Friday 17 August 2012

சோழ மன்னர்கள் Later Chola Kings-X, Rajaraja Chozhan I (Arunmozhivarman).

                             (சோழ மன்னர்கள் -15,16,17,18,19,20)
பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி!
முதலாம் இராசராச சோழன் கி.பி.985-1014.
        சோழரது இராச்சியத்தின் வளர்ச்சிக்கு முதற்காரணமாய் திகழ்ந்தது சோழர் குடியில் தோன்றிய அரசர்களின் ஆற்றலேயாகும். அத்தகைய ஆற்றலமைந்த சோழ மன்னர்களுள் தலைசிறந்தவனாய் விளங்கியது முதலாம் இராசராச சோழன் என்பதில் ஐயமில்லை. 

     இவ்வேந்தன் சுந்தரசோழன் எனும் இரண்டாம் பராந்தகனுக்கு அவனது பட்டத்தரசியாகிய வானவன்மாதேவியின்பால் பிறந்த அரும்புதல்வன் ஆவான்.
 பிறந்தநாள்.
 ~~~~~~~~~~~~
       இம்மன்னன் ஆவணி மாதம் சதய நாளில் பிறந்தவன் என்பது ஒருசிலரது கருத்து.
       ஆனால், சில குறிப்புகள் இவன் ஐப்பசித்திங்கள் சதயநாளில் பிறந்தவன் என்பதையே தெளிவுபடுத்துகின்றன.
       இவ்வேந்தன் தஞ்சையில் எழுப்பதும், தற்போது ‘பெரியகோயில்’ என்றழைக்கப்படும், இராசராசேச்சுரத்திலும், திருவையாற்றில் கட்டிய உலோகமாதேவீச்சுரத்திலும் திங்கள்தோறும் சதயநாளில் சிறப்பாக விழாநடைபெறுவதற்கு நிவந்தங்கள் விடப்பட்டிருப்பதாலும், கலிங்கத்துப்பரணி இவனைச் “சதய நாள் விழா உதியர் மண்டலந்தன்னில் வைத்தவன்”  எனப் புகழ்ந்து பாடுவதாலும் இவன் சதய நாளில் பிறந்தவன் என்பதை நன்கறியமுடிகின்றது.
       ஆயினும், தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளதும், புதன்ஸ்தலம் என்று அறியப்படுவதுமான “திருவெண்காடு” எனும் ஊரில் உள்ள கோயிலில் ‘ஆண்டுதோரும் ஐப்பசி மாதத்தில் ஏழுநாட்கள் சதய விழா நடைபெற்றதென்று’ அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுவதாலும், இவ்வேந்தன் மலையாள தேசத்தில் வள்ளுவ நாட்டில் முட்டம் எனும் ஊருக்கு மும்முடி சோழநல்லூர் எனப் பெயரிட்டு அதனை அந்நாட்டின் திருநதிக்கரையிலுள்ள கோயிலுக்கு இறையீலியாக அளித்துத் தான்பிறந்த ஐப்பசித்திங்கள் சதயநாளில் விழாநடத்துமாறு ஏற்பாடு செய்துள்ளமை பற்றிய குறிப்பை (Travancore Archaeological Series, Vol.1.) யைம் பார்க்கின் இம்மன்னன் ஐப்பசித்திங்கள் சதயநாளில் பிறந்தவன் என்பதையே உறுதிப்படுதுகின்றது.
அருண்மொழிவர்மன் இராசராசன் ஆனது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
        இவன் பிறந்தவுடன் நாகர்குல மகளிர் தம் கணவர்க்கு இனி நிலப்பொறை குறைந்துவிடும் என உவகை மிகுதியால் நடித்தனர் என்றும் இவனது கைகளில் சங்கு சக்கரக் குறிகள் அமைந்திருந்தன எனவும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. இவற்றைக் கூர்ந்துபார்க்கின் இவன் பேரரசனாவதற்குறிய இலக்கணங்கள் அமைந்த உடலமைப்பு உடையவனாய் இளமையில் திகழ்ந்திருத்தல் வேண்டுமென்பதை அறியமுடிகின்றது.
        இவனுக்கு பெற்றோர் இட்டபெயர் அருண்மொழிவர்மன்  என்பதாகும். இவ்வேந்தனின் ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதல் இவனுக்கு இராசராசன் என்னும் பெயரே வழங்கி வந்ததைக் கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது.
        இவ்வேந்தனின் நான்காம் ஆண்டில் (தற்போது காஞ்சிபுரம் மாட்டத்தில் உள்ள) மதுராந்தகத்தில் வரையப்பெற்றுள்ள, கல்வெட்டொன்று இம்மன்னனைக் ‘காந்தளூர்ச்சாலை கல மறுத்தருளிய கோ இராசகேசரிவர்மன்’ என்று கூறுகின்றது. ஆகவே அவ்வாண்டிற்கு முன்னரே காந்தளூர்ப் போர் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.
          சேரனையும் அவனுக்கு உதவி புரிந்த பாண்டியனையும் போரில் இம்மன்னன் புறங்கண்டு வாகைசூடியது காந்தளூர்ப் போர் ஆகும். அப்போரின் வெற்றியின் பயனாக இவன் அவ்வேந்தர்களின் இருமுடிகளையும் கைப்பற்றிக்கொண்டு “மும்முடி சோழன்” எனும் சிறப்புப் பெயரும் பெற்றான்.
        எனவே, அப்போரானது இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டாகிய கி.பி.988-ல் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அந்நாள் முதல் அரசர்க்கரசன் என்று பொருள்படும் “ இராசராசன் ” என்னும் சிறப்பு பெயரும் இவ்வேந்தனுக்கு உரியதாயிற்று. பின்னர் இப்பெயர் இவனுக்குரிய இயற்பெயராகவே வழங்கிவந்தது எனலாம்.
       ஆகவே, கி.பி. 988 முதல் இவனது வாழ்நாள் முழுதும் இராசராசன் என்றே வழங்கப்பெற்றனன், பின்னர் வரலாற்றிலும், இது நாள்வரையும் அவ்வாறே அறியப்படுகின்றான்.
     ஆராய்ச்சியாளர்கள் சிலர், கி.பி 1004 –ம் ஆண்டில் இம்மன்னன் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பலவகை பணிகள் புரிந்தமைகாரணமாய் தில்லைவாழ் அந்தணர்கள் இவனுக்கு இராசராசன் எனும் பட்டம் வழங்கிப் பராட்டினர் என்றும் அதுமுதல்தான் இவன் இராசராசன் என வழங்கப்பெற்றதாகவும் கூறுவர்.
     தில்லையம்பதிக்கு இவ்வேந்தன் திருப்பணி செய்ததற்குறிய சான்றுகள் கல்வெட்டுக்களில் எங்கும் காணப்படவில்லை. அன்றியும் இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டாகிய கி.பி.988-ஆம் ஆண்டிலேயே இவனுக்கு இராசராசன் எனும் பெயர் வழங்கியது என்பது திருச்செங்காட்டங்குடி, திருமால்புரம் என்னும் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது.
      மேலும், இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் திருவேதிகுடி, திருவிசலூர் என்னும் ஊர்களிலும், இவனது ஆட்சியின் ஆறாம் ஆண்டில் திருச்சோற்றுத்துறையிலும் வரையப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் இவனை இராசராசன் என்றே கூறுகின்றன. இவற்றை ஆராயும்போது இவ்வேந்தன் தான் அடைந்த வெற்றி காரணமாய் கி.பி. 988 ஆம் ஆண்டிலேயே “இராசராசன்” எனும் பெயரை எய்தினான் என்பது நன்கு புலப்படும். ஆகையால், “கி.பி 1004 –ம் ஆண்டில் இம்மன்னன் இராசராசன் எனும் பட்டம் பெற்றான்” எனும் அவ்வாராச்சியாளர்களின் கருத்து சிறிதும் பொருந்தாதிருக்கின்றன என்பதையும் அறியலாம்.

         தனது சிறிய தந்தை உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தே இளவரசு பட்டம் சூட்டப்பெற்ற அருண்மொழிவர்மன், உத்தமசோழன் இறந்தபின்னர் கி.பி.985-ஆம் ஆண்டில் சோழ சாம்ராச்சியத்தின் மன்னனாய் முடி சூட்டப்பெற்றான்.  

          பிற்காலச் சோழமன்னர்கள் ஒருவர் பின்னொருவராய் மாறி மாறிப் புனைந்துகொண்ட இராசகேசரி, பரகேசரி என்னும் பட்டங்களுள் இம்மன்னன் இராசகேசரி எனும் பட்டம் பூண்டு ஆட்சி செய்யத்தொடங்கினான்.

           பிற்காலச் சோழர்குல முதல்வனாகிய விசயாலய சோழனால்  அடிகோலப்பட்ட சோழ இராச்சியம் இராசராசனின் ஆட்சியில்தான் உயர்நிலை எய்திற்று.

        இம்மன்னன் இயற்கையிலேயே ஒப்பற்ற ஆற்றலும் வீரமும் நுண்ணறிவும் படைத்தவனாய் இருந்ததோடு சற்றேறக் குறைய முப்பது ஆண்டுகள் வரையில் ஆட்சி புரியுமாறு நீண்ட ஆயுளை இவன் பெற்றிருந்தமையும் சோழ இராச்சியம் இம்மன்னனது காலத்தில் எத்திசையும் பரவிப் பெருகுவதற்குக் காரணமாயிருந்தது எனலாம்.

          இராசராசனின் புதல்வன் இராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் சோழ இராச்சியம் மிகப் பெருகிக் கடல் கடந்தும் பரவியிருந்ததானாலும் அதற்கு அடிகோலி வைத்தவன்  இராசராச சோழனே ஆவான்.

      அறிவும், அன்பும் நிறைந்த அரசியல் அதிகாரிகளையும் வீரஞ்செறிந்த படைத்தலைவர்களையும் இராசராசன் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆட்சி நடத்தியமையே அவன் எச்செயலையும் எளிதில் நிறவேற்றுவதற்கு ஏதுவாக இருந்தது எனலாம்.

       இராசராசனை இளமையில் வளர்த்தவர்கள் கன்டராதித்த சோழனின் மனைவியாகிய செம்பியன்மாதேவியும் மற்றும் இவனது தமக்கை குந்தவை பிராட்டியும் ஆவர்.

            முற்காலத்தில், பாண்டிய மன்னர்களும் பல்லவ மன்னர்களும் பிறருக்கு இறையீலியாக நிலங்கள் வழங்கும்போது அவ்வறச்செயல்களைச் செப்பேடுகளில் எழுதுவித்து உரியவருக்கு அளிப்பது வழி வழியாய் கடைபிடித்து வந்த வழக்கமாகும்.

       அவர்கள் அங்ஙனம் செய்யும்போது அச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாற்றை முதலில் எழுதுவித்து, பின்பு தாம் புரிந்த அறச்செயல்களையும் குறிப்பிட்டுவந்தனர் என்பதை அவர்களின் ஆட்சிக்காலங்களில் வெளியிடப்பெற்ற செப்பேடுகளால் நன்கறியலாம்.

          சோழ மன்னர்களில் இரசராசசோழனின் தந்தையாகிய இரண்டாம் பராந்தக சோழனும் முதன்முறையாய் அம்முறையைப் பின்பற்றிய செய்தி அவனது அன்பில் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது.

           தனது ஆட்சிக்காலத்தில் நடந்த வரலாற்று உண்மைகளை நன்கு விளக்கும் மெய்கீர்த்திகளை இனிய தமிழ்மொழியில் அகவற்பாவில் அமைத்துத் தன் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை முதன்முதல் மேற்கொண்ட பெருவேந்தன் இராசராசசோழனே ஆவான்.

        இவனுக்குப்பிறகு இவன் வழி வந்த சோழவேந்தரும் பிறமன்னர்களும் அச்செயலைப்போற்றி தாமும் மேற்கொள்வராயினர். எனவே, அரசர்கள் தம் மெய்கீர்த்திகளைக் கல்வெட்டுகளில் எழுதும் வழக்கம் முதன் முதலில் இராசராசன் காலத்தில்தான் உண்டாயிற்று என்பதும் அதற்கு முன்னர் அதுபோன்று இல்லை என்பதையும் அறியலாம்.
      
           மெய்கீர்த்திகள் கூறுவன எல்லாம் வெறுங்கற்பனைச் செய்திகள் அல்ல. அவை அவ்வேந்தர்களின் ஆட்சிக்காலங்களில் நிகழ்ந்த உண்மைச் செய்திகளையே உணர்த்துகின்றன. ஒவ்வொரு வேந்தனின் மெய்கீர்த்தியும் வெவ்வேறு மங்கல மொழியில் தொடங்கப்பெறுவதால் மெய்கீர்த்தியின் தொடக்கத்திலுள்ள தொடர்மொழிகளாகிய அவற்றைக் கண்ட மாத்திரத்திலேயே அக்கல்வெட்டு எவ்வேந்தனுடைய ஆட்சி காலத்தில் வரையப்பட்டது என்பதை ஐயமின்றிக் கூறிடலாம்.

            
முதலாம் இராசராசனுடைய மெய்கீர்த்தி “திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்" என்று தொடங்குகின்றது. “திருமகள் போல” எனத்தொடங்கும்   முதலாம்     இராசராசனது மெய்கீர்த்தியானது அவனது ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய கி.பி.993 முதல்தான் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. இம் மெய் கீர்த்தியின் துணைகொண்டு இவனது ஆட்சிகாலத்தில் நடைபெற்ற போர் நிகழ்ச்சிகளையும் இவனது வெற்றிச்சிறப்பையும் அறியலாம்.

           இவன் தனது ஆட்சியின் நான்காம் ஆண்டு தொடக்கத்திலேயே  “ காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளிய கோ இராசகேசரிவர்மன் “ என்று தன்னைக் கூறிக்கொள்வதோடு தன் மெய்கீர்த்தியிலும் அச் செயலையே முதலில் குறிப்பிட்டுள்ளான். ஆகவே இவன் கி.பி.988-ஆம் ஆண்டில் காந்தளுர்ச்சாலையில் போர் நிகழ்த்தி வெற்றி கண்டிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். இவன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முதற்போர் அதுவேயாகும்.

1.காந்தளூர்ச் சாலைப் போர்:-

        காந்தளூர்ச் சாலை என்பது இந்நாளில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் ஒருபகுதியாய் உள்ளது.

             அந்நாளில்,
காந்தளூர்ச் சாலை, சேர மன்னரின் ஆளுகையில் இருந்த ஒன்றாகும். அதனை வலியசாலை என்றும் அழைப்பர். அவ்வூர் ஒரு கடற்கரைப்பட்டினம். “சேரலன் வேலைகெழு காந்தளூர்ச்சாலை” என்ற கல்வெட்டுத்தொடரும் அதை உறுதிப்படுத்தும்.

         இவ்விடத்தில் சாலை என்று குறிப்பிடப்படுவது போக்குவரத்துச் சாலையல்ல. கோவில்களுடன் தொடர்புடைய கல்விச்சாலையைக்  குறிப்பதாகும் ( குருகுலம் போன்றது) . 

        அங்கு சேரமன்னனோடு இராசராசன் போர்புரியக் காரணம் துள்ளியமாய்க் புலப்படவில்லையானாலும் ஒட்டக்கூத்தரின் உலாக்களிலிருந்து அறிய முடிகின்றது.
        
        இராசராசன் காலத்தில் வாழ்ந்த சேரர்குல மன்னன் பாஸ்கர ரவிவர்மன் என்பவன் ஆவான். இம்மன்னன் கி.பி. 978 முதல் கி.பி 1036 வரையில் அந்நாட்டில் அரசாண்டிருப்பதால் இராசராசன் காலம் முழுமையும் அவன் இருந்தான் என்பதில் ஐய்யமில்லை.

        இராசராச சோழனுக்கும் பாஸ்கர ரவிவர்மனுக்கும் இடையே பகைமை உண்டாகிப்போர் நடைபெறக்காரணம், இராசராச சோழன் சேரநாட்டிற்கு அனுப்பிய தூதுவனை சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மன் அவமதித்து இழிவாக நடத்தி உதகையில் சிறைவைத்தனன் என்பதே ஆகும். இதை ஒட்டக்கூத்தரின் பாடல்களிலிருந்து அறியமுடிகின்றது.

       தூதர்களை அவமதிப்பதும் அவர்களை சிறயிலிடுவதும் அரசர்களுக்கு அடாத செயல்களாகும். அன்றியும், அச்செயல்கள் அரசநீதிக்கு மாறுபட்டனவாகும். இக்கொடுஞ்செயலை உணர்ந்த இராசராச சோழன் பெரும்படையைத் திரட்டிக்கொண்டு சேரநாட்டிற்கு செல்வானாயினன் . அவ்வாறு செல்கையில், சேரமன்னனுக்கு சிறந்த நண்பனான பாண்டியன் அமரபுயங்கன் என்பான் படையுடன் வந்து இராசராச சோழனை எதிர்கொள்ள அப்போழுது நிகழ்ந்த போரில் இராசராச சோழன் பாண்டியனைப் புறங்கண்டு தன் படையுடன் சேரநாட்டை அடைந்தான்.

       கடற்கரைப்பட்டினமாகிய காந்தளூர்ச் சாலையில் சேர மன்னனுக்கும் இராசராச சோழனுக்கும் பெரும் போர் நடைபெற்றது.

       அப்போரில் சேரமன்னனுடைய கடற்படைகள் அழிந்துபோயின. பின்னர்  இராசராச சோழன் தன் தூதுவன் சிறையிடப்பெற்றிருந்த உதகைக்குப் படையுடன் சென்றான்.
      
       உதகை என்பது நாகர்கோயிலுக்கு வடமேற்கே கன்யாகுமரி, கல்குளம் வட்டத்தில் உள்ள ஊராகும். அவ்வூர் அக்காலத்தில் மாபெரும் மதில்கள் சூழ்ந்ததாய் கோட்டைக்கொத்தளங்கள் மாளிகைகள் கொண்டதாய் இருந்தது.

        அந்நகருக்க்குப் படையுடன் சென்ற இராசராசன் அங்கிருந்த சேரர்படையை வென்று கோட்டையையும் மாளிகைகளையும் தகர்த்து அங்கு சிறை வைக்கப்பெற்றிருந்த தன் தூதுவனையும் விடுவித்தான். பின்னர் தென்புறத்தே இருந்த விழிஞ்சியம் என்னுமிடத்திலும் சேரருடன் கடும்போர் நிகழ்ந்தது. அப்போரிலும் சேரர் படை தோல்வியுற்று புறங்காட்டி ஓடவே இராசராசன் பெருவெற்றியெய்தி அந்நாட்டையும் கைப்பற்றினான்.
      
        அவ்வாறு வெற்றியடைந்த காலத்தே இவனது பிறந்த நாளும் வரவே அதனை ஆண்டுதோரும் அச்சேர நாட்டில் கொண்டாடும் வண்ணம் தக்க ஏற்பாடுகளைச் செய்தான் என்பதை முன்னரே அறிந்தோம்.
   
       கேரள நாட்டின் வரலாற்றைத் திரட்டிய சரித்திர ஆசிரியர்களும் ஆராச்சியாளர்களும் இக்காந்தளூர்ச் சாலைப் போரின் காரணத்தை கூறுவதை நோக்கின் இக்காந்தளூர்ச் சாலைப் போருக்கு இருபெரும் இராச்சியத்தினருக்கிடையே பல ஆண்டுகளாய் புகைந்துவந்த நெருப்பே காரணம் என்பதை அறியலாம்.

       பிற்காலச் சோழர்குலந் தோன்றக் காரணமான விசயாலய சோழன் மற்றும் அவனது புதல்வன் முதலாம் ஆதித்த சோழன் ஆகியோர் காலம் வரை சேரமன்னர்கள் சோழரோடு தோழமையாய் இருந்ததை அறியமுடிகின்றது.

       பின்னர், முதலாம் பராந்தகன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து அதனை ஆண்டுவந்த கொங்கு சேரர்களை வென்றதால் அவர்களின் உறவின் முறையினராகிய சேரமன்னர்களின் மனவருத்தத்தை சம்பாதிக்க நேர்ந்ததோடு அதன்பின்னர் ஏற்பட்ட சோழ சாம்ராச்சியத்தின்   அதிதீத வளர்ச்சி சேரமன்னர்களைத் தம் இராச்சியத்தை தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபடவைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
 
     அதன்பொருட்டுச் சேரமன்னர்கள், சோழர் படையெடுப்பால் தோல்விகண்ட பாண்டிநாட்டு அரச வம்சத்தினருக்கு புகலிடமும் தோழமையும் அளித்தது சோழசாம்ராச்சியத்தினரின் விரோதத்தினை வளர்த்தது.   இதுவும் காந்தளூர்ச் சாலைப் போருக்கு ஒரு காரணியாய் அமைந்தது என்பதில் அய்யமில்லை.

    கி.பி.988-89 ல் இக்காந்தளூர்ச் சாலைப் போரினில் ஈடுபட்டு வெற்றிகண்டதன் வாயிலாக ஆரம்பித்த சேரர் சோழர்களுக்கிடையேயான போர்கள்  கி.பி.1102 வரையில் ஏறக்குறய 113 ஆண்டுகள் நீடித்ததைப் பார்க்கையில் அதனைத் துவக்கிவைத்த பெருமை இராசராசனையே சேரும்.

     முந்தய கேரள வரலாறு குறித்து எழுதிய வரலாற்றாசிரியர்கள் சேர சோழரது இப்போர்களைக் குறிப்பிடும்போது “புகழ்பெற்ற  நூற்றாண்டுப் போர்கள்” என்றே குறிப்பிடுகின்றனர்.




பாண்டியனோடு போர்:-

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~      
     திருவாலங்காட்டுச் செப்பேடுகள்
  மன்னன்  இராசராசன் தனது  திக்குவிசயத்தை தென் திசையிலிருந்து தொடங்கினான் என்றும் அப்போது பாண்டியன் அமர புயங்கன் முதலில் தாக்கப்பட்டான் என்றும் அவனை வெற்றி கொண்டபின் அந்நாடு இராசராசனால் கைப்பற்றப்பட்டது என்றும் கூறுகின்றன.


      இராசராசன் சேரநாட்டின்மீது படையெடுத்துச் சென்றபோது அவனை இடையில் தடுத்துப் போர்புரிந்தவன் பாண்டியன்
  அமர புயங்கன் அதனாலேயே அவனை வென்று அவன் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டான் என்பதை இதனால் அறியமுடிகின்றது.      


     இராசராசனின் கல்வெட்டுக்கள் எல்லாம் “செழியரைத் தேசுகொள் கோவிராச கேசரிவர்மன்” என்பதால் இவன் பாண்டிய மன்னர்களை வென்று முற்றும் அடக்கியமை புலப்படுகின்றது. செழியர் என பன்மையில் குறிப்பிடப்படுவதால் ஒன்றிர்க்கு மேற்பட்ட பாண்டிய மன்னர்களை இவன் வென்றிருத்தல் வேண்டும் என்பதையும் உணரமுடிகின்றது.



    அன்றியும், தஞ்சை இராசராசேச்சுரத்தில் (பெரிய கோவிலில்) கல்வெட்டுக்கள் இம்மன்னனை “மலைநாட்டுச் சேரமானையும் பாண்டியர்களையும் எறிந்த” என்பதால் இராசராசன் வாழ்ந்த காலத்தில் பாண்டியர் சிலர் இருந்தனர் அவர்கள் அனைவரையும் இவன் வென்று அடக்கிவிட்டனன் என்பதும் புலப்படுகின்றது.

      திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் கூறப்பட்ட பாண்டியன் அமர புயங்கன் என்பவன் அந்நாட்களில் இருந்த பாண்டியர்களுக்குத் தலைவனாய் இருந்திருக்கவேண்டும்.

   இராசராசனுக்குப் ‘பாண்டிய குலசனி’ என்ற சிறப்புப்பெயர் இருப்பதாலும் பாண்டி மண்டலம் ‘இராசராச மண்டலம்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டிருப்பதாலும் இவ்வேந்தனின் கல்வெட்டுக்கள் அவனது ஆட்சியின் எட்டாம் ஆண்டு துவங்கி பாண்டி நாட்டுப்பகுதியில் காணப்படுவதாலும் போர் நிகழ்வுக்குப்பின் அந்நாடு இராசராசனது ஆட்சிக்கு உட்பட்டுவிட்டது என்பதை அறியலாம்.
 
        இராசராசன் தனது  திக்குவிசயத்தை  தொடங்கும்முன் தனது தூதுவனை அவமதித்து சிறையிலடைத்தமை குறித்து சேரநாட்டின் மீது படையெடுத்துச்செல்வது இன்றியமையாததாயிற்று. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுவதிலிருந்து காந்தளூர்போருக்கும் முன்னர் பாண்டியன் அமரபுயங்கனுடன் நடந்ததே    இராசராசனின் முதற் போராகும் என்பதை அறியமுடிகின்றது.

கொல்லம் வென்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
      இராசராசன், பின்னர், இரண்டாம் முறையாய் சேரநாட்டின் எஞ்சிய பகுதியாகிய கொல்லத்தினைத் தாக்கி அதனையும் அதனைச் சார்ந்த கொடுங்கோளூரையும் வென்று தன்னடிப்படுத்தினான். இதனால் “கீர்த்தி பராக்கிரமன்” என்னும் சிறப்புப் பெயரும் பெற்றான்.

குடமலை நாட்டை வென்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      பிறகு, இராசராச சோழனது படை குடமலை நாட்டினைத் தாக்கிற்று. குடமலை நாடென்பது இப்போது குடகு என்று அழைக்கப்படும் பகுதியாகும். அக்காலத்தில் அதனை “கொங்காள்வார்” மரபில் வந்த ஒருவன் அரசாட்சி செய்துவந்தான். ‘பணசோகே’ என்ற இடத்தில் நடைபெற்றப் போரில் அவன் சோழர்படையிடம் தோல்விகண்டு ஓடிப்போனான். அப்போரில் வீரம்காட்டி போர்புரிந்த மனிஜா என்பவன் செய்கையைப் பாராட்டி இராசராசன் ஆணையின்படி அவனுக்கு “ஷத்ரிய சிகாமணி கொங்காள்வான்” என்ற பட்டம் வழங்கப்பெற்றதோடு மாளவ்வி என்னும் ஊரும் அளிக்கப்பட்டது. மனிஜாவின் மரபினர் சுமார் நூறாண்டுகள் வரையில் சோழர்களுக்கு அடங்கிய குறுநில மன்னராய்க் “கொங்காள்வார்” என்னும் பட்டத்துடன் குடகு நாட்டில் அரசாண்டு வந்தனர். 

கங்க நாட்டை வென்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
       அதன்பின்னர் குடகு நாட்டின் பக்கத்திலிருந்த கங்கபாடி, இராசராசன் படைகைளால் தாக்கப்பட்டது. கங்கம்பாடி என்பது மைசூர்
இராச்சியத்தின் தென்பகுதியையும் தமிழகத்தின் முந்தய ஒறுங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் வடபகுதியையும் தன்னகத்தே கொண்ட கங்கநாடாகும்.

நுளாம்பாடி நாட்டை வென்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~    
       கங்க நாட்டின் மீதான வெற்றிக்குப்பின் இராசராசனுடைய படை நுளம்பாடியை தாக்கி வென்றது. நுளாம்பாடி என்பது மைசூர் இராச்சியத்தின் கீழ்ப்பகுதியையும் தற்போதைய பல்லாரி மாவட்டத்தினையும் தன்பால் கொண்டதாகும். பல்லவரின் ஒரு கிளையினரான நுளம்பர்கள் அதனை ஆண்டுவந்தனர்.

தடிகைபாடி நாட்டை வென்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
       கங்கபாடியையும் நுளம்பாடியையும் வெற்றி கொண்டு எழுச்சியுற்ற இராசராசனது சோழர் படை, அப்படையெடுப்பின் இறுதியில், மைசூர் மாவட்டத்தின் எஞ்சிய பகுதியைத் தன்னகத்தே கொண்ட தடிகைபாடியையும் வெற்றிகொண்டது. இராஷ்ட்ரகூடர்கள் வலி குன்றியிருந்தமையால் கங்கரையும் நுளம்பரையும் ஆதரித்து உதவிபுரிய எவரும் இல்லாத காரணத்தால் கங்கபாடி, நுளம்பாடி, தடிகைபாடி ஆகிய மூன்று நாடுகளையும் இராசராசன் எளிதில் கைப்பற்றிக்கொண்டன்.

      மைசூர் இராச்சியத்தில் கி.பி.991-ல் வரையப்பெற்ற சோழநாராயணன் கல்வெட்டொன்று உள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட சோழநாராயணன் என்பவன் இராசராச சோழனே ஆவான் என்பது வரலாற்று ஆராச்சியாளர்களின் கருத்து. அது உண்மையாயின் அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாம் இராசராசனின் ஆட்சியின் ஆறாம் ஆண்டாகிய கி.பி. 991 க்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டும்.
 



முதலாம் இராசேந்திரன்


         “மும்முடி சோழன்பெற்றகளிறு மலையம், கொண்கானம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு சேரனையும் நாட்டைவிட்டு ஓடும்படி செய்தது” என்று மைசூர் இராச்சியத்தில் உள்ள இராசராசனது எட்டாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று கூறுவதிலிருந்து மேற்கூறிய போர்களில் சோழர் படையைத் தலைமையேற்றுச் சென்றவன் இராசராசனின் புதல்வன் முதலாம் இராசேந்திரன் ஆவான் என்பதை அறியமுடிகின்றது.


        அவ்வரசகுமாரன் இளமையில் கங்க மண்டலத்திற்கும் வேங்கி மண்டலத்திற்கும் மாதண்ட நாயகனாய் இருந்தான். அன்றியும், தந்தை இராசராசனால் அளிக்கப்பட்ட “பஞ்சவன் மாராயன்” என்ற பட்டமும் பெற்றிருந்தான்.

 ஈழம் வென்றது:-

        இராசராச சோழனால் வென்று கைக்கொள்ளப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பது இம்மன்னனின் “திருமகள் போல” எனத்தொடங்கும் மெய்கீர்த்தியினால் அறியப்படுகின்றது.
       ஈழ மண்டலத்தை அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்தவன் கி.பி.981-ல் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான்.

      இம்மன்னன் இராசராச சோழனின் பகைவராயிருந்த பாண்டியர்க்கும், சேரருக்கும் உற்ற நண்பனாயிருந்து உதவிகளைச் செய்துவந்தான். அதனாலேயே ஈழத்தின் மீது போர் தொடுக்கவேண்டிய நிலைமை இராசராச சோழனுக்கு ஏற்பட்டது எனலாம்.

       ஈழத்தின் மீதான சோழர் படையெழுச்சியிலும் அதற்குத் தலைமை வகித்துச்சென்றவன் முதலாம் இராசேந்திரச் சோழனே ஆவான்.


         கி.பி.991 –ல் ஈழமண்டலத்தில் படைவீரர்களால் குழப்பம் உண்டாகவே, அரசனாயிருந்த ஐந்தாம் மகிந்தன் அதனை அடக்கும் ஆற்றலின்றி அம்மண்டலத்துள் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டுக்கு ஓடிவிட்டான். எனவே சோழ நாட்டுப்படை அம்மண்டலத்தின் வட பகுதியை எளிதில் கைப்பற்றிகொண்டது.
கைப்பற்றப்பட்ட அந்நிலப்பரப்பு “மும்முடி சோழ மண்டலம்“ எனப் பெயர் சூட்டப்பெற்று இராசராசனது ஆட்சிக்கு உள்ளாக்கப்பட்டது.

      “முரட்டொழில் சிங்களர் ஈழமண்டலம்” என்றும்  “எண்டிசை புகழ்தர ஈழமண்டலம்” என்றும் இராசராசனது மெய்கீர்த்திகள் கூறுவதைக் கூர்ந்து பார்க்கையில் ஈழநாட்டுப் போரில், வலிமை மிக்க சிங்கள் வீரர்கள், பேராற்றால் காட்டி போர்புரிந்தனர் என்பதும் அத்தகையானோரைச் சோழர்படை வென்று அவர்களது நாட்டைக் கைப்பற்றியமை இராசராச சோழனுக்கு யாண்டும் பெரும் புகழை உண்டுபண்ணியது என்பதும் நன்கு புலப்படுகின்றது.

       பண்டைக்கால முதல் ஈழமண்டலத்தின் தலைநகரமாக விளங்கிய அனுராதபுரம் சோழர் படையால் அழிக்கப்பட்டமையால் அம்மண்டலத்தின் நடுவே அமைந்துள்ள “பொலன்னருவ” என்னும் நகரம் “சனநாதமங்கலம்” என்று பெயரிடப்பட்டு சோழரது ஆட்சிக்குத் தலைநகராக வைத்துக்கொள்ளப்பட்டது.

        இதற்கு முன்னர் ஈழ மண்டலத்தின் மீது படையெடுத்துச்சென்ற தமிழ் மன்னர்கள் அம்மண்டலத்தின் வட பகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால், இராசராச சோழன், அம்மண்டலம் முழுவதையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்படுத்தவேண்டும் என்று எண்ணியபடியால் பழைய தலை நகரை விடுத்து நாட்டின் நடுவிலுள்ள பொலன்னருவாவை தன் தலை நகரமாய் அமைத்துக்கொண்டான் என்பதை இதன் மூலம் அறியலாம்.

        பிற்கலத்தில் தோன்றிய சிங்கள மன்னனான முதலாம் விஜயவாகு என்பவன் அனுராதபுரத்தில் முடி சூட்டிக்கொண்டாலும் அவன் தலை நகராய்க்கொண்டு அரசாண்ட நகரம் பொலன்னருவா என்பதே ஆகும்.

        ஈழ மண்டலம் இராசராசசோழனது ஆட்சிக்குட்பட்டிருந்தமையை அந்நாட்டில் காணப்படும் சான்றுகளிருந்தும் அறியலாம்.

     கொழும்பு மாநகரில் உள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பெற்றுள்ள கருங்கற்பாறையொன்றில் “சோழ மண்டலத்து ஷத்ரிய சிகாமணி வளநாட்டு வெளா நாட்டுச் சிறு கூற்ற நல்லூர்க்கிழவன் தாழி குமரன் ஈழமான மும்முடி சோழ மண்டலத்து மாதோட்டட்டமான இராசராசபுரத்து எடுப்பித்த ராசராச ஈஸ்வரத்து மகாதேவர்க்குச் சந்திராதித்தவல் நிற்க” என்று தொடங்கும் ஒரு கல்வெட்டுக் காணப்படுகின்றது.

       அக் கல்வெட்டால் சோணாட்டுத் தலைவன் ஒருவன் ஈழமண்டலத்தில் மாதோட்ட நகரத்தில் தன் நாட்டு வேந்தன் பெயரால் இராசராசேச்சுவரம் என்னும் சிவாலயம் ஒன்று எடுப்பித்து, அதற்கு அர்த்தயாம வழிபாட்டிற்கும் வைகாசித் திருவிழாவிற்கும் நிவந்தமாக இறையீலி நிலம் அளித்த செய்தி புலனாகின்றது.



           அக்கல்வெட்டால் மாதோட்ட நகரம் இராசராசபுரம் என்னும் பெயரும் பெற்றிருந்ததை அறியமுடிகின்றது. பொலன்னருவாவில் சிவாலயம் ஒன்றை கற்றளியாக எடுப்பித்து வானவன் மாதேவீச்சுரம் என்னும் பெயருடன் விளங்கிவருதலால் அது இராசரான் தன் அன்னையின் பெயரில் எடுப்பித்திருத்தல்வேண்டும் என்பதையும் அறியமுடிகின்றது.

          ஈழமண்டலத்தில் காணப்படும் இராசராசன் காலத்துக் கல்வெட்டுக்களும் அதை உறுதி செய்கின்றன.

          இவ்வேந்தன் தஞ்சையில் கட்டிய பெரியகோயிலுக்கு ஈழமண்டலத்தில் உள்ள சில ஊர்களை நிவந்தமாக அளித்துள்ளனன் என்பது அக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.

மேலைச் சாளுக்கிய போர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
        மேலைச்சாளுக்கிய மன்னன் இரண்டாம் தைலபன் இறந்தபின் அவன் மகன் சத்தியாசிரயன் இரட்டப்பாடி ஏழரை இலக்கத்திற்கு அரசனானான். 

        மேலைச்சாளுக்கியரின் ஆட்சிகுட்பட்டிருந்த நுளம்பாடியை முன்னர் சோழர் படை வென்று ஆட்சிக்குட்படுத்தியதால் மேலைச்சாளுக்கியருக்கும் சோழருக்கும் பகை ஏற்பட்டு, இராசராச சோழன் காலத்தில், அந்நாடின்மீது இரசேந்திரன் தலைமையில் படையெடுப்பு நிகழ்ந்து சோழர் படை வெற்றிபெற, இரட்டப்பாடி ஏழரை இலக்கம் இராசராசன் ஆட்சிக்குட்பட்டது.

        தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டொன்றில் “சத்தியாசிரயனை எறிந்து எழுந்தருளி வந்த ஶ்ரீபாத புஷ்பமான அட்டித்திருவடி தொழுந்தன” என்ற கல்வெட்டுத்தொடரும் சத்தியாசிரயன், “கடல்போன்ற இராசராசனது பெரும்படையைக் கண்டு அஞ்சிப் போர்க்கலத்தை விட்டு ஓடிவிட்டான்” என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுவதிலிருந்தும் இது உறுதியாகின்றது.

சீட்புலிநாடு மற்றும் பாகி நாட்டை வென்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
           சீட்புலி நாடு, பாகி  நாடென்பது நெல்லூர் மாவட்டத்தின் வடபகுதியில் இருந்தவையாகும். முதலாம் பராந்தான் காலத்தில் சோழர் வசம் வந்த அவற்றைப் பின்னர் இராட்டிரகூடர்களின் படையெடுப்பால் சோழராச்சியம் இழந்த பகுதிகளான அவற்றை மீண்டும் கைப்பற்றும்படி கி.பி.991 ஆம் ஆண்டில் தஞ்சை கூற்றத்துக் குருகாடியுடையான் பரமன் மழபாடியானான் மும்முடிசோழன் என்பவனது தலைமையில் ஒரு பெரும் படையை இரசாரசன் அனுப்பினான். அப்படையெடுப்பின் பயனாய் சீட்புலி நாடும், பாகி  நாடும்  இராசரசனது ஆட்சிக்குள்ளாயின. இதனையும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.

வேங்கி நாட்டை வென்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~        
          சிட்புலி நாட்டை வென்றதால், சோழர்படை, பின்னர் வேங்கிநாட்டை கைப்பற்ற ஏதுவாயிற்று.
        
          வேங்கி நாடென்பது கிருஷ்ணா, கோதாவரி ஆகிய இரு பேராறுகளுக்கும் இடையில் முற்காலத்தில் அமைந்திருந்த ஒரு நாடாகும். அந்நாட்டை மேலைச்சாளுக்கிய தாயத்தினரான கீழைச்சாளுக்கியர் அரசாண்டுவந்தனர்.

          கி.பி. பத்தாம் நூற்றண்டின் நடுவில் கீழைச்சாளுக்கிய அரசகுமாரர்களுக்குள் மனவேறுபாடு ஏற்பட்டு மூத்தோன் வழியினனுக்கும் இளையோன் வழியினனுக்கும் ஆட்சியை கைப்பற்ற போர்கள் நிகழ்ந்தமையால் கி.பி.945 முதல் வேங்கி நாட்டில் குழப்பமும் கலகமும் நிகழ்ந்துகொண்டேயிருந்தது.

         தெலுங்கச் சோழனாகிய ஜடா சோடவீமன் என்பான் வேங்கியைக் கைப்பற்றிக்கொள்ள, வேங்கி மன்னனின் புதல்வர்கள் இராசராச சோழன்பால் அடைக்கலம் புகுந்து தெலுங்கு வீமன் கவர்ந்த தம்நாட்டை மீட்க முயன்றுகொண்டிருந்தனர்.

          கி.பி.999-ஆம் ஆண்டில் இராசராசன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்துச் சென்று வீமனை போரில் வென்று சக்திவர்மனை வேங்கி நாட்டின் வெந்தனாக முடிசூட்டினான்.

             எனினும் கி.பி.1001 –ல் கலிங்கப்படையின் உதவியோடு வீமன் சக்திவர்மனை வென்று, அவனை காஞ்சி வரையிலும் துரத்தி வந்தான். அந்நிலையில் இரசராசன் அவனைப் போரிர் கொன்று வேங்கி நாட்டை மீட்டு சக்திவர்மனுக்கு திரும்ப அளித்தான்.


       அதன் பின்னரே அந்நாடு கிழைச்சாளுக்கியர் ஆட்சியில் நிலைபெருவதாயிற்று. அன்றியும், சக்திவர்மனுக்குப்பிறகு அவனின் தம்பி விமலாதித்தன் வேங்கிநாட்டிற்கு அரசனாக முடிசூட்டப்பெற வேண்டுமென்ற ஏற்பாடு இராசராசனால் செய்யப்பட்டது. உடனே அவ் விமலாத்தித்தன் இளவரசுப் பட்டமும் கட்டப்பெற்றனன்.

         இராசராச சோழன் அத்துனை ஆதரவையும் அன்பையும் அவ் விமலாத்தித்தன்பாற் காட்டியமைக்குக் காரணம் தன் புதல்வியாகிய குந்தவைப் பிராட்டியை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்திருந்தமையேயாம்!

        சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்து கி.பி.1011 -ஆம் ஆண்டில் இறந்தான். அவனுக்குபின் விமலாதித்தன் முடிசூட்டப்பெற்று அந்நாட்டின் மன்னனாய் அரசாளுவனாயினன்.

        இராசராசன் வேங்கி நாட்டினை வென்றாலும் அதைத் தன் ஆட்சிக்குட்படுத்தாது தன் பாதுகாப்பிற்கும் ஆதரவிற்கும் உட்பட்ட இராச்சியமாகவே வேங்கி நாட்டை மதித்து நடத்தி வந்தனன் என்பது தெளிவாகின்றது. அங்ஙனம் இருக்கக்காரணம் இவ்விரு அரச குடும்பத்தினர்க்கும் மணவினையால் ஏற்பட்ட தொடர்பே ஆகும். அதுவே இவர்களைப் பிணித்து இத்தகைய நிலையில் அமைதியுடம் வாழ்ந்துகொண்டிருக்கச் செய்தது என்பது திண்ணம்!

கலிங்க நாட்டை வென்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
        கலிங்க நாடு என்பது கோதாவரியாற்றுக்கும் மகாநதிக்குமிடையில் கீழ்க் கடலைச் சார்ந்திருந்த ஒரு நிலப்பரப்பாகும். அந்நாட்டின் மகேந்திரகிரியில் தமிழ் மொழியிலும் வடமொழியிலும் வரையப்பெற்ற கல்வெட்டுக்கள் இரண்டு உள்ளன. அவை இரசேந்திர சோழன், விமலாதித்தன் எனும் குலூத வேந்தன் ஒருவனை போரில் வென்று அம்மலையில் வெற்றித்தூண் ஒன்று நிறுவினன் என்று கூறுகின்றன. அது இராசேந்திரனின் மெய்கீர்த்தியில் காணப்படாமல் அவன் பட்டத்திற்கு வரும் முன் இராசரச சோழன் காலத்தில் நிகழ்ந்த போர் என்பதை அறியமுடிகின்றது. அக்காரணத்தாலேயே கலிங்க வெற்றி இராசராசனது மெய்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் வென்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    “கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம்” என்னும் அகத்தியச் சூத்திரத்தினாலும், “குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும்“ என்னும் தொல்காப்பியச் சொல்லாதிகார உரைப்பகுதியினாலும் பண்டைக்காலத்தே குமரியாற்றிற்குத் தெற்கே கடலில் பழந்தீவுகள் இருந்தமையை அறியமுடிகின்றது.

     சேர நாட்டிற்கு தென்மேற்கே இருந்த இப்பழந்தீவுகளிலிருந்த மக்களால் சேர நாட்டு மக்களுக்கு இன்னல்கள் நேர, அந்நாடு இராசராசனது ஆட்சிக்குட்பட்டிருந்தமையால், அவர்களது துன்பங்களை ஒழிப்பது இவ்வேந்தனது கடமைகளுள் ஒன்றானதால் இராசராசன் அப்பழந்தீவுகள் மீது படையெடுத்து சென்று அவற்றைக் கைப்பற்ற வேண்டியதாயிற்று.

        இராசராசனது போர்ச் செயல்களுள் இறுதியில் நிகழ்ந்தது முந்நீர் பழந்தீவு பன்னீராயிரத்தை கைப்பற்றும்பொருட்டு நடந்த  படையெடுப்பேயாகும்.

        ஈழம் வென்றதிலிருந்தும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தை வென்றதிலிருந்தும் இராசராச சோழனிடம் சிறந்த, வலிமையான கப்பற்படை இருந்ததை நன்கு அறியமுடிகின்றது.


        இராசராச சோழனின் பட்டத்து மகாராணி உலோகமாதேவி என்பவளாவாள். இம்மன்னனின் மற்ற மனைவிமார்கள் சோழமாதேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்ஜவன்மாதேவி, அபிமானவல்லி, இலாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வில்லவன்மாதேவி, வானவன்மாதேவி என்போராவர். வானவன் மாதேவிக்குத் திரிபுவனமாதேவி என்னும் மற்றொரு பெயரும் உண்டு. இவ்வரசியே இராசேந்திரனைப் மகனாகப் பெற்ற பெருமையுடைவளாவாள்.


         பஞ்ஜவன்மாதேவி என்பாள் பழுவூர் குறுநிலமன்னனாகிய பழுவேட்டரையரின் மகள் ஆவாள்.

          இராசராச சோழனுக்கு இராசேந்திரன் என்ற ஒரே புதல்வனும் இரு புதல்வியரும் பிறந்தனர்.  மூத்த மகள் மாதேவடிகள், இளையவள் குந்தவை ஆவாள். இக்குந்தவையே கீழச்சாளுக்கிய மன்னனாகிய விமலாத்தித்தனை மணந்தது. இவர்களுக்கு பிறந்த புதல்வனே முதலாம் குலோத்துங்கனின் தந்தையாகிய இராசாராச நரேந்திரன் ஆவான்.

         இராசராச சோழனின் தமக்கைக்கும் இளைய புதல்விக்கும் குந்தவை என்ற பெயர் இருந்ததால் வேறுபாடு உணர்த்தும் பொருட்டு இம்ன்னனது தமக்கையைப் பெரிய குந்தவை என்று வழங்கிவந்துள்ளனர்.

          இராசராச சோழன், பேராற்றலும் பெரு வீரமும் படைத்த தனது புதல்வன் இராசேந்திரனுக்குக் கி.பி.1012 -ஆம் ஆண்டில் இளவரசுபட்டம் கட்டி அரசாங்க அலுவல்களில் கலந்துகொண்டு பல துறைகளிலும் பயிற்சி பெற்று வருமாறு செய்தனன்.

இராசராச சோழனுக்கு திறைசெலுத்திவந்த குறுநிலமன்னர்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1.பழுவேட்டரையர்.
           இவர்கள் சேரர் மரபினருள் ஒரு கிளையினர். முதலாம் பராந்தகன் பழுவேடரையர் மகளை மணந்தான் என்பதும் அவ்விருவருக்கும் பிறந்தவனே இராசராசனது பாட்டனாகிய அரிஞ்சய சோழன் என்பதும் அன்பில் செப்பாடுகளால் அறியமுடிகின்றது.


2. கொங்கு நாட்டின் மன்னன்.
  
       கொங்கு நாட்டின் கொல்லிமழவன் ஒற்றியூரன் பிருதி கண்டவர்மன் என்பான் இராசராசனுக்கு கப்பஞ் செலுத்திவந்தான் என்பது திருச்செங்கோட்டுச் செப்பேடுகளால் அறியமுடிகின்றது

3. திருவல்ல மன்னன்.

     திருவல்லத்தை ஆண்ட திருவையன் சங்கரத்தேவன் என்பவன் இராசராசனுக்கு கப்பஞ் செலுத்திக் கொண்டு அப்பகுதியை ஆண்டவந்த குறுநிலமன்னன் ஆவான்.

4.கோனாட்டின் (கொடும்பாளூர்) மன்னன்.
  
    கோனாட்டின் தலைநகரான கொடும்பாளூரிலிருந்து அட்சிசெய்த வேளான் சுந்தரசோழன் என்பான் இராசராசனுக்கு கப்பம் செலுத்திவந்த குறுநில மன்னன் ஆவான்.

5.இங்கல்லூர் நாட்டு மன்னன்
 
    தற்காலம், கடப்பை மாவட்டத்தில் உள்ள  இங்கல்லூர் எனும் நாட்டை ஆண்ட நன்ன மரையன் என்னுங் குறுநிலமன்னன் இராசராசனுக்கு கப்பம் செலுத்திவந்த மற்றுமொரு குறுநிலமன்னன் ஆவான்.

6. ரெட்டிபாளைய மன்னன்.

     தற்காலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையத்தை ஆண்டுவந்த விஷ்ணுதேவனாகிய மும்முடி வைதும்ப மகாராசன் என்னும் சிற்றரசன் இராசராசனுக்குக்கீழ்ப்பட்ட குறுநிலமன்னன் என்பது அன்னோரின் கல்வெடால் அறியமுடிகின்றது.

7.இலாடப் பேரரையன்.

    வடஆர்காடு, பஞ்சபாண்டவர் மலையில் காணப்படும் கல்வெட்டொன்று வீரசோழன் இலாடப்பேரரையன் என்பவன் அதனை சூழ்ந்த பகுதியை இராசராசன் காலத்தில் அவனுக்கு திறை செலுத்தி ஆண்டுவந்த குறுநிலமன்னன் என்று கூறுகின்றது, இவர்கள் மரபினள்தான் இராசராசனது மனைவியருள் ஒருத்தியான இலாடமாதேவி ஆவாள்.

8. மறவன் நரசிம்ம வர்மன்.

   மறவன் நரசிம்ம வர்மனாகிய இராசராச வாணகோவரையன் என்பவன் வாணகப்பாடி நாட்டினை ஆண்டுவந்த இராசராச சோழனுக்கு கப்பஞ்செலுத்திய குறுநிலமன்னன் என்பதை தென்னார்காடு , ஜம்பை என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டால் அறியமுடிகின்றது.

சித்திரைத் திருநாள் விழா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
       முந்நாள் தஞ்சை மாவட்டம், இந்நாள் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் திருவீழிமிழலை எனும் ஊரில் உள்ள திருவீழிநாதர் கோயிலில் இரண்டாம் சுற்றின் தென்புறத் தூணில் காணப்படும் கல்வெட்டில் முதலாம் இராசராசனின் 24 –ஆம் ஆட்சியாண்டில், சித்திரைத் திருநாள் விழா ஏழு நாட்களுக்கு அரிசி வழங்கப்பட்டதைப் பற்றிக் குறிபிடுவதிலிருந்து அக்காலத்தில் சித்திரைத் திருநாள் விழா ஏழு நாட்கள் கொண்டாடப்பட்டதை அறியமுடிகின்றது. 




நில அளவையும் வரி விதிப்பும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
         முதலாம் இராசராச சோழனது ஆட்சியில் நிகழ்ந்த மிகவும் குறிப்படத்தக்க நிகழ்சிகளில் ஒன்று முதன் முதலாய் சோழராச்சியம் முழுவதையும் அளந்தமையாகும்.
     
          ஓர் அரசன் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் எல்லாவற்றையும் அளந்து நிலங்களின் பரப்பை உள்ளாவாறு உணர்ந்தாலன்றி நிலவரியை ஒழுங்குபடுத்தி குடிகளிடமிருந்து வாங்குவது இயலாததாகும்.

         ஆதலால், இராசராசன் தனது ஆட்சியின் 16-ஆம் ஆண்டாகிய 1001 –ல் தன் ஆட்சியின் கீழ் இருந்த சோழ ராச்சியம் முழுவதையும் அளக்குமாறு ஆணையிட்டனன். அவ்வேலையை அவனது பெரும்படைத்தளபதிகளில் ஒருவனான, குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் தொடங்கப்பெற்று இரண்டாடுகளில் நிறைவு பெற்றது.

          நிலம் அளந்த கோல் பதினாறு சாண் நீளமுடையது. அதனை அந்நாளில் “உலகளந்த கோல்” என்றழைத்தனர்.

நில வரி
~~~~~~~~
          முதலாம் இராசராசனது ஆட்சிக் காலத்தில் நிலங்களை 1) நீர்நிலம், 2) கொல்லை, 3) நத்தம் , 4) காடு என்று நான்கு வகையாய் வகுத்துள்ளனர்.

           நீர்நிலம் மற்றும் கொல்லை என்பன முறையே நன்செய் மற்றும் புன்செய் நிலங்களாகும், நத்தம் என்பது மக்கள் வீடு கட்டிக் குடியிருந்துகொண்டிருக்கும் மேட்டு நிலப் பரப்பாகும்.

          வரி விதிக்கப்படாது ஒதுக்கப்பட்ட நிலங்களைக் குறித்து ஆராய்ந்தால் அம்மன்னனது காலத்தில் விளை நிலங்களுக்கு மாத்திரம் வரி விதிக்கப்பட்டன என்பதும் ஏனைய நிலங்களுக்கு வரி விதிக்கப்படவில்லை என்பதையும் அறியமுடிகின்றது.

நீர் வரி
~~~~~~~
       திருவாருர் மாவட்டம், திருவீழிமிழலை எனும் ஊரில் உள்ள திருவீழிநாதர் கோயில் கோபுர வாயில் வடக்குத் தூணில் காணப்படும் முதலாம் இராசராசன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில், ஒரு குறிப்பிட்ட “குளத்திலிருந்து நீர் எடுக்கும்போது தோட்டப்பாழுக்கு இறை கட்டப்பெறவேண்டும்” என்ற செய்தி கூறப்பட்டிருப்பதிலிருந்து நீராளுமைக்கான வரி ஒன்றை அம்மன்னன் காலத்தில் விதித்திருந்ததை அறியமுடிகின்றது.

இராச்சியம் முழுவதும் பல உட்பிரிவுகளாய் பிரிக்கப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

        முதலாம் இராசராச சோழனது ஆட்சியில் நிகழ்ந்த மற்றுமொரு அரிய செயல், தனது ஆட்சி திறம்பட நடக்கவேண்டி அம்மன்னன் சோழ இராச்சியத்தை பல மண்டலங்களாகப் பிரித்து ஆண்டதாகும்.

        மண்டலங்கள் ஒவ்வொன்றும் பல வளநாடுகளாய் பிரிக்கப்பட்டு, வளநாடுகள் ஒவ்வொன்றும் பல நாடுகளாய் பிரிக்கப்பட்டு,.
ஒருசில வளநாடுகள் நகரங்களாகவும் கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டு, நாடுகள் ஒவ்வொன்றும் பல கிராமங்களாகப் பிரிக்கப்பட்டு, கிராமங்கள் ஒவ்வொன்றும் பல சிற்றூர்களாகவும் பிரிக்கப்பட்டன.

        மண்டலம் என்பது தற்போதைய மாநிலம் போன்றதாகும், நாடு என்பது தற்போதைய மாவட்டம் போன்றதாகும், வளநாடு என்பது தற்போதைய வட்டம் போன்றதாகும்.

நாணயங்கள்
~~~~~~~~~~~~~~
         முதலாம் இராசராச சோழன் காலத்தில் இராசராசன் மாடை, இராசராசன் காசு, அக்கம் என்ற நாணயங்கள் வழங்கி வந்தமையை கல்வெட்டுக்களின் மூலம் அறியமுடிகின்றது.

மாடை
~~~~~~~
            இரண்டு குன்றிமணிகள் கொண்டது ஒரு மாஞ்சாடி எனவும் இருபது மாஞ்சாடிகள் கொண்டது ஒரு கழஞ்சு எனவும் அறியப்படுகின்றது. மாடை என்பது நாற்பது குன்றிமணி எடையுள்ள பொன் நாணயம் ஆகும்.

காசு
~~~~
        “மாடை ஒன்றுக்கு காசு இரண்டாக” என்ற கல்வெட்டுத் தொடரிலிருந்து இரண்டு காசு கொண்டது ஒரு மாடை என்று அறியப்படுவதால் இருபது குன்றிமணி எடையுள்ள பொன் நாணயம் ஒரு காசு ஆகும்.

அக்கம்
~~~~~~~
       தஞ்சை இராசராசேச்சுரக் (பெரிய கோயில்) கல்வெட்டுக்களில் அக்கம் என்ற என்ற நாணயத்தின் பெயர் மிகுதியாய் காணப்படுகின்றது. அக்கோயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டின் மூலம் ஒரு அக்கம் 1 2/3  குன்றிமணி எடையுடைய சிறிய பொற்காசு என்பதை அறியமுடிகின்றது.



சீனா நாட்டு உறவு.
~~~~~~~~~~~~~~~~~~~~
          கி.பி. பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவில் கலகம் அடங்கி அமைதி நிலவியது. அந்நாடு வெளிநாடுகளோடு வாணிகத்தொடர்பு வைத்துக்கொள்ள ஏனைய நாடுகளுக்கும் தூதுக்குழுவை அனுப்பி வாணிபத்தைப் பெருக்க உறுதிமொழியும் அளித்தது.

        இதனையுணர்ந்த சோழ மன்னர்கள் தங்கள் தூதுவர்களைச் சீன நாட்டிற்கு அனுப்பினார்கள். அவ்வாறு அனுப்பியவர்களில் முதல் சோழ மன்னன் இராசராச சோழன் ஆவான்.

        மன்னன் இராசராச சோழனின் தூதுவினர் கி.பி. 1012-ஆம் ஆண்டில் சோழநாட்டிலிருந்து புறப்பட்டு கி.பி 1015 –ல் சீனதேசத்தை அடைந்தனர் எனத் தெரிகின்றது.


இராசராசேச்சுரம் (தஞ்சை பெரிய கோவில்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
       இம்மன்னன், தனது பெயராகிய இராசராசன் என்பது என்றும் நிலவவேண்டும் என்ற எண்ணத்தோடு தலைநகர் தஞ்சையில் மாபெரும் கோயில் ஒன்றை எழுப்பி அதற்கு “இராசராசேச்சுரம்” என்று பெயரிட்டு நாள் வழிபாட்டிற்கும், விழாக்களுக்கும் நிவந்தங்கள் வழங்கி சிறப்பித்துள்ளான்.

     அக்கோயில், பிற்கால சோழர் காலத்து சிற்பத் திறத்திற்கும், இராசராசனது பெருமைக்கும், புகழுக்கும், பக்திக்கும் ஒரு கலங்கரை விளக்கமாய் வானளாவ நின்று நிலவுவது யாவரும் அறிந்ததே.

     அக்கோயிலின் விமானத்தின் மேல் அமைக்கப்பெற்றுள்ள செப்புக்குடம் 3083 பலம் நிறையுடயது, அதன்மேல் போடப்பட்டுள்ள பொற்றகடு 2926 ½ கழஞ்சு கொண்டது என்பதும் ஆராய்ந்தறிந்த அறிஞர் கூற்றாகும்.

     அக்கோயிலின் திருப்பணி இராசராசனது ஆட்சியின் 19 –ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்று 23 –ஆம் ஆண்டில் பெரும்பாலும் நிறவடைந்து, 25 ஆம் ஆண்டில் அதாவது கி.பி. 1010 -ஆம் ஆண்டில் திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றிருத்தலை அறியமுடிகின்றது.

     அக்கோயிலின் முதற்கோபுர வாயில் “கேரளாந்தகன் வாயில்” எனவும், இரண்டாம் வாயிலாகிய திருமாளிகை வாயில் “இராசராசன் வாயில்” எனவும், அக்கோயிலின் விமானம் “தட்சிணமேரு” என்றும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

      கோயிலின் வெளிச்சுற்றிலுள்ள நந்தி பன்னிரெண்டு அடி உயரமும், பத்தொன்பதரை அடி நீளமும், எட்டேகாலடி அகலுமும் கொண்ட ஒரே கல்லில் அமைக்கப்படதாகும்.
     
        கோயிலின் திருச்சுற்றில் சண்டேசுவரர்க்கும் நந்திக்கும் இடங்கள் அமைக்கப்பட்டிருந்தனவேயன்றி வேறு தெய்வங்கட்கு இடமின்மையை அறியமுடிகின்றது.


பிற சமயங்களையும் ஆதரித்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இராசராசன் சிறந்த சிவபக்தானாய் விளங்கி “சிவபாதசேகரன்” எனும் சிறப்புப் பெயர் பெற்றிருந்தாலும் இவன் எல்லாச்சமயங்களையும் மதிக்கும் கருத்துடையவனாய் திகழ்ந்ததை இம்மன்னன் நாகப்பட்டினத்தில் கடாரத்து அரசன் சூளாமணிவர்மனால் கட்டத்தொடங்கப்பெற்று அவனது மகன் விஜயோத்துங்கவர்மனால் முடிக்கப்பெற்ற புத்த விகாரத்திற்கு இராஜராஜ பெரும்பள்ளி எனப் பெயரிட இசைவு தெரிவித்ததிலிருந்தும், அதற்கு நிவந்தமாக ஆனைமங்கலம் எனும் ஊரை பள்ளிச்சந்தமாய் அளித்ததிலிருந்தும் அறிய முடிகின்றது.

     இவன் எழுப்பிய பெரிய கோயிலில் புத்தபடிமங்கள் இருப்பதை இன்னமும் காணலாம்.

      பெங்களூர், மணலூரில் உள்ள சயங்கொண்ட சோழ விண்ணகரம் எனும் கோயிலை திருமாலுக்கு எழுப்பியதும் இவனது இச்சிறப்பை உறுதிப்படுத்தும்.

சிறப்புப் பெயர்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~
     அருன்மொழிவர்மன் எனும் இயற்பெயர் கொண்ட இம்மன்னன் பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கிய காரணத்தால் பல சிறப்புப்பெயர்களைக் கொண்டிருந்தான். அப்பெயர்கள்:  இராசராசன், ஷத்திரிய சிகாமணி, இராசேந்திர சிங்கன், உய்யக்கொண்டான், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன், நித்தவினோதன், இராசாசிரயன், சிவபாத சேகரன், சநநாதன், சிங்களாந்தகன், சயங்கொண்டசோழன், மும்முடிச்சோழன், இரவிகுல மாணிக்கம், நிகரிலிசோழன், சோழேந்திர சிங்கன், சோழமார்த்தாண்டன், இராசமார்த்தாண்டன், தெலுங்க குல காலன், கீர்த்தி பராக்கிரமன் என்பனவென்று கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகின்றது.

     முதலாம் இராசராச சோழன், இருபத்தொன்பது ஆண்டுகாலம்  ஆட்சிபுரிந்து கி.பி. 1014 இறந்தனன்.
 


(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)