(சோழ
மன்னர்கள்-7)
நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி !
கண்டராதித்த
சோழன். (கி.பி. 950 - 957).
முதற் பராந்தக சோழன் இறந்த பின்னர், அவனது இரண்டாம் புதல்வனும் ஏற்கனவே
இளவரசு பட்டம் சூட்டப் பட்டிருந்தவனுமாகிய கண்டராதித்த சோழன் கி.பி.953ல் முடி
சுட்டப்பெற்றுச் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியானான்.
இவன் இராசகேசரி என்ற பட்டம் புனைந்து அரசாண்டான்.
இம்மன்னனது கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டில்
காணப்படாமையால் சோழர்க்கு திறை செலுத்திக் கொண்டு சிற்றரசனாய் வாழ்ந்து வந்த
வீரபாண்டியன் என்பவன் கண்டராதித்தன் காலத்தில் சுயேட்சை அடைந்து பாண்டி நாட்டில்
தனியரசு புரியத் துவங்கியிருத்தல் வேண்டும், மேலும் வீரபாண்டியனது கல்வெட்டுக்கள்
பாண்டி நாட்டில் காணப்படுவதாலும் இது உறுதியாகின்றது.
மேலும் கண்டராதித்தனது தந்தையின் காலத்தில்
இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணாதேவன் தொண்டை மண்டலத்தையும் திருமுனைப்பாடி
நாட்டையும் கவர்ந்து கொண்டதாலும் இவை நீங்கிய சோழ நாடு மாத்திரம் இவனது
ஆட்சிக்குட்பட்டிருந்தது.
இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணாதேவன் தான் வென்ற தொண்டை மண்டலத்தையும் திருமுனைப்பாடி நாட்டையும் தன்பால் அடைக்கலம் புகுந்திருந்த வைதும்பராய மன்னனுக்கு அவற்றையளித்துத் தன் பிரதிநிதியாயிருந்து ஆண்டுவர ஏற்பாடு செய்தான்.
கண்டராதித்த சோழனுக்குச் சோழ இராச்சியம் இழந்த பகுதிகளை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தாலும் அது அவனது காலத்தில் முழுதும் நிறைவேறவில்லை. இம்முயற்சியில் ஓரளவே வெற்றிபெற்றான் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
இவனது காலத்தில் தொண்டைமண்டலத்திலிருந்த,
தற்சமய புதுவைப் பகுதிகளை இவன் போரிட்டு மீட்டதை புதுவையருகே உள்ள கண்டமங்கலம்,
மற்றும் இம்மன்னனது மனைவி செம்பியன் மாதேவி பெயரில் அமைந்த “செம்பியப் பாளையம்”
ஆகிய ஊர்களின் பெயர்களால் அறியமுடிகின்றது.
கண்டராதித்த சோழன், காவிரியாற்றிற்கு வடக்கே
கண்டராதித்தச் சதுர்வேதி மங்கலம் என்ற ஊர் ஒன்றை அமைத்தான் என்று ஆனைமங்கலச்
செப்பேடுகள் கூறுகின்றன. அது திருச்சிராப்பள்ளி, உடையார் பாளையம், கொள்ளிட
ஆற்றிற்கு வடகரையில் திருமழப்பாடிக்கு மேற்கே ஒரு மைல் தொலைவில் இந்நாளில்
சிற்றூராக உள்ளது. இப்போது அதனைக் கண்டி ராச்சியம் என்று அழைக்கின்றனர்.
தென்னார்க்காடு உலகபுரத்திலுள்ள ஒரு கல்வெட்டால் கண்டராதித்தப்பேரேரி என்ற நீர்நிலை ஒன்றிருந்ததை அறியமுடிகின்றது அவ்வேரி இம்மன்னன் காலத்தில் அமைக்கப் பெற்றிருத்தல்வெண்டும்.
கண்டராதித்த சோழன் சிவபக்தியும் தமிழ்ப்
புலமையும் ஒருங்கே அமையப்பெற்றவன். தில்லையம்பதி நடராசன் மீது இவன் பாடிய
திருப்பதிகம் ஒன்று சைவத்திருமுறைகளுல் ஒன்றான ஒன்பதாம் திருமுறையில் இருப்பதை
அறியமுடிகின்றது. அப்பதிகத்தில் இவ்வரசன் தன்னைக் “கோழி வேந்தன்” எனவும்
‘தஞ்சையர்கோன்” எனவும் கூறியிருப்பதையும் அறியலாம்.
கண்டராதித்த சோழனுக்கு மும்முடி சோழன் என்ற பெயரும் உண்டு. சிதம்பரம், உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டில் இம்மன்னனை “மேற்கெழுந்தருளிய தேவர்” என குறிப்பிடுவதால் சோழநாட்டிற்கு மேற்கே உள்ள நாடுகளுக்கு இம்மன்னன் தலயாத்திரை சென்று திரும்பியதை உணர்த்துகின்றது. “சிவஞான கண்டராதித்தர்” என்ற மற்றுமொரு குறிப்பினால் தன் அரசை துறந்து சிவஞானியாய் அங்ஙனம் போயிருக்கலாம்.
மைசூர்
இராச்சியத்தில் நந்தி என்னும் ஊரிலுள்ள ஒரு சிவன் கோவிலில் ஓர் அரச படிமம் உள்ளது.
அது சோழ மன்னரது படிமம் என்று அங்கு அழைக்கப்படுகின்றது, யோகத்தில் வீற்றிருக்கும்
நிலையில் அமைந்திருப்பாதால் அது இம் மன்னனை நினவு கூறும்பொருட்டு வைத்தமையாயிருக்கலாம்.
கண்டராதித்த சோழனுக்கு இரு மனைவியர்: வீரநாரணீ, செம்பியன் மாதேவி என்போர். இவர்களுல் வீரநாரணியே முதல் மனைவி, இவள் கண்டராதித்தன் முடிசூட்டப்பெறுவதற்கு முன்னரே இறந்தனள்.
கண்டராதித்தனுக்கு பல ஆண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாதிருந்து இறுதியில் செம்பியன் மாதேவி மூலம் ஒரு மகன் பிறந்தான் அவனுக்கு மதுராந்தகன் எனவும் உத்தம சோழன் எனவும் பெயர். தன் மகன் சிறு குழந்தையாயிருந்ததால் கண்டராதித்தன் தன் சகோதரன் அரிஞ்சயனுக்கு கி.பி. 954 ல் இளவரசு பட்டம் கட்டி அரசியலில் பழக்கினான். மதுராந்தகன் இளைய பிராயத்தனனாயிருந்தபோது கண்டராதித்த சோழன் கிபி. 957ல் இறந்தான்.
செம்பியன் மாதேவி தன் இளம் புதல்வன் மேல் வைத்த அன்பினால் அவனை சிறப்புடன் வளர்ப்பதையே கடமையாகக் கொண்டு கணவனைப் பிரிந்தும் உயிருடன் இருந்தனள். இக் காலத்தில் கோனேரிராசபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம் என்னுமூரில் சிவனுக்கு தன் கணவன் பெயரால் கண்டராதித்தம் என்னுங் கற்றளி (பாராங்கற்களால் ஆன கோயில்) அமைத்து அவ்விறைவனைத் தன் கணவன் வழிபடுவதுபோல் ஒரு படிவம் வைத்திருப்பதை அறியலாம்.
(ஓவியம் ம.செ.வினுடையது)
No comments:
Post a Comment