Saturday 9 June 2012

சோழ மன்னர்கள் Later Chola Kings-III, Adhithan I.

( சோழ மன்னர்கள் -3.)

நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி !

முதலாம் ஆதித்த சோழன். (கி.பி. 881- 907)
~~~~~~~ **** ~~~~~~~
கி.பி.871 லேயே இளவரசு பட்டம் சூட்டப்பெற்ற ஆதித்தன் கி.பி. 881ல் தனது தந்தை விசயாலய சோழன் இறந்தவுடன் சோழநாட்டின் முடிசூடி அதன் ஆட்சியை ஏற்றுக்கொண்டனன். இவன் ராசகேசரி என்ற பட்டம் புனைந்துகொண்டு அரசாண்டான், இவனுக்கு கோதண்டராமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

திருப்புறம்பயத்தில் நடைபெற்றப் போரில் தோல்வியுற்ற பாண்டியமன்னன் வரகுண பாண்டியன் பின்னர் துறவுபூணவே அவனது சகோதரன் வீரநாராயணன் பாண்டிய நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்றான்.

சோழமண்டலத்தின் ஒரு பகுதியை சோழரது ஆட்சிக்குள் கொண்டு வந்தாலும் மற்றொருபகுதி பல்லவரிடமே இருந்துவந்ததால் ஆதித்த சோழன் தன் ஆட்சியின் இருபதாம் ஆண்டிற்குப்பின் பல்லவர் வசமிருந்த அப்பகுதியை கைப்பற்ற தொண்டைமண்டலம் மீது போர்தொடுத்தான்.

அப்போரில், யானைமீதிருந்து போரிட்ட பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் மீது பாய்ந்து அவனைக் கொன்றான் ஆதித்தன் என கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.

தொண்டைமண்டலப் போரில் பல்லவ மன்னனைக் கொன்றதன் மூலம் பல்லவ சாம்ராஜ்ஜியம் முழுமையும் சோழரின் ஆட்சிக்குள்வர சோழ மண்டலத்தின் வடஎல்லை ராஷ்ட்ரகூடம் வரையாயிற்று.

ஆதித்தன், பாண்டியமன்னன் வீரநாராயணன் வசமிருந்த கொங்கு நாட்டையும் வென்றான்.கொங்கு நாட்டை வென்று அங்கிருந்து பொன் கொணர்ந்து தில்லை சிற்றம்பலமுகட்டை (சிதம்பரம் நடராஜர்கோயில் கூரை) அப்பொன்னால் வேய்ந்தான்.

இதனை நம்பியாண்டார் நம்பி, தாம் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில், “சிங்கத் துருவனைச்
செற்றவன் சிற்றம் பலமுகடு- கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் ” எனப்பாடுவார்.

இப்படி பல்லவ ராஜ்ஜியத்தையும் பாண்டியர் பகுதியையும் வென்ற முதலாம் ஆதித்தன் சேரநாட்டோடு நட்பு பாராட்டி வந்தான் என்பதை சேரமன்னன் தாணுரவியின் மகளைத் தன் மகன் பராந்தகனுக்கு மணமுடித்ததிலிருந்து அறியமுடியும்.

சோழன் முதலாம் ஆதித்தனது காலத்தில் அவன் ஆட்சிக்குட்பட்ட தொண்டைநாட்டிலுள்ள கோயில் ஒன்றிற்கு கங்க நாட்டு மன்னன் இரண்டாம் பிருதிவிபதி, வெள்ளி கெண்டி அளித்தான் என்ற கல்வெட்டு செய்தியிலிருந்து ஆதித்தன் கங்க நாட்டொடும் நட்பாயிருந்தான் என்பதும் புலப்படும்.

ஆதித்த சோழன் தனது ஆட்சிக்காலத்தில் போர் நிகழ்ச்சிகள் எல்லாம் ஒருவாறு முடிவெய்திய பின்னர் சமயத் தொண்டு புரிவதற்கு தொடங்கியிருக்கவேண்டும். அதன் பயனாய் காவிரியாற்றின் இருமருங்கிலும் பல சிவாலயங்களை கட்டியுள்ளான்.

திருப்புறம்பய போரில் பெற்றவெற்றியால் சோழமண்டலம் முழுதும் மீண்டும் சோழர் ஆட்சி புரியும்பேறு கிடைத்ததால் பெரு மகிழ்ச்சியுற்ற இவ்வேந்தன் அவ்வூரில் அரிய சிற்பத்திறங்கள் அமைந்த பெருங் கற்றளியாக (கறுங்கற் பாறைகளால் ஆன கோயில் ) ஒரு கோயில் எழுப்பி அதற்கு ஆதித்தேச்சுரம் எனும் பெயரும் வழங்கினான் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆதித்த சோழனுக்கு இருமனைவியர் இருந்தனர். அவர்கள் இளங்கோப்பிச்சி, திரிபுவனமாதேவியாகிய வயிரியக்கன் ஆகியோர் ஆவர். இவர்களுள் வல்லவராயன் மகளும் ஆதித்தனின் முதல் மனைவியுமாகிய இளங்கோப்பிச்சி பட்டத்தரசி ஆவாள்.

முதலாம் ஆதித்தனுக்கு இரு புதல்வர், அவர்கள் பராந்தகன், கன்னரதேவன் ஆகியோர். இவர்களுள் பராந்தகனே போராற்றலும் மூத்தவனுமாயிருத்தலால் இவனே ஆதித்த சோழனுக்குப் பின்னர் பட்டத்திற்கு வந்தவன் ஆவான்.

முதலாம் ஆதித்த சோழன் சித்தூர் மாவட்டத்தில் திருக்காலத்திக்கு அருகாமையிலுள்ள தொன்டைமான் பேராற்றூரில் கி.பி.907-ம் ஆண்டில் இறந்தனன். அவ்வூர் இக்காலத்தில் தொண்டமானாடு என்று வழங்கபடுகின்றது.

அங்கு முதற்பராந்தக சோழன் தன் தந்தை முதலாம் ஆதித்த சோழனின் நினைவாக ஒரு பள்ளிப்படையாக (அரசனது சமாதிக்கோயில் பள்ளிபடை என்று அக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது) ஒரு கோயிலை ஏற்படுத்தினான் என்பது அக்கோயிலுள்ள கல்வெட்டால் அறியப்படுகின்றது.

தன் தந்தையின் பள்ளிபடையாகிய கோதண்டராமேசுவரத்தில் புரட்டாசித்திங்களில் ஏழு நாட்கள் திருவிழா நடத்துவதற்கும் அவ்விழா நாட்களில் ஆயிரவர்க்கு நாள்தோறும் உணவளிக்கவும் முதற்பொருளாக நூற்றைந்து கழஞ்சு பொன் பராந்தக சோழனால் கொடுக்கப்பட்டுள்ளது.

(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)


4 comments:

  1. 3வதும் வாசித்தேன் மிக்க நன்றி சகோதரா. பணி தொடரட்டும். நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. திருமதி. வேதா இலங்கா திலகம் அவர்களே,தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  3. மிக அருமையான தகவல். வாழ்த்துக்கள் 💐

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு.கார்த்திகேயன் நித்தியானந்தம்.

      Delete