Wednesday 4 July 2012

சோழ மன்னர்கள் Later Chola Kings-VII, Arinjayachozhan.


                                       (சோழ மன்னர்கள் -9)
        பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி !
அரிஞ்சய சோழன் (கி.பி.956-957)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
       கி.பி.919ல் பாண்டிய மன்னன் இராச சிம்மனை வென்று பாண்டிமண்டலத்தைக் கைப்பற்றக் காரணமான வெள்ளூர் போரில் பராந்தகனுக்கு உறுதுணையாயிருந்தப் பழுவேட்டரயர் குலமன்னன் கந்தன் அமுதனின் மகள் அருள்மொழிநங்கையை முதலாம் பராந்தகன் மணந்தனன். அவ்வரசிக்குப் பிறந்தவனே அரிஞ்சயன் ஆவான்.

     சோழ மன்னர்களுக்குத் திரை செலுத்திக்கொண்டு பழுவூரைச் சுற்றியுள்ளப் பகுதிகளை ஆண்டுவந்த கேரள வம்சக் குறுநில மன்னர்களே பழுவேட்டரைய மன்னர்கள் ஆவர்.
      
            பராந்தக சோழனது ஆட்சியில் அவனது இளைய மகன் அரிஞ்சய சோழன் தனது மூத்த சகோதரனும் இளவரசனுமான இராசாதித்தன் சோழராச்சியத்தின் வடபுலத்தைப் பாதுகாத்துவந்தபோது அவனுடனேயிருந்தமையால் சோழருக்கும்  இராஷ்டிரகூடருக்கும் நடந்த போரில்  இவனும்  கலந்துகொண்டிருத்தல் வேண்டும்.

            அப்போரில் இராசாதித்தன் வீரமரணம் அடையவே அடுத்த சகோதரனான கண்டராதித்தன் இளவரசு பட்டம் சூட்டப்பெற்று முதலாம் பராந்தகனுக்குப்பின் ஆட்சியேரினான்.  கண்டராதித்தனின் அந்திமகாலத்தே உத்தமசோழன் மகப்பேறாய் கிட்ட இளங்குமரணை விடுத்து தம்பிக்கு இளவரசு பட்டம் கட்டினான் கண்டராதித்தன்.

            கண்டராதித்த சோழனுக்குப்பின் அவனது தம்பியும் இளவரசனுமான பராந்தக சோழனது மூன்றாம் மகன் அரிஞ்சய சோழன் சோழநாட்டின் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பெற்றான். இவன் பரகேசரி எனும் பட்டம் கொண்டு ஆட்சி புரிந்தான். இதன் மூலம் சோழமன்னர் வரலாற்றில் முதன் முதலாய் ஒரு மன்னனின் மூன்று மகன்கள் இளவரசு பட்டம் கொண்டதையும் மூவரும் அரசனானதையும் அறியமுடிகின்றது.

      பெரும்வீரனான இம்மன்னன் சோழநாட்டின் சக்கரவர்த்தியாகிய  பின்னர், தனது தந்தையின் ஆட்சியில் இராஷ்டிரகூடரிடம் இழந்த பகுதிகளைக்  கைப்பற்றவேண்டுமென்ற எண்ணங்களோடு முயற்சிகளைத் துவங்கினான். அப்பகுதிகளை ஆண்ட வைதும்பர்களை வெற்றிகாண வேண்டியிருந்ததால் முதலில் தன் புதல்வி அரிஞ்சிகைப்பிராட்டியை ஒரு வாணர்குல வேந்தனுக்கு மணஞ்செய்து கொடுத்து வாணர்குலத்துக்கு இராஷ்ட்டிரகூட மன்னரது உறவும் நட்பும் அற்றுப்போகச்செய்தான்.   
 
      பின்னர் இவ்வேந்தன் பெரும் படையோடு திருமுனைப்பாடியையும் தொண்டை நாட்டையும் கைப்பற்றப் புறப்பட்டான். “ஆற்றூர்துஞ்சின தேவர்”  என்று சில கல்வெட்டுக்கள் கூறுவதால் அப்போரில் இம்மன்னன் இறந்தானா  என்பது புலப்படாவிட்டாலும் ஆற்றூரில் இறந்ததை அறிய முடிகின்றது.

      சோழ இராச்சியமெங்கும் இவனதுகாலத்து கல்வெட்டுக்கள் மேலும் கிடைக்கப்பெறாமையால் இம்மன்னன் ஆட்சிபுரிய முடிசூடிய சில மாதங்களிலேயே இறந்திருக்க வேண்டுமென்பது திண்ணம்.
     
      இம்மன்னன் மூன்றாண்டுகள் ஆட்சி புரிந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சிலர் கருதுவதுண்டு. அக்காலத்தில் இளவரசு பட்டம் சூடிய நாள் முதல் ஆட்சிக்கான ஆண்டுகள் கணக்கிடப்படுவது வழக்கமாதாலால் இம்மன்னன் மூன்றாண்டுகள் அரசாண்டான் எனக் கருத இடமில்லை.


       அரிஞ்சய சோழனுக்கு வீமன் குந்தவை, ஆதித்தன்கோதைப்பிராட்டி, கல்யாணி, பூதிஆதித்த பிடாரி என்ற மனைவியர் இருந்தனர். இவர்களுள் வீமன் குந்தவை கீழச்சாளுக்கிய மன்னன் இரண்டாம் வீமனின் மகளாவாள். குந்தவை என்ற பெயரோடு சோழ இராச்சியத்தில் முதலில் காணப்படும் அரசி இவளேயாகும். ஆதித்தன்கோதைப்பிராட்டி சேரமன்னன் மகளாவாள், கல்யாணி என்பவள் வைதும்பராயன் மகள் என அன்பிற்செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. பூதிஆதித்த பிடாரி கொடும்பாளூர் குறுநில மன்னன் பூதி விக்கரமகேசரியாகிய தென்னவன் இளங்கோவன் மகளாவாள்.

      அரிஞ்சய சோழனுக்கு அரசி கல்யாணியின்பாற்  ஒரு புதல்வன் பிறந்தனன் அவன் பெயர் பராந்தகன் என்பது அன்பிற்செப்பேடுகளால் அறியப்படுகின்றது.
     
      அரிஞ்சய
சோழனின் பேரனாகிய இராச இராசச் சோழன் தன் பாட்டனை நினைவு கூறும்பொருட்டு வடஆர்க்காடு, திருவல்லத்தை அடுத்த மேற்பாடி என்ற ஊறில் அரிஞ்சயேச்சுரம் என்னும் கோயில் ஒன்றைக் கட்டி அதற்கு நிவந்தங்கள் அளித்துள்ளான், இந்நாளில் அது சோழேச்சுரம் என்றழைக்கப்படுகின்றது.(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)

No comments:

Post a Comment