Monday 14 January 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XIV, Virarajendra Chozhan (part-2) .

                                   (சோழ மன்னர்கள் -33.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!
வீரராசேந்திர சோழன் கி.பி.1063-1070.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(நிறைவுப் பகுதி)

           "வடகடலென்ன வகுத்த அத்தானையைக் கடகளிறொன்றால் கலக்கி " என்ற வீ ரராசேந்திரனின் கல்வெட்டொன்று கூறுவதிலிருந்து இவனின் மேலைச் சாளுக்கியரோடான மூன்றாம் முறையான போர் கிருஷ்ணை துங்கபத்ரை ஆறுகள் சங்கமிக்கும் கூடல் சங்கமம் எனும் இடத்தில்  கி.பி  1064 ஆம் ஆண்டில் நடைபெற்றது என்பதையும் , அப்போரிலும் வீ ரராசேந்திரன் ஆகவமல்லனை வென்று ஆகவமல்லனின் போர்ப்பாசரையை முற்றுகையிட்டு அவனது மனைவியரையும் பட்டத்து யானையையும்  வராகக் கொடியையும் குதிரைகளையும்  யானைகளையும் கைப்பற்றிக்கொண்டு கங்கை கொண்ட சோழபுரத்தை அடைந்து வெற்றி விழாவிற்கான அபிஷேகமும் செய்துகொண்டான் என்பதையும் அறியலாம்.

     விக்ரமசோழன் உலாவும், கலிங்கத்துப்பரணியும் இவனது கூடல் சங்கமத்தின் வெற்றியை பாடுவதிலிருந்து இம்மன்னன் நடத்திய போர்களில் கூடல்சங்கமப் போர் வெற்றியே சிறப்பானதாய் இருந்திருக்கவேண்டும் என்று தெறிகின்றது .

      வீ ரராசேந்திர சோழனின் மற்றொரு கல்வெட்டுக் கூறுவதிலிருந்து இவனின் மேலைச் சாளுக்கியரோடான நான்காம் போரும்  கிருஷ்ணை துங்கபத்ரை ஆற்றங்கரையில் கி.பி  1066 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்  நடை பெற்றிருக்கவேண்டும்.

      கி.பி  1067 ஆம் ஆண்டில், குந்தள மன்னன்  ஆகவமல்லன், தான் தோல்வியுற்ற, கூடல்சங்கமத்திற்கு தன்னோடு மீண்டும் போர்புரிய  வரவேண்டும் என்றும் அவ்வாறு வராது அஞ்சுபவர் மன்னரே அல்ல என்றொரு ஓலையெழுதி அதனை கங்காகேத்தன் என்பவன் மூலம் வீரராசேந்திரனுக்கு  அனுப்ப அதன்பொருட்டு அவனை  வெல்ல பெரும்படையோடு சென்று சங்கமத்தில் ஒரு மாத காலம்  தங்கியிருந்தும் ஓலையில் சொன்னபடி  ஆகவமல்லன் போரிட வரவில்லை.


      
அங்ஙனம்
அவன் வராதமையால் பெருஞ்சினமுற்ற வீரராசேந்திரன்
அப்பகுதி மேலைச் சாளுக்கியத்  தலைவைர்களைத் தோற்கடித்து வெற்றித்தூண்  ஒன்றினை நிறுவினான். அதோடு ஆகவமல்லனின்  உருவம் ஒன்றை ஏற்படுத்தி அதன் கழுத்தில் தன்னிடம் ஐந்துமுறை  புறமுதுகு காட்டித் தோற்றோடியவன் என்று எழுதுவித்து  இன்னும் பிற அவமானங்களும் செய்வித்தான் என்று அவனது கல்வெட்டு கூறுகின்றது.

            அத்தோடு, ஆகவமல்லன் வென்ற வேங்கி நாட்டை  மீண்டும் வென்று மீட்க்காமல் திரும்புவதில்லை என்றும் "வல்லவனாயின் வந்து காக்க" என்று செய்தி அனுப்பிவிட்டு வேங்கி நோக்கி படையோடு சென்ற வீரராசேந்திரனை எதிர்கொண்ட மேலைச் சாளுக்கிய தலைவர்களை விசயவாடை நகருக்கு அண்மையில் நடந்த போரில் தோற்கடித்து கலிங்கம் கடந்து வேங்கி நாட்டை மீண்டும் கைப்பற்றிக் கீழைச் சாளுக்கிய மன்னனாகிய ஏழாம் விசயாதித்தனிடம் அளித்து வெற்றி வேந்தனாய் தலைநகர் திரும்பினான்.

     அவ்வாறு ஆகவமல்லன் போரிட வராதிருக்கக் காரணம் அம்மன்னன் நோய்வாய்ப்பட்டு இறந்தான் என்பது வரலாற்றில் பின்னர் அறியப்படுகின்றது.
    
       ஆகவமல்லன் இறந்தபின்னர் அவனது மூத்த புதல்வன் இரண்டாம் சோமேசுவரன் முடிசூடி ஆட்சி செய்யும்போது அந்நாட்டு மக்கள் பலவகையாலும் இன்னல்பட்ட காரணத்தால் அவனுக்கும் அவனது தம்பி விக்ரமாதித்தனுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இதனால் வீரராசேந்திர சோழனுக்கும் விக்ரமாதித்தனுக்கும் நட்புறவு ஏற்பட  அதன் காரணமாய் வீரராசேந்திர சோழன் இரண்டாம் சோமேசுவரனைப் போரில் வென்று பின்னர் அந்நாட்டினை விக்ரமாதித்தனுக்கு அளித்தான் என்பது அவனின் மெய்கீர்த்தியால் தெரிகின்றது.

ஈழம் மண்டலம்
~~~~~~~~~~~~~~~~~~
    வீரராசேந்திர சோழனுடைய காலத்தில் ஈழநாட்டின் தென்கீழ்ப்பகுதியான ரோகண நாட்டலிருந்து சோழருக்கெதிராய் கலகம் செய்துவந்த விசயவாகு வென்றடக்கப்பட்டு ஈழம் மண்டலம் முழுதும் சோழ இராச்சியத்துக்குட்பட்டதை இவனது கல்வெட்டு கூறுகின்றது. இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சமும் இதை உறுதி செய்கின்றது.

‘கடாரம் எறிந்து கொடுத்தருளி’
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
   வீரராசேந்திர சோழனுடைய ஆட்சிக் காலத்தின் ஏழாம் ஆண்டு கல்வெட்டொன்று ‘மன்னர்க்குக் கடாரம் எறிந்து கொடுத்தருளினான்’
என்று கூறுவதிலிருந்து, கி.பி. 1025-ல் கங்கை கொண்ட சோழன் ஶ்ரீவிஜயராச்சியத்தின்மேல் படையெடுத்து வென்ற கடாரத்தினை சோழராச்சியத்திற்குட்பட்டு ஆண்டுவந்த கடார மன்னன் அதனை பகைவரிடம் இழந்து வீரராசேந்திரனிடம் தஞ்சம் புகுந்தனன் என்பதும் வீரராசேந்திரன் அப்பகைமன்னனை வென்று கடாரத்தை மீட்டளித்தமையும் புலப்படுகின்றது.

இறப்பு
~~~~~~~
     வீரராசேந்திர சோழனது மெய்கீர்த்தி அவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டின் நிலையோடு நின்றிருப்பதால் இம்மன்னன் கி.பி.1070 ஆம் ஆண்டு இறந்திருக்கவேண்டும்.


பட்டங்கள்
~~~~~~~~~~~
       வீரராசேந்திர சோழன் காலத்திய கல்வெட்டுக்களிலிருந்தும் செப்பேடுகளிலிருந்தும் அவனுக்கு ‘சகல புவனாசிரயன்’ ‘ஶ்ரீமேதினி வல்லவன்’ ‘மகாராசாதிராசன்’ ‘பரமேசுவரன்’ ‘பரமபட்டராகன்’ ‘இரவிகுலதிலகன்’ ‘ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்ட ராசசேகரன்’ ‘இராசராசேந்திரன்’ ‘வீரசோழன்’ ‘கரிகாலசோழன்’ எனும் பட்டங்கள் வழங்கிவந்தமை புலப்படுகின்றது.

பட்டத்தரசியும் மக்களும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    இம்மன்னனது பட்டத்தரசி ‘உலக முழுதுடையாள்’  எனுஞ்சிறப்புப் பெயர் கொண்டவள் ஆவாள்.

     இவனுக்கு, மதுராந்தகன், கங்கை கொண்ட சோழன் எனும் இரு புதல்வர்கள் ஆவர். இவனுக்கு ஒரு புதல்வி இருந்தனள் என்பதும் அவளை மேலைச் சாளுக்கிய விக்ரமாதித்தனுக்கு மணஞ்செய்து கொடுத்ததையும் அறியமுடிகின்றது.

தமிழ்மொழியில் ஈடுபாடு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     வீரராசேந்திர சோழனின் விருப்பத்திற்கேற்ப, பாண்டிமண்டல பொன்பற்றி எனும் நகரின் சிற்றரசனாயிருந்த புத்தமித்ரன் என்பான் ஐந்திலக்கணங்களும் அடங்கிய நூல் ஒன்றை எழுதி அதற்கு ‘வீரசோழியம்’ எனும் பெயருமிட்டான். இதிலிருந்து தமிழ்மொழியின்பால் வீரராசேந்திர சோழனுக்கிருந்த ஈடுபாட்டை அறியமுடிகின்றது.

 
(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)


6 comments:

  1. அளப்பறிய உமது இப்பணி மென்மேலும் சிறப்புற எமது வாழ்த்துக்கள்
    நரேந்திரன், புதுவை

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிரு. நரேந்திரன்.

      Delete
  2. அருமையான பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு. ஆட்டோ மொபைல்.

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி திரு.geeboomba.

      Delete