Friday 13 July 2012

சோழ மன்னர்கள் Later Chola Kings - VIII, Paranthagan II ( also known as Sundhara Chozhan).


                                                (சோழ மன்னர்கள்-10.)
          பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி !

சுந்தர சோழன் எனும் இரண்டாம் பராந்தகன் (கி.பி.957- 970.)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 
      அரிஞ்சய சோழன் இறந்த பின்னர் வைதும்பராயனின் மகளான, அரசி கல்யாணியின்பாற் பிறந்த அரிஞ்சய சோழனின் மகன் (இரண்டாம்) பராந்தகன் கி.பி. 957 -ல் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாய் முடிசூட்டப்பெற்றான்.

      பெற்றோரால் பராந்தகன் எனும் பெயர் சூட்டப்பட்ட இம்மன்னன் பேரழகனாய் இருந்தமையால் பின்னர் ‘சுந்தர சோழன்’ என்ற பெயர் பெற்றான் என அன்பிற்செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

     இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழனை, கல்வெட்டுக்கள், ‘மதுரை கொண்ட கோ இராசகேசரிவர்மன்’ என்றும், “பாண்டியனை சுரம் இறக்கின (காட்டிர்க்குள் பதுங்கவைத்த) பெருமாள் ஶ்ரீ சுந்தரசோழத் தேவர்” என்றும் குறிப்பிடுவதால் தன் பாட்டனாகிய முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சிக்குட்பட்டிருந்து பின்னர் சோழ ராச்சியத்திலிருந்து நீங்கிய பாண்டி நாட்டை மீண்டும் கைப்பற்றும்பொருட்டு பாண்டியனோடு போர்புரிந்து வெற்றிபெற்றிருப்பதை அறிய முடிகின்றது.
   
    இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் ஆட்சிக்காலத்தில் மதுரையை ஆண்டுவந்த, இராசசிம்மபாண்டியனின் மகனாகிய வீரபாண்டியன் ஆட்சியின் ஆறாம் ஆண்டு கல்வெட்டுக்களில் “சோழன் தலை கொண்ட கோ வீரபாண்டியன்” எனப் பெருமையாகக் கூறப்பட்டுள்ளதால் கி.பி. 953 -ல் சோழருடன் நடந்த போரில் சோழன் ஒருவனைக் கொன்றிருத்தல் வேண்டும்.

   வீரபாண்டியனின் கல்வெட்டுக்களில் அச்சோழனின் பெயர்குறிப்பிடாமல் சோழன் என்று பொதுவாய்க் கூறப்பட்டுள்ளதால் அவனால் போரில் கொல்லப்பட்டவன் சோழர் குலத்தில் தோன்றிய ஓர் அரசகுமாரனாய் இருத்தல் வேண்டும்.

    தன் ஆட்சிக்கு முன்னர் சோழர் குல அரசகுமாரன் ஒருவனைக் பாண்டிமன்னன் கொன்றமையாலும், பாண்டி நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் சுந்தர சோழனின் உள்ளத்தில் பல காலமாய் இருந்ததாலும் பாண்டி நாட்டின் மேல் படையெடுத்துச்சென்றான் சுந்தர சோழன் எனும் இரண்டாம் பராந்தகன்.
     
     சுந்தர சோழனுக்கும் வீரபாண்டியனுக்குமிடையே பாண்டி நாட்டிலுள்ள சேவூரில் பெரும் போர் நிகழ்ந்தது. அப்போரில் சுந்தரசோழனே வெற்றிபெற்றான். தோல்வியுற்ற பாண்டி நாட்டு மன்னன் காட்டிற்குள் ஓடிப் புகுந்துகொண்டான்.
   
   சுந்தர சோழனின் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் இவனை ‘மதுரை கொண்ட கோ இராசகேசரிவர்மன்’ என்று கூறுவதால் அப்போர் கி.பி. 962 -ல் நடைபெற்றிருக்கவேண்டும் என்பதை அறியலாம்.

  அப்போர் பற்றிய செய்திகள் ஆனைமங்கலச் செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ளன. அப்போரில் வீரபாண்டியனுக்கு உதவிபுரியும் பொருட்டு சிங்கள நாட்டு மன்னன் நான்காம் மகிந்தன் பெரும்படையொன்றை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

     சிங்கள மன்னன் மகிந்தனின் செய்கையை உணர்ந்த சுந்தர சோழன். தன் படைத்தலைவனும் கொடும்பாளூர்க் குறுநில மன்னனுமாகிய பராந்தகன் சிறியவேளான் என்பவனைப் பெரும்படையுடன் சிங்கள நாட்டிற்கு அனுப்பினான்.

 
ஈழத்துப்போரில் சிறியவேளான் வீரமரணம் எய்தினான். இதனை ‘ஈழத்துப்பட்ட கொடும்பாளூர் வேளான் சிறியவேளான்’ எனும் கல்வெட்டுப்பகுதியால் அறியமுடிகின்றது.

     அப்போரில் சிங்களமன்னன் வெற்றி பெறவே, சோழமன்னன், சிங்கள மன்னனோடு உடன்படிக்கை செய்துகொண்டு நட்புரிமை பெற்றான் என்பதை அந்நாட்டு சரிதமாகிய மகாவம்சம் கூறுகின்றது.

   சுந்தர சோழன் எனும் இரண்டாம் பராந்தகனிடம் தோல்வியுற்று காட்டில் பதுங்கிய பாண்டி மன்னன் வீரபாண்டியன் மீண்டும் மதுரையிலிருந்துகொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினான். அதனால் இரண்டாம் பராந்தகச் சோழன் மீண்டும் பாண்டி நாட்டின் மேல் படையெடுக்க வேண்டியது அவசியமாயிற்று.
 
    அப் படையெடுப்பு கி.பி. 966 –ல் நிகழ்ந்தது. சோழரின் பெரும் படையில் பங்குபெற்றோர் கொடும்பாளூர் மன்னன் பூதி விக்கிரமகேசரி, தொண்டைநாட்டுச் சிற்றரசன் பார்த்திவேந்திர வர்மன். இவர்களோடு சோழப்படைக்கு தலைமையேற்றுச் சென்றவன் இரண்டாம் பராந்தகனின் புதல்வனாகிய ஆதித்த கரிகாலன் ஆவான்.
     அப்போரில் சோழர் படை பெரும் வெற்றிபெற பாண்டி மன்னன் போர்க்களத்தில் கொல்லப்பட்டான்.

      இருப்பினும், அதன்பின்னர் இரண்டாம் பராந்தகனின் கல்வெட்டுக்கள் பாண்டி நாடு முழுதும் காணப்படாமையால் அந்நாடு உடனே சோழர் ஆட்சிக்குட்படுத்தப்படவில்லை என்பதும் போரில் சுந்தர சோழன் வெற்றி பெற்றிருந்தானேயன்றிப் பாண்டி நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்யவில்லை என்பதும் புலப்படுகின்றது.

       சுந்தர சோழன் எனும் இரண்டாம் பராந்தகன் தன் தந்தையைப்போல வடக்கேயுள்ள திருமுப்பாடிநாட்டையும் தொண்டை நாட்டையும் கைப்பற்றிச் சோழரின் ஆட்சிக்குள் கொண்டுவரவேண்டுமென்ற நோக்கில் அந்நாடுகளிலிருந்த இராஷ்ட்டிரகூடர்களின் பிரதிநிதிகளோடு போர்புரிந்து வெற்றிபெற்றுள்ளான்.

      இம் மன்னனது ஆட்சியின்  ஐந்தாமாண்டு முதல் இவனது கல்வெட்டுக்கள் தென்னார்க்காடு,வடஆர்க்காடு, செங்கற்பட்டு பகுதிகளில் காணப்படுவதால் அவ்விரு நாடுகளையும் கைப்பற்றுவதற்காகச் செய்த முயற்சி சிறிது சிறிதாகச் சில ஆண்டுகளில் நிறைவேறியிருக்க வேண்டும்.
       இம்மன்னனுக்கு பராந்தகன்தேவியம்மன், வானவன்மாதேவி என்னும் இரு மனைவியர் இருந்தனர். அவர்களுள் பராந்தகன்தேவியம்மன் ஒரு சேரமன்னனின் மகளாவாள். மற்றொரு மனைவியான வானவன்மாதேவி மலையநாட்டுச் சிற்றரசன் மகளாவாள்.
         இவனுக்கு ஆதித்த கரிகாலன், அருண்மொழித்தேவன் என்ற இரு புதல்வர்களும் குந்தவை என்ற ஒரு புதல்வியும் இருந்தனர்.

       தன் இளம்வயதிலேயே பாண்டிய மன்னன் வீரபாண்டியனைப் போரில் கொன்று வீரனாய் விளங்கிய, தன் மூத்தபுதல்வன் ஆதித்த கரிகாலனுக்கு கி.பி.966-ல் இளவரசுப் பட்டம் கட்டினான்  சுந்தர சோழன்.
   
   மகள் குந்தவையை வல்லவரையன் வந்தியத்தேவனுக்கு மணஞ்செய்துகொடுத்தான். அவ்வரசகுமாரன் வேங்கி நாட்டு கீழைச் சாளுக்கியர் குலமரபினனாயிருந்தும் குந்தவையை மணந்தபின் சோழநாட்டிலேயே தங்கிவிட்டான் என்பது தெரிகின்றது.
      சுந்தர சோழனின் ஆட்சியில் மக்களில் எவரும் துன்பத்தால் ‘ஆ’ வென்று ஓலமிட்டதில்லை அதற்கு மாறாய், சிவனை வணங்கியதால் மக்கள் கூறும் ‘அர’ எனும் ஒலியே எங்கும் கேட்கப்பட்டதாய் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.
       வடஆர்க்காடு, பிரம்மதேசம் எனும் ஊரில் உள்ள சுந்தரசோழப் பேரேரி இரண்டாம் பராந்தகனால் அமைக்கப்பட்டதாகும்.

    மேலும், வீரசோழிய உரையில் உள்ள பாடல்களின் மூலம் இம்மன்னன் சைவ சமயத்தினனாயிருந்தும் பிற சமயங்களை வெறுத்து ஒதுக்காது ஆதரித்தான் என்பதும் புலனாகின்றது. தென்னாற்காடு, உலகபுரம் என்ற ஊரில் சுந்தரசோழப்பெரும்பள்ளி என்னும் புத்த கோயில் ஒன்று இம்மன்னனால் ஏற்படுத்தப்பட்டதை கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது.
  
       அவ்வீரசோழிய உரையில் “மேதகு நந்திபுரி மன்னர் சுந்தரச் சோழர்” என்றும் “பழையாறை நகர்ச் சுந்தரச் சோழர்” என்றும் காணப்படுவதால் இவன் பழையாறை நகரிலிருந்து ஆட்சி புரிந்திருத்தல் வேண்டுமென்று அறியமுடிகின்றது.

     அந்நகர் தற்போது கும்பகோணத்திற்குத் தென் மேற்கே பழையாறை என்ற பெயருடன் ஒரு சிற்றூராய் விளங்குகின்றது.

   அச்சிற்றூரையும் அதனைச் சுற்றியுள்ள முழையூர், பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றம், சோழமாளிகை, அரிச்சந்திரபுரம், ஆரியப்படையூர், பம்பைப் படையூர், புதுப்படையூர், மணப்படையூர், கோணப்பெருமாள் கோயில், திருமேற்றளி, தாராசுரம், நாதன் கோயில் என்று வழங்கும் நந்திபுரவிண்ணகரம் ஆகிய ஊர்களைத் தன்னுள் அடக்கிய பெரிய நகரமாய் அப்பழையாறை விளங்கியிருந்தது என்பதை தேவாரப் பதிகங்களாலும் அவ்விடங்களில் காணப்படும் கல்வெட்டுக்களாலும் அறியலாம்.

     மேலும் சேக்கிழார் “தேரின் மேவிய செழு மணி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை” என்று அதனைப் பெருநகராகவே கூறியிருப்பதும் அறியத்தக்கது.

     அம் மாநகர் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் பழையாறை நகர் எனவும் எட்டாம் நூற்றாண்டில் நந்திபுரம் எனவும் ஒன்பதாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டில் பழையாறை நந்திபுரம் எனவும் பதினொன்றாம் நூற்றாண்டில் முடிகொண்ட சோழபுரம் எனவும், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இராசராசபுரம் எனவும் அழைக்கப்பெற்றது என்பதை பண்டைத்தமிழ் நூல்களும் கல்வெட்டுக்களும் உணர்த்துகின்றன.

   அந்நகரில், அக்காலத்தில், சோழமன்னர்களின் அரண்மனை அமைந்திருந்த இடம் இக்காலத்தில் சோழமாளிகை என்னும் ஒரு தனியூராக உள்ளது. அவ்வரண்மனையைச் சுற்றியிருந்த நான்கு படையிடங்களும் இப்பொது நான்கு ஊர்களாக இருக்கின்றன.

      அந்நகரம் சுந்தர சோழன் எனும் இரண்டாம் பராந்தகனின் தலைநகரமாயிருந்ததோடு வேறு சில சோழவேந்தர்களுக்கு இரண்டாவது தலைநகரமாயும் விளங்கியுள்ளது.

     இவற்றையெல்லாம் பார்க்கையில் இம்மன்னன் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மக்களுக்குப் பல்வகை நலங்களும் புரிந்து புகழுடன் செங்கோல் செலுத்தினான் என்பதை அறிய முடிகின்றது.

இளவரசன் ஆதித்த கரிகாலன்
கொலையும், குற்றவாளிகளும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    இளைஞனாயிருந்தபோதே பாண்டி நாட்டு மன்னன் வீரபாண்டியனைப்போரில் கொன்று பாண்டி நாட்டின் மீதான படையெடுப்பு பெருவெற்றி அடையக் காரணமான தனது மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு கி.பி. 966-ல் இளவரசு பட்டங்கட்டினான் சுந்தர சோழன் எனும் இரண்டாம் பராந்தகன்.

    பெரும் வீரனான ஆதித்த கரிகாலன் கி.பி.969-ஆம் ஆண்டில் சோழநாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான். இத்துயர நிகழ்ச்சி சுந்தர சோழனைப் பெரிதும் மனமுடையச்செய்து இரண்டொரு மாதங்களில் இறக்கும்படி செய்தது.

      சிதம்பரத்தை அடுத்துள்ள காட்டுமன்னார்கோயில் உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டொன்று அவ்வரச குமாரனைக் கொன்றவர் எவர் என்பதையும் குற்றவாளிகளுக்கு அளித்த தண்டனை குறித்தும் தெளிவாக உணர்த்துகின்றது.  அக்கல்வெட்டானது அருண்மொழித்தேவன் காலத்திய கல்வெட்டாகும்.

     அக் கொடுஞ்செயலைத் துணிந்து செய்து முடித்தோர், சோமன், இரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரனான இருமுடிச்சோழ பிரமாதிராஜன், மலையனூரான் ஆன ரேவதாசக் கிரமவித்தன் என்போர் ஆகும்.

    இந்நால்வரும் உடன்பிறந்தோர் என்பதையும் அக் கல்வெட்டால் அறியமுடிகின்றது. இவர்களுள் இருவர் பஞ்சவன் பிரமாதிராஜன்,  இருமுடிச்சோழ பிரமாதிராஜன் எனும்  உயர்ந்த பட்டங்களை பெற்றவர்களாய் இருத்தலால் அவர்கள் இருவரும் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருந்த அந்தணர் ஆவர்.

     கண்டராதித்த சோழனின் மகனாகிய உத்தம சோழன், அதாவது,
சுந்தரசோழனின் பெரியதந்தையின் மகன், தான் அரியணையேறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து இளவரசன் ஆதித்த கரிகாலனைக் கொன்றிருக்கக்கூடும் என்பது ஒரு சிலரின் கருத்து. எனவே அதனை ஆராய்ந்து முடிவு காண்பது இன்றியமையாததாகின்றது.

      சுந்தர சோழன் எனும் இரண்டாம் பராந்தகனின் காலத்திற்குப்பின் அவனின் இரண்டாவது புதல்வனும் ஆதித்த கரிகாலனின் தம்பியுமான
அருண்மொழித்தேவன்தான் ( பிற்காலத்தில் எத்திசையும் புகழ்பரப்பி இனிது வாழ்ந்த முதலாம் இராசராசச்சோழன் ) அடுத்து ஆட்சிபுரிய வேண்டுமென்று சோழ குடிமக்கள் விரும்பிய செய்தியைத் திருவாலாங்காட்டுச் செப்பேடுகளால் அறியமுடிகின்றது.

   அதே செப்பேடுகளின் மூலம் தனது சிறிய தந்தையாகிய உத்தமசோழனுக்கு சோழநாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ளவரையில் தான் அதனை மனதால் கூட விரும்புவதில்லை எனத் தன் குடிமக்களிடம் கூறினான் என்ற செய்தியையும் அறியமுடிகின்றது.

      இதிலிருந்து உத்தமசோழனுக்கு சோழநாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமிருந்திருப்பதையும் அரியமுடிகின்றது.

      எனினும், உத்தம சோழனுக்கு
ஆதித்த கரிகாலன் கொலையான கொடுஞ்செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்த கரிகாலனின் தம்பியும் குடிமக்களால் அன்பு பாராட்டிப் போற்றப் பெற்றவனும், பெருவீரனுமான அருண்மொழித்தேவன் உடனே அரியணையைக் கைப்பற்றித் தானே ஆட்சி புரியத் தொடங்குவானேயன்றி அதனை உத்தமசோழன் பெற்று அரசாள உடன்பட்டுத் தான் ஒதுங்கிக் கொண்டிருக்கமாட்டான்.

      மேலும், “உத்தமசோழனுக்கு சோழநாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ளவரையில் தான் அதனை மனதால் கூட விரும்புவதில்லை” எனக்கூறியிருப்பதைப் பார்க்கும்போதும்,      அதுபோலவே, உத்தமசோழன் காலத்திலேயே அருண்மொழித்தேவன் இளவரசு பட்டம் கொண்டிருத்தலைப் பார்க்கும்போதும் உத்தமசோழன் சூழ்ச்சியினால் அவனது தமையன் கொல்லப்பட்டிருந்தால், அருண்மொழித்தேவன், உத்தமசோழன்பேரில் அத்துணை அளவு அன்பும் மதிப்பும் வைத்து குடிமக்களிடம் அவ்வாறு கூறியிருக்கவும் இளவரசு பட்டம் கொண்டிருக்கவும் மாட்டான் என்பது திண்ணம்.
     
      மேலும், உத்தம சோழன், இளவரசனாயிருந்த
ஆதித்த கரிகாலனைக் கொல்லும்படி செய்து தான் அரியணையேற முயன்றிருந்தால் அவனுக்கு குடிமக்களிடம் ஆதரவும் அன்பும் கிடைத்திருக்காது. அதுபோலவே சோழ அரசில் உள்ள அதிகாரிகளின்  ஆட்சிக்கான ஒத்துழைப்பும் கூட்டுறவும் கிடைத்திருக்காது, அதனால் சோழ இராச்சியத்தில் அமைதியின்மையும் கலகமுமே ஏற்பட்டிருக்கும்.

        ஆனால், அவனது காலத்தில் சோழ இராச்சியத்தில் எப்பகுதியிலும் குழப்பம் சிறிதுமின்றி உத்தமசோழனின் ஆட்சி மிக அமைதியாக நடைபெற்றது என்பது பல கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது.

 ஆயினும்,
இளவரசனாயிருந்த ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுக்குத் தண்டனை உத்தமசோழனின் ஆட்சிகாலத்திலேயே விதிக்கப்படாமல் இராசராசசோழன் ஆட்சியின் இரண்டாமாண்டிலே விதிக்கப்பட்டிருத்தலால் அக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்கும் தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்பது சிலரது கருத்து. கொலை புரிந்தவர்களில் ஒருவனுக்கும் அவனை சார்ந்தவர்களுக்கும் கிடைத்த தண்டனை இராசராசசோழன் ஆட்சியில் நிறைவெற்றப்பட்டமை உடையார்குடி கல்வெட்டால் அறியப்படுகின்றது.

     
இக்கல்வெட்டின் துணைகொண்டு உத்தமசோழன்மீது குற்றங்காண்பது பொருத்தமில்லாதது என்பது சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கருத்து. மறைவில் நிகழ்ந்த அக் கொலையில் தொடர்புடையோரைக் கண்டறிந்து அனைவர்க்கும் தண்டனை விதிப்பதர்க்குள் சில ஆண்டுகள் கழிந்திருக்கலாம் என்பதும் அதற்குள் உத்தமசோழனின் ஆட்சிக் காலம் முடிந்திருக்கலாம் என்பதும் அவர்களுடைய கருத்து.
   இதன் காரணமாய் இராசராசசோழன் ஆட்சி காலத்தில் எஞ்சியோருக்குத் தண்டனை விதிக்க நேர்ந்தமை இயல்பேயாகும். ஆதலால், உத்தமசோழன் அக்கொலைப்பற்றி ஒருவருக்கும் தண்டனை விதிக்கவில்லை என்று கூறுவது ஆதாரமில்லாத ஒன்றாகும்.
    மேலும், கல்வெட்டில், கொலையில் சம்மந்தப்பட்டவர்களின் மீதான நேரடி தண்டனை குறித்தில்லாமல் கொலையில் சம்மந்தப்பட்டவர்களின் மற்றும் அவர்தம் சுற்றத்தாரின் உடைமைகளை கைப்பற்றி அரசுடமையாக்கிய இராசராசசோழனின் நடவடிக்கையைப் பார்க்கின், கொலைத்திட்டம் வெற்றிகரமாய் நடந்தெறியவுடன் அதில் தொடர்புடையவர்கள் சோழ இராச்சியத்தின் எல்லையைத்தாண்டி சென்றிருக்க வேண்டும் என்பதும், நீண்டகால முயற்சிக்குப்பின்னும் குற்றவாளிகளை பிடிக்க இயலாமையால்தான், அவர்தம் உடமைகளின் மீதான தண்டனை நடவடிக்கை என்பதையும் அறியமுடிகின்றது.
    மேலும், கொன்றவர்களுல் பாண்டிநாட்டு அரசியல் அதிகாரியாகிய பஞ்சவன் பிரமாதிராசனும் ஒருவனாயிருத்தலால், “பஞ்சவன் பிரமாதிராசன்” என்ற விருது பஞ்சவர் என அழைக்கப்பெறும் பாண்டிமன்னர்கள் தங்களின் பிராமண உயர் அதிகாரிகளுக்கு அளிக்கும் விருதாகும் என்பதால், சதித்திட்டம் பாண்டி நாட்டிலே உருவானது என்பது திண்ணம்.
     கி.பி. 966 –ல் நிகழ்ந்த போரில் பாண்டி மன்னன் வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் கொன்றதோடில்லாமல் அவன் தலையை கொய்ததால், போர் தர்மத்தை மீறிய, ஆதித்த கரிகாலனுடைய அடாத செயலுக்கு, பழி தீர்க்கும் வகையில், ஆத்திரமுற்ற பாண்டிநாட்டு பகைவர் தூண்டுதலின்பேரிலேயே இக்கொலை நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதை அறியமுடிகின்றது.
அரசி வானவன் மாதேவி உடன்கட்டையேறல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     கி.பி.969-ல் இளவரசனனான தன் மூத்த மகன் ஆதித்த கரிகாலனை  இழந்த சுந்தர சோழன் ஆற்றோனாத் துன்பத்தில் ஆழ்ந்து அவ்வாண்டிலேயே காஞ்சிமாநகரில் இருந்த பொன்மாளிகையில் உயிர் துறந்தான். இதுபற்றியே இவ்வேந்தன் “பொன் மாளிகைத் துஞ்சினதேவர்” என சில கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகின்றான்.
     சுந்தர சோழன் எனும் இரண்டாம் பராந்தகனின் மனைவியருள் ஒருவரும், ஆதித்த கரிகாலன், அருண்மொழித்தேவன், குந்தவை ஆகியோரின் தாயாருமான வானவன் மாதேவி தன் கணவன்பால் அளவற்ற அன்புகொண்டவளாதலின் பிரிவாற்றாமல் தானும் உடன்கட்டையேறி ஒருங்கே மாய்ந்தனள்.
     அம்மாதேவியின் செயற்கறிய இவ்வருஞ்செயலை திருவாலங்காட்டு செப்பேடுகளிலும், திருக்கோவலூரிலுள்ள கல்வெட்டொன்றிலிருந்தும் அறியலாம்.

   முதலாம் இராசராசன் தஞ்சையில் எழுப்பிய “இராசராசேச்சுரம்” என்னும் பெரிய கோவிலில் குந்தவை தனது தந்தை சுந்தரசோழனது படிமத்தையும், தாய் வானவன் மாதேவியின் படிமத்தையும், எழுந்தருளிவித்து அவற்றிற்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக பெரும் பொருள் வழங்கியுள்ளமை பற்றியும் கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது.
   இதுவன்றியும் அவ்வம்மை தஞ்சையில் தன் தந்தை பெயரில் சுந்தரசோழ விண்ணகர் ஆதுரசாலை என்ற மருத்துவ நிலையம் ஒன்றை நிருவி அதனை நடத்தி வருவதற்கு மருத்துவக்காணிக்கையாக நிலமும் அளித்துள்ளனள்.
       தென்னார்காடு, உலகபுரம் எனும் ஊரில் சுந்தரசோழப்பெரும்பள்ளி என்னும் புத்த கோயில் ஒன்றும், புதுக்கோட்டை, திருமய்யம் வட்டத்தில் “சுந்தரசோழபுரம்” எனும் ஓர் நகரம் இருந்ததென கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது. அவற்றுள் சுந்தரசோழபுரம் என்பது இக் காலத்தில் சுந்தரம் என்று விளங்கிவருகின்றது, இவையாவும் இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவையாகும்.
அன்பில் செப்பேடுகள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     மழ நாட்டு அன்பில் எனும் ஊரினனாகிய அநிருத்தபிரமாதிராஜன் என்பவன் சுந்தரசோழனுக்கு அமைச்சனாய் இருந்தவன்.
    
     அவனுக்கு திருவெழுந்தூர் நாட்டிலுள்ள கருணாகரமங்கலம் என்னும் ஊரினை இறையீலியாக இவ்வேந்தன் வழங்கினான். அது குறித்து அளிக்கப்பெற்ற செப்பேடுகள் அன்பிற்செப்பேடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

     இதுகாறுங்கிடைத்துள்ள சோழ மன்னரது செப்பேடுகளுள் இவ்வன்பிற் செப்பேடுகளே பழமை வாய்ந்தவையாகும்.
 (ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)





2 comments:

  1. மிக அருமையான பதிவு, தங்களின் பதிவை மக்கள் மத்தியில் கொண்டு போக முயற்சியுகள் தமிழ்மணம், திரட்டி, உடான்ஸ் போன்ற திரட்டிகளில் இணைத்தீர்கள் என்றால் அநேகர் படித்து பயன்பெறுவார்கள்.

    ReplyDelete
  2. தமிழ்ச்செல்வி..உங்களின் அன்பான கட்டளையை ஏற்று முதல் கட்டமாய் ஃபேஸ்புக்கில் இணைத்துள்ளேன்..மற்றவை கூடிய விரைவில்...

    ReplyDelete