருந்த (இக்காலத்தில் புதுச்சேரி மாநிலத்தின் பகுதியாய்
விளங்கும்) திருபுவனையில் உள்ள வரதராசப்
பெருமாள் கோயிலில் கி.பி.1113 ல் வரையப்பெற்ற கல்வெட்டு ஒன்றினால் அறியலாம்.
அக் கல்வெட்டு அவ்வூர் சபையோர் எடுத்த முடிவு ஒன்றினைக் குறிப்பிடுகின்றது.
அஃது என்னவெனில், அவ்வூர் பட்டர், தச்சர்,கொல்லர்,உபாத்தியாயர், கணக்கர் முதலானோர்
அவரவர் தொழிலினை அவ்வூரிலேயே செய்ய வேண்டும் என்றும் மீறி அவ்வூரைவிட்டு வேறு
ஊருக்குச் சென்று செய்தால் குற்றம் புரிந்தவர்களாய், கிராமத்தை அழித்த துரோகம் செய்தவர்களாய்
கருதப்படுவார்கள் என்பதாகும்.
அநேகமாக இதற்குக் காரணம், மேற்சொன்னவர்கள்
அக்கிராமத்தில் குடியிருந்துகொண்டு அரசால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களை, மான்யங்களை கிராம சபை மூலமாகப்
பெற்றுக்கொண்டு அக்கிராம மக்கள் வளர்ச்சிக்கு தத்தமது தொழில் சார்ந்த உதவிகளைச்
செய்யாது பிற கிராமங்களில் தொழில்புரிந்து பொருளீட்டுவதில் அக்கறை காட்டியிருத்தல்
வேண்டும்.
முதலாம் குலோத்துங்கனின்
புதல்வர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இம்மன்னனுக்கு நான்கு புதல்வர்கள் இருந்தனர்.
அவர்கள் முறையே இராசராச சோழகங்கன், இராசராச மும்முடிச் சோழன், வீர சோழன் மற்றும்
விக்ரம சோழன் ஆகியோர் ஆவர்.
இவர்களுல் இராசராச சோழகங்கன், இராசராச
மும்முடிச் சோழன், வீர சோழன் ஆகியோர் முதலாம் குலோத்துங்கனது காலத்திலேயே இறந்து
போன காரணத்தால் இளையவனான விக்ரம சோழன் இளவரசு பட்டம் ஏற்றான்.
ஐம்பது ஆண்டுகாலமாக பிற சமயங்களையும்
ஆதரித்து நாட்டு மக்களிடையே பெருமதிப்பு பெற்று விளங்கி, நல்லாட்சி புரிந்துவந்த முதலாம்
குலோத்துங்க சோழன் கி.பி 1120 ஆம் ஆண்டு இறந்தனன்.