Thursday 24 January 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XV, அதிராசேந்திர சோழன் Adhiarajendra Chozhan .

                                            (சோழ மன்னர்கள் -34.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!
 அதிராசேந்திர சோழன் கி.பி.1070.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

       கி.பி. 1067- ல் வீரராசேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தி லேயே அவனது இரு புதல்வருள் ஒருவனுக்கு "அதிராசேந்திரன் " என்ற  அபிடேகப் பெயருடன்  இளவரசு  பட்டம் சூட்டியிருந்தான் என்பதையும், கி.பி. 1070 ன் முற்பகுதியில் வீரராசேந்திர சோழனது மறைவிற்குப் பின்னர் அவ்  அதிராசேந்திர சோழனே ஆட்சிக்கு வந்தான் என்பதையும்  அறியமுடிந்தாலும் அவனது இரு புதல்வருள் எவன் "அதிராசேந்திரன் " என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தனன் என்பது புலப்படவில்லை .

பரகேசரி
~~~~~~~~

           சோழர் குல வழக்கப்படி இராசகேசரி என்று பட்டம் கொண்டு ஆண்டுவந்த வீரராசேந்திர சோழனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த இம்மன்னன் தனக்கு பரகேசரி எனும் பட்டம் கொண்டு அரசாண்டான்.

அமைதியான ஆட்சி
~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
        இம்மன்னது கல்வெட்டுக்களிலிருந்து இவனது ஆட்சியில் மக்கள் அமைதியாக வாழ்ந்தனர்  என்பதை அறியமுடிகின்றது

               "
திருமடந்தையும் சயமடந்தையும் திருபுயங்களில் இனிதிருப்ப" எனவும் "திங்களேர் மலர்ந்து வெண்குடை மண்டிலம்" எனவும் தொடங்கும் இவனது இரண்டு மெய்கிர்த்திகளும் இவ்வேந்தனை "வீரமும் தியாகமும் ஆரமெனப் புனைந்து மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப்பரகேசரிவர்மரான உடையார் ஸ்ரீ அதிராசேந்திர தேவர்என்று கூறுகின்றமையால் இம்மன்னவன் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு பெரும்புகழுடன் வாழ்ந்து வந்தவனாயிருத்தல் வேண்டும்  என்பதை அறியலாம்.

      இம்மன்னனது காலத்து கல்வெட்டுக்கள் தஞ்சாவூர், ஆர்க்காடு மாவட்டங்களிலும், மற்றும் ஈழமண்டலத்திலும் காணப்படுகின்றன.


      அதிராசேந்திர சோழனது  ஆட்சிக்காலத்தில் நிலவிய அரசியல் நிலவரங்கள் குறித்த விவரங்கள்  அவனது கல்வெட்டுக்கள் மூலம் நன்கு அறியமுடிகின்றது.

      இம்மன்னனது அரசியல் தலைவர்களுள் ஒருவனான ஆதித்த தேவனான இராசேந்திர முவேந்த வேளாண் என்போன் அரசனின் ஆணைப்படி  திருக்காரைக்காடு, திருவல்லம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களின் கணக்குகளை ஆராய்ந்தான் என்பதை அறியமுடிகின்றது.

திருமாலுக்கு கற்றளி
(பாராங்கற்களால் ஆன கோயில்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

     இப்போது திண்டிவனத்திற்கருகே திருவக்கரையில் அமைந்துள்ள சந்திரமௌலீசுவரர் (வக்ரகாளியம்மன் கோயில் என்று இக்காலத்தில் பெரிதும் அறியப்படும் ) சிவன்  கோயில் வளாகத்தில் இருக்கும் வரதராச பெருமாள் கோயில்,   சோழன் அதிராசேந்திரனது ஆட்சிக்காலத்தில்தான் கருங்கல் கோயிலாகக்  கட்டப்பட்டது என்பதை அவ் ஊரில் காணப்படும் கல்வெட்டொன்றால் அறியமுடிகின்றது.

     இம்மன்னன் கி.பி.1070 ஆம் ஆண்டில் தனது தலைநகர் கங்கை கொண்ட சோழபுரத்தின் அரண்மனையில் இருந்தவாறு தொண்டை நாட்டுத்  தலமான திருப்பாசூர்க் கோவிலுக்கு  சேலை எனும் ஊரை இறையிலியாக அளித்ததைக் குறிப்பிடும் அக்கோயில் கல்வெட்டு  அந் நிகழ்வின்போது  இம்மன்னனுடன் அவனது அதிகாரிகளும் மற்றும் அரசியல் தலைவர்களும்   பங்கேற்றமையை குறிப்பிடுகின்றது.

நோய்வாய்ப்படுதல்
~~~~~~~~~~~~~~~~~~~
         இம்மன்னன் நோய்வாய்ப்பட்டான் என்றும் அதனின்று மீண்டு நலம்பெற வேண்டுமென வேண்டி கோயிலில் தேவாரம் பாடப்பட்டது என்பதையும்   தஞ்சையருகே கூகூர் எனும் ஊரிலுள்ள கல்வெட்டினால்அறியமுடிகின்றது என வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர்.

குறைந்த கால ஆட்சி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

           
மேலும், முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1070 ஆம் ஆண்டின் நடுவில்  சோழ இராச்சியத்தின் மன்னனாய் முடிசூட்டப்பட்டான் எனும் வரலாற்று ஆராய்வின் முடிவிலிருந்தும் அதிராசேந்திர சோழன் மிகக் குறைந்த காலமே சோழ சாம்ராச்சியத்தை  ஆட்சிசெய்து மாண்டனன் என்பதை
அறியமுடிகின்றது.

மாறுபட்ட கருத்துகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~

      
சோழ சாம்ராச்சியத்தை அதிராசேந்திர சோழன் குறைந்த காலமே   ஆட்சி செய்திருந்தாலும் அவனது ஆட்சியைக் குறித்தும் அவனது மரணத்தையும் குறித்தும் பெரிதும் மாறுபட்ட செய்திகள் இருப்பதால் அவற்றை நோக்குவது இன்றியமையாத ஒன்றாகின்றது.

ள்நாட்டு கலகம் இருந்ததா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
         
பில்ஹணர் எனும் வடமொழிப் புலவர், தான் எழுதிய, மேலைச்சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்ரமாதித்தனின் வரலாற்றில் அதிராசேந்திர சோழனுக்கு முடிசுட்டுவிழா நடக்கவிருந்தபோது ஏற்பட்ட உள்நாட்டு கலகத்தில் அவன் கொல்லப்பட்டதாய்  கூறுகின்றார். அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்பதற்கு சான்றாய் விளங்குவது, அவனது தந்தையின் காலத்திலேயே, அடுத்து ஆட்சிக்கு வருபவன் இவனே என்று அறிவிப்பதாய், சோழர் குல வழக்கபடி இளவரசு பட்டம் சூட்டப்பட்டது என்பது.

      மேலும்,  இவனது ஆட்சிக்காலத்தில் கலகம் விளைந்ததாய்  கல்வெட்டுக்கள் இல்லை, மாறாக, அவனது அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் அவனோடு இருந்து கோவிலுக்கு இறையிலி அளித்தார்கள் என்றும் மக்களால் போற்றப்பட்டவன் என்பதுவுமே கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.

       மக்களால்
 பெரிதும் போற்றப்பட்டு பெரும்புகழுடன் வாழ்ந்து வந்தவன் இம்மன்னன் என்பது மெய்கீர்த்தியிலிருந்தும் புலப்படும்.


வைணவத்தை எதிர்த்தானா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
   
     மேலும், இம்மன்னன்
தில்லையிலிருந்த (சிதம்பரம்) திருமாலின் சிலையை அகற்றிக் கடலில் கிடத்தினான் என்றும் வைணவர்களைத் துன்புறுத்தினான் என்றும்  இதனால் இராமானுஜர் தமிழகத்தினின்று வெளியேறினார் என்றும் அவர் செய்த மந்திரத்தால் இம்மன்னன் நோய்வாய்பட்டு இறந்தான் என்றும் கூறுவர்.

             
இதுவும் முற்றிலும் தவறாகவே உள்ளது. இராமானுஜர் வாழ்ந்த காலம் இவனது காலம் இல்லை என்பதாலும் தில்லையம்பதி திருமாலின் சிலையைக்  கடலில் செலுத்தியது பின்னர் வந்த மன்னனே என்பதாலும் , இம்மன்னன், திருமாலுக்கு கருங்கல் கோயில் கட்டினான் என்ற கல்வெட்டுசெய்தியால் இவன் வைணவத்திற்கு எதிரியல்ல என்பதாலும் அச்செய்தி தவறானது என்றறியலாம்.


குலோத்துங்கனால் கொல்லப்பட்டானா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    மேலும், முதலாம் குலோத்துங்கன், சோழ இராச்சியத்தைக்  கைப்பற்ற சோழ நாட்டில் கலகம் ஏற்படச்செய்து இம்மன்னனைக் கொன்றிருக்கக் கூடும் என்றும் ஒரு சாரார் கூறுவர்.  அரசன் இன்றி அவதியுற்றது சோழநாடு”  என்று கலிங்கத்துப் பரணியும், “நோய்வாய்ப்பட்டிருந்தான் மன்னன்” என்ற அதிராசேந்திர சோழன் காலத்துக்  கல்வெட்டுச்செய்தியும்  உறுதிசெய்வதால் அச்செய்தியும்  உண்மையல்ல என்பதையே புலபடுத்துகின்றது.

சோழர் மரபு முற்றுபெறல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

          
அதிராசேந்திர சோழனுக்கு புதல்வர் எவரும் இல்லாமையால்,கி.பி. 846 ஆம் ஆண்டில்  விசயாலய சோழன் காலம் தொடங்கி சோழ நாட்டை ஆட்சிபுரிந்துவந்த, பெருமைவாய்ந்த, பண்டைச் சோழ மன்னர் மரபு கி.பி.1070 ஆம் ஆண்டில்  சோழன் அதிராசேந்திரனோடு  முடிவடைந்தது என்றால் அது மிகையாகாது.



(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)