மனமென்னும் வான்வெளியில்!

5.தேசிய சாலை பாதுகாப்பு வாரம்ஜனவரி 1 முதல் ஜனவரி 7 வரை!


       இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி1  முதல்7  ஆம் தேதி வரை  தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம்(  National Road Safety Week, January 1 to 7) கடைபிடிக்கப்படுகிறது.
         நம் மக்களிடையே, விபத்துக்களைக் குறைப்பது,  விபத்து ஏற்படாமல் தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்நாட்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
         சாலை விபத்துக்களால் பலர், வருமானம் ஈட்டும் குடும்பத்தின் உறுப்பினரை, தாய்தந்தையரை, வாழ்க்கைத்துணையை இழக்கின்றார்கள். பலர் பிள்ளைகளை இழந்துவிடுகின்றார்கள். இதனால், குடும்பத்தினர் நிம்மதி இழந்துவாழ நேரிடுகின்றது. மேலும், இவ்விபத்துகள் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கிவே செய்கின்றன.
         இத்தகைய சாலை விபத்துகள் நிகழாமல் தடுக்கவும், மக்களின் சாலைப் பயணங்கள் இனிமையாக அமையவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
         இவை மட்டும் போதாது, மக்களாகிய நமது பங்களிப்பும் தேவையான ஒன்றாகின்றது. .
         சாலையில் வேகம் காட்டுவது விவேகம் அல்ல. மேலும், சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு, கவனத்தை வேறு இடத்தில் வைத்துக் கொண்டு, விதிகளுக்கு முரணாக  வாகனத்தை ஓட்டுவது  நமக்கும் நமது  குடும்பத்தினருக்கும் பல்வகை இழைப்பையே தரும்.
         சாலை விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் பலியாகின்றார்கள். இதில் சுமார் 11 முதல் 12 சதவிகித மரணம் தமிழகத்தில் நடக்கின்றது .   இதில், சென்னையில் மட்டும் சுமார் 500 பேர்  உயிரிழக்கின்றார்கள்.
          சாலை விபத்துகளில் அதிகமாக இளைஞர்கள்தான் பலியாகி வருகிறார்கள் என்ற தகவல் மிகுந்த வேதனையளிக்கும் ஒன்றாகும்.
          இதற்கு முக்கிய காரணம், விளேயாட்டுத்தனமும், பாதுகாப்பற்ற மற்றும் தலைக் கவசம் அணியாத இருசக்கர வாகனப் பயணமுமே.
                              இந்திய அளவில், எண்ணிக்கையில்.  சாலைவிபத்தில் இளைஞர்கள் பலியாவது தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது என்பது மேலும் வேதனையளிக்கும் ஒன்றாகும்.
          இளைய சமுதாயம்  பாதுகாப்போடு இன்னலற்ற வாழ்க்கை வாழ அவர்களோடு அனைவரும் புத்தாண்டில் உறுதிமொழி ஏற்போம்!

(மேலேயுள்ள படம் எவரையும் புண்படுத்தும் நோக்கமில்லாது எடுத்துக்காட்டாக என்னால் பயன்படுத்தப்பட்டுள்ளது)






                   4.வரலாறும், வரலாற்றுக் கதையும்
                    படிக்கும் ஆர்வமுள்ளவர்கள், எழுத்துலக ஜாம்பவான், திரு.கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையைப் படிக்காமலும் அதன்சுவையை சுவைக்காமலும் இருக்கமுடியுமா என்பது ஐயமே! நான் படித்திருக்கின்றேன்!
   ஆயினும் ஒன்றை சொல்லியாகவேண்டும். வரலாறு என்பது வேறு, கதை என்பது வேறு. 

    திரு. கல்கி அவர்கள் எழுதியது சோழர் குலம் பற்றிய உண்மை வரலாறு என்றே பலரும் எண்ணுகின்றார்கள். அவ்வாறு எண்ணுவது மிகவும் தவறு.

    “பொன்னியின் செல்வன்” என்பது, வரலாற்றில் நடந்த ஒரு,
மிகச் சில நிகழ்வுகளைக் கொண்டு திரு. கல்கி அவர்கள் தனது கற்பனையால் புணைந்து எழுதிய மிகப் பிரம்மாண்டமான கதை.

     ஆனால், அதுவே சோழர் வரலாறு அல்ல.

உதாரணத்திற்குச் சில:-

     1) கதையின் பெயரில் உள்ளது போல இராசராச சோழனுக்கு “பொன்னியின் செல்வன்” என்ற மெய் கீர்த்தியே ( பட்டப் பெயர் )  கிடையாது.

     அது திரு.கல்கி அவர்களின் கற்பனையால் கிடைத்து, உலகமெலாம் பரவிய பெயர் என்பதே சரியாகும்.

      2) வல்லவராயன் வந்தியத்தேவன் ஒரு வாணர்குல இளவல் என்பது திரு.கல்கி அவர்களின் கற்பனை.

       வரலாற்றில், அக்காலகட்டத்தில் வாணர்குலம் சோழருக்கு எதிரான குலமாயிருந்தது.

       வரலாற்றில், குந்தவையை மணந்த வல்லவராயன் சாளுக்கிய அரசகுலத்தைச் சேர்ந்த ஒருவன்.

      3) ஈழத்திற்கு, அதாவது இலங்கைக்கு, இராசராசனின்  தகப்பன் சுந்தர சோழனும், இராசராச
சோழனும் போர் நிமித்தம் சென்றார்கள் என்பது திரு.கல்கி அவர்களின் கற்பனை.  
  
      ஆனால் உண்மையில்,    வரலாற்றில், சுந்தர சோழனோ அவன் மகன் முதலாம் இராசராச
சோழனோ இலங்கைக்குச் செல்லவேயில்லை.

      முதலாம் இராசராசன் காலம் வரையில், இலங்கையின் மீது படையெடுத்துச் சென்ற முதல் சோழ அரசகுமாரன், இராசராச சோழனின் மகனும், சோழர் படைக்குத் தலைமையெற்றுச் சென்ற, அப்போது, இளவரசனாயிருந்த முதலாம் இராசேந்திரன் சோழனே ஆவான்.

      4) மேலும், முதலாம் இராசராச சோழனின் சிறிய தகப்பனாகிய “உத்தமசோழன்” என்பவன் சோழர் குலத்தோன்றலே அல்ல, அதாவது முதலாம் கண்டராதித்த சோழனுக்குப் பிறந்தவனே அல்ல என்பது திரு. கல்கி அவர்களின் கற்பனைகளுள் ஒன்று.
      முதலாம் கண்டராதித்த சோழனின் புதல்வன் உத்தமசோழன் என்பதே வரலாறு. 
    
       சுந்தர சோழனின் இறப்பிற்குப் பின்னர் அவனது மகன்
முதலாம் இராசராசனே சோழப்பேரரசுக்கு மன்னனாக வேண்டும் என்று நாடே விரும்பிய போது, அரியாசணத்தில் அமர உரிமையும், விருப்பமும் உள்ள தன் சிறிய தகப்பன் உத்தமசோழனே அடுத்து அரசனாக வேண்டும் என்று இராசராச சோழன் அரசுரிமையை விட்டுக்கொடுத்தான் என்பதும் வரலாறு.
                புராணங்கள் பற்றிக் கூறும்போது
             “நன்று புராணங்கள் செய்தார் -- அதில்
                               நல்ல கவிதை பலப்பல தந்தார்.
                              கவிதை மிகநல்ல தேனும் -- அக்
                              கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
                              புவிதனில் வாழ்நெறி காட்டி -- நன்மை
                             போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.”
என்பான் பாரதி!

        அது போலவே “பொன்னியின் செல்வன்” ஒரு நல்ல கதை மட்டுமே என்பதறிவோம்!



                                                ~~~~~~~~~~**********~~~~~~~~~~~
 







3. வாக்களிப்பது கடமை

      
தேர்தல் காலங்களில் வாக்குகளைச் சேகரிக்கும் விதமாக,         வாக்குகளைக்
குறிவைத்துதனிப்பட்ட அரசியல் கட்சிகள், அல்லது அரசியல் கட்சிசார்ந்த நண்பர்கள் தருவன எதையும் நான் என்றுமே ஏற்பதில்லை. வாங்கிக்கொள்ளும்படி என்னை எவரும் கட்டாயப்படுத்தினால்தேர்தலில் வாக்களிக்காது போவேன்’ என்றே அச்சுறுத்துவேன்.

     வாக்களிப்பது என்பது மக்களாட்சியில், இந்தியக் குடிமகனாகிய எனது அடிப்படைக் கடமை. என் கடமையை விலைபேசுவது என்னையே விற்கமுற்படுவதாகும் என்றே நான் கருதுகின்றேன், சுயமரியாதை இழந்தபின் வாழ்வேது!

   
குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைக்கான, அரிதாய் கிடைக்கும், உணவுப்பொருள்களைத் தவிர்த்த அரசு தரும் பிற இலவசங்களை நான் பெறுவதில்லை, புயல், மழை, வெள்ளம்,வறட்சி போன்ற காலங்களின் அரசு நிவாரணங்கள் (ரொக்கத்தொகை) உட்பட. அவற்றை எதிர்கொள்ளும் சக்தியும் வசதியும் எனக்கிருக்கின்றது என்பதால், இல்லாதோருக்குக் கொடுங்கள் என்று!

      இயல்பான நிலையில், இலவசங்கள் அற்றுப்போக, மக்களிடம் சுயமரியாதை உணர்வு தோன்ற வேண்டும். சுய மரியாதையைப் பேணும்போது மக்கள் நினைப்பது என்றும் கைகூடும்!

                                                      ~~~~~~~~~****~~~~~~~~~~
 








                                                 2.இளைப்பாற்றும் படிக்கட்டு.

  
   நண்பர்களோடு அலவலாவுவதே ஒரு அலாதி..அதுவும் பழங்கதைகளைப் பேசும்போது ஒரு தனி சுகம்!

      முன்னேறிச்செல்லும்  வாழ்க்கையின் அடுத்தடுத்த படிகள் இவற்றிலிருந்து நம்மை நீண்ட தூரம் இட்டுச்சென்றுவிடுகிறது...அவ்வப்போது ஏதோ ஒரு படியில் உட்கார்ந்து இளைப்பாறும்போது, கடந்து வந்த படிகளை மனதில் எண்ணி அசைபோடுவது என்பது சில்லென்ற ஒரு சுகம் தரும்!

            இவ்வித அனுபவம் நண்பர்கள் அனேகருக்கு இருந்திருக்கும்.... இருந்தாலும்  சொல்லத்தெரியாது..  ஒருவர் சொல்லும்போது அதை அனுபவிக்கும் பலரில் நானும் ஒருவன்….

          …இப்படி என் வாழ்வில் ஒரு முறை ...ஹாஸ்டல் வாழ்க்கையில்...

    ..காலையில் மெஸ்சில் சாப்பிட்டுவிட்டு மரத்தடியில் நானும் நண்பர் மயில்வாகனன் (தற்சமயம் எங்கிருக்கின்றார் எனத்தெரியவில்லை..சென்னையில்?) மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.

      இறுதி ஆண்டின் கடைசீ செமஸ்டர் என்ற மனதைரியத்தில் வகுப்புக்கு செல்லாமல் பேச ஆரம்பித்தோம். கடைசீயாய் சாப்பிட்ட எதிர் wing  நண்பர் அருண் (தற்போது ஹோசுரில் இருப்பதாய் நினைவு)  "ஹாய்..என்னங்கப்பா..க்ளாஸ் கட்டா" ன்னு கேலியாய் கேட்டுவிட்டு போனவருக்கு ஆமாம் என்று சொல்லிவிட்டு வகுப்புத் தோழனின் காதல் தோல்வி பற்றிப் பேச ஆரம்பித்து….ஆசிரியர்களின் டம்பம் பற்றி பேசி...ஆங்கிலம் வராததால் அவஸ்தைப்படும் நண்பன் ஆறுமுகம் வரை (இவர் பின்னர் டுட்டோரியல் காலேஜ்ஜில் வகுப்பு எடுத்ததாய் கேள்வி) பேசியபோது மதிய உணவுவேளை வந்தது..

      போய்
சாப்பிட்டுவிட்டு வந்து....மீண்டும் பேச்சு....எடுக்கத்தெரியாமல் எடுத்து சாகடிக்கும் திரை இயக்குனர்களின்  திறமையை அலசியபோது.."என்னப்பா.. சாப்ட்டாவது வந்து பேசுங்களேன்.." என்ற அருணுக்கு "எப்பியோ சாப்டாச்சுன்னு" சொல்லிட்டு, கரடி, ஆடு, மாடு, பாம்பு இதெல்லாம் வச்சு படமெடுக்கறதைப் பேசி.....நகைச்சுவையின் நயம் பேசி..நாயகிகளின் நடிப்பு பேசி....நான் எடுத்தால் எப்படி எடுப்பேன், அதில் வசனகர்த்தா கண்டிப்பா நம்ம ஆறுமுகம் தான், அப்பதான் படத்துக்கு ஒரு டப்பிங் பட எஃபெக்ட் இருக்கும், வசூல் கையை கடிக்காது என்றபோது "காப்பி ரெடி" ங்கற மாதிரி மெஸ்சில் சினிமா பாட்டு போட்டாங்க..

             போய் சாப்பிட்டு வந்து உட்கார்ந்தா... "எந்திரிங்கடா.. அவனவன் எப்படி அரியரை க்ளியர் பண்றதுன்னு கவலையா இருக்கானுவோ ..நீங்க என்னென்னா வெறுப்பேத்ரமாதிரி.. தின்னு  தின்னுட்டு நாள்முச்சூறும்  உக்காந்து கதையா பேசுறீங்க நீங்க" ன்னு அந்த ஹஸ்டல் பிளாக்கின்  இரண்டு  விங் நண்பர்களும் அருணின் தலைமையில் ஒன்றுகூடி எங்களை ஓட ஓட விரட்டியடிக்க...

          பின்னர்தான் தெரிந்தது...அந்த அருண்தான் ரூம் ரூமாய் போய் சொல்லி எல்லோரையும் திரட்டி வந்தான்னு.....

    மறக்கக்கூடாதென்று அதே இடத்தில் இருவரும் உட்கார்ந்து படம் எடுத்துக்கொண்டோம்.. ஹாஸ்டல் வாழ்வின் கடைசீ நாளன்று….கேமிரா க்ளிக் வேறு யாரு..? ..அருண் தான் ....

   இன்றும்….பார்க்கும்போதெல்லாம் அந்தப்புகைப்படம் முகத்தில் சிரிப்பையும் மனதில் மகிழ்ச்சியையும் கொண்டுவருகின்றது..!


                      ~~~~~~~~~~~~*****~~~~~~~~~~~~~~~










                        1.வெகுளி தரும் வெகுமதி
                        ~~~~~~~~~********~~~~~~~~~~
        இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என எல்லாக் காலங்களிலும் வெகுளித்தனம் வேதனையையே அளிக்கின்றது!

     நகைச்சுவை உணர்வுடன் பதிவுகள் இடும் நண்பர் ஒருவருக்கு திடீரென்று ஒரு இடர்பாடு ஏற்படவே, அதையும் வெகுளியாய் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் அவர்.

           விளைவு… அவரது வேதனை இன்னும் அதிகமாயிற்று.

          இடம், பொருள், ஏவல் என்பனவற்றை சற்றும் கருத்தில் கொள்ளாத அவரது நண்பர்கள் பலர், அந்நண்பருக்கு வந்த இடரிலிருந்து நல்லபடியாய் வெளிவரும் ஆலோசனைகளைக் கூற முன்வராது…....கேலியானக் கருத்துக்களைக்கூறி, கேலிச்சொற்களால் குத்திக்கீறி, ரணப்படுத்தியதைப் பார்க்கையில் மனம் வேதனையடைந்தது!

         நண்பர், சிரிக்கச்
சிரிக்க செய்திகள் போடுபவர். அச்சிரிப்பு வெடிகளை ரசித்தே பழக்கமாகிவிட்டதால் ஏற்பட்ட வினை!

        
நகைச்சுவையாய் பதிவிடுபவர்களுக்கும் துன்பங்கள் வரும் என்பதை உணர மறுக்கும் சிலர்..இருபாலர் நட்பில் கிண்டலும் கேளியுமாய் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடைய பலர்.. என்று இக்காலச்சூழல்  இருப்பது "இடுக்கண் களைவது"  நட்பின் பண்பு என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்னமும் பலர் பெறவேயில்லை என்பதையே காட்டுகின்றது. இதைப் பார்க்கும்போதுதான் மனம் இன்னும் அதிக வேதனையடைகின்றது!

         "
பக்கத்திருப்பவர் துன்பம்தனைப் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி " என்றான் பாரதி அன்று!
          
        இன்றோ
..அத்துன்பத்தை உன்னிப்பாய்ப் பார்த்து, ஆராய்ந்து... பின் படமும் எடுத்துப்போட்டு சிலாகிக்கும் பண்புதான் மண்டிக்கிடகின்றது..

          மரபுகளையும் மாண்புகளையும் இழக்கத் துணிகின்றதோ மானுடம்?


No comments:

Post a Comment