சோழ மன்னர்கள் Later Chola Kings-IX, Uthama Chozhan.
(சோழ மன்னர்கள் -14.)
பல நாட்டு மன்னர்களைப் பற்றி
அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும்
வகையில் இம்முயற்சி !
உத்தம சோழன். ( கி.பி. 970 – 985 )
சோழ மன்னன் கண்டராதித்தனின் ஒரே புதல்வன்
உத்தமசோழன் ஆவான். கண்டராதித்தன் இறக்கும்போது இவன் சிறு பிள்ளையாய் இருந்தமையால்
இவனுக்கு பட்டம் சூட்டப்படாமல் கண்டராதித்தனின் தம்பி அரிஞ்சய சோழனுக்கு
முடிசூட்டப்பெற்று அரசாள, அம்மன்னனுக்குப் பிறகு, அரிஞ்சய சோழனின் மகன் சுந்தர
சோழன் ஆட்சிபுரிந்தான்.
சுந்தரசோழனுக்குப் பிறகு அவனது மகன் அருண்மொழித்தேவன்
ஆட்சியேற வேண்டுமென்று குடிமக்கள் பெரிதும் விரும்பினாலும், தனது சிறிய தந்தையுடைய
அரசாளும் உரிமையையும் விருப்பத்தையும் மதித்து அவனுக்கு சோழ ராச்சியத்தை அருண்மொழித்தேவன்
அளித்ததன் காரணமாய் உத்தமசோழன் அரியணையெறினான்.
இம்மன்னது முடிசூட்டுவிழா கி.பி. 969 –ன் இறுதியிலோ அல்லது 970 –ன்
தொடக்கத்திலோ நடைபெற்றிருத்தல் வேண்டும்.
உத்தம சோழன் பரகேசரி எனும் பட்டம் கொண்டு ஆட்சிபுரிந்தான்.
இம்மன்னது ஆட்சிக்கால கல்வெட்டுக்கள் திருமுல்லைவாயில், காஞ்சிபுரம், திருவொற்றியூர்,
திருவடந்தை, மீஞ்சூர், பழங்கோயில், திருமால்புரம், திருவதிகை வீரட்டானத்திலும்
காணப்படுகின்றமையால் அப்பகுதிகள் அடங்கிய திருமுனைப்பாடிநாடும் மற்றும்
தொண்டைநாடும் இவ்வேந்தன்
ஆட்சிக்குள்ளாகியிருந்தமையை அறியமுடிகின்றது.
இவ்வேந்தனின் காலத்து கல்வெட்டுக்கள் சோழ ராச்சியத்தில் மிகுதியாக
காணப்படுகின்றன. அவை இவ்வேந்தனும் இவனது தாய் செம்பியன்மாதேவியும் செய்த
அறச்செயல்களைக் கூறுவனவாயுள்ளன. அவற்றால் அக்காலத்தில் மக்களின் நிலை,
வழக்கவொழுக்கங்கள், பொருளாதாரம் பற்றியவை குறித்து நன்கறியலாம்.
உத்தமசோழன் ஆட்சியின் பதினாறாம் ஆண்டில்
ஏற்படுத்தப்பட்ட செப்பேடுகள் சென்னை
பொருட்காட்சிச்சாலையில் இருக்கின்றன. அதன்
மூலம் சோழரது ஆட்சிமுறையையும் அக்கால செய்திகளையும் அறிந்துகொள்ளலாம்.
அக்காலாத்தில் ( 10-ம் நூற்றாண்டின் ) தமிழ் எழுத்தின் வரிவடிவத்தினையும்
அறியலாம்.
இவ்வேந்தனுக்குப் பல மனைவிகள் இருந்தனர்
என்பதை செம்பியன் மாதேவி என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டுக்களால்
அறியமுடிகின்றது. அவர்களுள் ஐவர் பெயர் ஒரே கல்வெட்டில்
குறிக்கப்பெற்றிருக்கின்றன. அவர்கள், பட்டன் தானதுங்கி, மழபாடித்தென்னவன் மாதேவி,
வானவன் மாதேவி, கிழானடிகள் பழுவேட்டரையர் மகள் என்போர். இவ்வேந்தனின் பட்டத்தரிசியாக
விளங்கியவள் திருபுவனமாதேவியாவாள்.
இவ்வேந்தனின் புதல்வன் மதுராந்தக
கண்டராதித்த சோழன் ஆவான். இவ்வரசிளங்குமரன் ஐவரடங்கிய ஒரு குழுவுடன்
அறநிலையங்களின் கணக்குகளை ஆராய்ந்து வந்ததை கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது.
இவ்வரசிளங்குமரன், இராசராசோழனின்
ஆட்சியில், கோயில் மற்றும் பிற அறநிலையங்களும் நன்கு நடைபெறுமாறு கண்காணித்து
வந்ததையும் அறியமுடிகின்றது.
இவ்வேந்தனின் ஆட்சிக்காலத்தில் சுந்தரசோழனின்
மகனும் அருண்மொழிவர்மன் எனப் பெற்றோரால் பெயரிடப்பட்டு பின்னர் எத்திசையும் புகழ்பரப்பி இனிது
வாழ்ந்த முதலாம் இராசராசச்சோழன் இளவரசு
பட்டம் கட்டப்பெற்றான்.
நடுவில் புலியுருவம்
பொறிக்கப்பட்டதாயும் ஓரத்தில் உத்தம சோழன் என்று வடமொழியில்
வரையப்பெற்றதாயுமிருந்த ஒரு பொற்காசு உத்தமசோழன் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பெற்று
வழங்கி வந்தது என்று சர்.வால்டர் எலியட் என்னும் அறிஞர் தன்னுடைய “தென்னிந்திய
நாணயங்கள்“ என்ற நூலில் கூறியுள்ளார். இப்போது கிடைத்துள்ள சோழமன்னர் நாணயங்களில்
அதுவே பழமையானது என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
மக்கள் யாவரும் துன்பங்களின்றி இனிதே
வாழ்ந்து வருமாறு ஆட்சிசெய்து வந்த உத்தமசோழன் கி;பி.985 ஆம் ஆண்டில் இறந்தான்.
அம்மன்னனுக்குப்பின் முதலாம் இராசராசச்சோழன் சோழ இராச்சியத்தின் மன்னனாய் முடிசூட்டப்பெற்றான்.
(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)
No comments:
Post a Comment