Friday 29 June 2012

சோழ மன்னர்கள் Later Chola Kings-VI, Sembiyanmadhevi.


                                                (சோழ மன்னர்கள் -8.)
பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி!
செம்பியன்மாதேவி
~~~~~~~~~~~~~~~~~~~~
      சோழ மன்னர்கள் தம் நாட்டின் அரசியல் நிலை காரணமாக, பெருவலிமைபடைத்த பிறவேந்தர், குறுநில மன்னர் ஆகியோரின் தொடர்பினை நிலைநிறுத்தும்பொருட்டு அவர்களுடைய மகளிரை மணம் செய்துகொள்ள நேர்ந்தமையால் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரை உடையவராயிருந்தனர்.
      ஆனால் செல்வந்தர்களும் அச்செயலை மேற்கொண்டது அவர்களின் செல்வச்செருக்கால் நிகழ்ந்ததேயன்றி வேறொன்றுமில்லை.
      அக்காலத்தில் பெண்மக்கள் எல்லாச்சிறப்புக்களும் எய்தியிருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது. பொதுவாக ஒருவனும் ஒருத்தியுமாக நிகழ்த்திய வாழ்க்கையே அக்காலத்தில் சிறப்புடையதாகக் கருதப்பட்டது.
     சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில், கணவனை இழந்த மகளிர் சிலர் பிரிவாற்றாமல் உடன்கட்டையேறி உயிர்துறந்துள்ளனர். எனினும், சோழ இராச்சியத்தில் அத்தகைய நிகழ்ச்சிகள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் நிகழ்ந்துள்ளன.
     முதலாம் பராந்தக சோழன் காலத்திய வீரசோழ இளங்கோவன் என்னும் கொடும்பாளூர் குறுநில மன்னனின் மனைவி கங்கமாதேவி என்பவர் தீப்பாய்ந்து உயிர்நீத்த செய்தி திருச்சிராபள்ளி, அல்லூரிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியமுடிகின்றது. இதுபோலவே பராந்தக சோழன் காலத்திற்குப் பின்னர் வந்த ஒரு சில சோழ அரசிகளும் உயிர்நீத்த செய்தியும் உள்ளன.

      இவ்வரிய செயல்கள் சில மகளிரின் உண்மையான விருப்பத்தையும், உள்ளம் உருகிய வேண்டுகளையும் மக்கள் மறுக்கமுடியாத நிலையில்தான் நிகழ்ந்துள்ளன என்பதையும் அரிய முடிகின்றது.
      கண்டராதித்த சோழனின் மனைவியர் இருவருள் இரண்டாம் மனைவியாகிய செம்பியன்மாதேவி மழநாட்டுச் சிற்றரசன் மகள் என்பதை “மழவரையர் மகளார் ஶ்ரீகண்டராதித்தபெருமாள் தேவியார் செம்பியன் மாதேவி” என்ற கல்வெட்டுப்பகுதியால் அறியலாம்.
      கண்டராதித்தனக்கு, அவனது இளைய சகோதரனுக்கு பிள்ளைகள் பிறந்த பின்னரும்கூட, மக்கட்பேறு இல்லாதிருந்து அவனது இறுதிகாலத்திலேயே ஒரு மகன் பிறந்தான். அவனே உத்தம சோழன்.

     உத்தமசோழன் சிறு பிள்ளையாயிருந்தபோது கண்டராதித்தன் இறந்துவிட, உடன்கட்டையேறும் பழக்கம் இருந்தகாலத்தில் தன் குழந்தையின் பொருட்டே உயிர்வாழ்ந்தவள் செம்பியன்மாதேவி.       

     இவ்வரசி அரிஞ்சய சோழன், சுந்தரசோழன், உத்தமசோழன் ஆகியோரின் ஆட்சிகாலங்களிலும் முதலாம் இராசராசசோழனின் ஆட்சியில் கி.பி.1001-ஆம் ஆண்டு வரையிலும் வாழ்ந்தவள் ஆவாள். இவள் தனது வாழ்நாளில் செய்த தொண்டுகள் பல.

    திருச்சிராப்பள்ளி, திருமழப்பாடிக்கருகில் உள்ள “செம்பியன்மாதேவிப் பேரேரி” இவ்வரசியால் அமைக்கப்பட்டதாகும்.

    சிவபக்தையான இவ்வரசி சோழ இராச்சியத்தில் செய்த பல்வேறு சமயத்தொண்டுகள் குறித்த கல்வெட்டுக்கள் மிகுதியாகவே காணப்படுகின்றன. செம்பியன் மாதேவியின் முற்சியால் சோழ நாட்டில் பல செங்கற் கோயில்களை கற்றளிகளாக (கருங்கற்களால் கட்டப்பட்ட கோயில்கள்) ஏற்படுத்தியமையை அறியமுடிகின்றது.

      கோயில்களில் ஒரு சில குறிப்பிட்ட காரியங்களை நாள்தோறுமாவது, திங்கள்தோறுமாவது, ஆண்டுவிழா நாட்களிலாவது தொடர்ந்து நடத்திவர கோயில்களுக்கு ‘இறையிலி’ இவ்வரசியால் அளிக்கப்பட்டதும் அறியமுடிகின்றது.

     பல கோயில்களுக்கு அணிகலன்கள் அளித்தும், பொன்னாலும் வெள்ளியாலும் பலவகை கலங்கள் செய்து கொடுத்துள்ளதும் அறியமுடிகின்றது.

     செம்பியன்மாதேவி கற்றளிகளாக அமைத்த கோயில்கள் விருத்தாசலம், திருநல்லம், திருக்கோடிகா, தென்குரங்காடுதுறை, செம்பியன்மாதேவி, திருவாரூர் அரநெறி, திருதுருத்தி, ஆநாங்கூர், திருமணஞ்சேரி, திருவக்கரை என்னும் ஊர்களில் உல்ல சிவாலயங்களாகும்.

    இவற்றில் திருநல்லம் என்னுமூரில் சிவனுக்கு கற்றளி அமைத்து அதற்கு நாள் வழிபாட்டிற்கும், விழாக்களுக்கும் நிவந்தமாக நிலங்களை அளித்திருப்பதோடல்லாமல் அக்கோயிலுக்கு ‘ஶ்ரீகண்டராதித்தம்’ என தன் கணவன் பெயரையே அளித்திருப்பதும், அவ்விறைவனைத் தன் கணவன் வழிபடுவதுபோல் ஒரு படிவம் அமைத்திருப்பதும் அவள் தன் கணவன் பால் வைத்திருந்த பேரன்பையே புலப்படுதுகின்றது.

     முதலாம் இராசராசசோழனின் ஆட்சியின் 16-ஆம் ஆண்டாகிய கி.பி.1001-ல் திருவக்கரைக் கோயிலை கற்றளியாக அமைத்ததே இவ்வரசி புரிந்த இறுதிப் பணியாகும்.
     முதலாம் இராசராசசோழனின் மகனாகிய கங்கை கொண்ட சோழன் செம்பியன்மாதேவியிலுள்ள திருக்கயிலாயமுடையார் கோவிலில் இவ்வரசியின் படிமத்தினை அமைத்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளான்.
(ஓவியம் ம.செ. வினுடயது என்னால் எடுத்தாளப்பட்டது.)

2 comments:

  1. இனிய நல் வாழ்த்து. இந்த அரிய பணிக்கு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி திருமதி வேதா.இலங்காதிலகம், தங்களின் பாராட்டுக்கள் உற்சாகத்தை அளிக்கின்றன.

    ReplyDelete