Saturday 9 June 2012

சோழ மன்னர்கள் Later Chola Kings-II, Vijayalaya I.

(சோழ மன்னர்கள் -2.)

நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி !

சோழன் விசயாலயன். (கி.பி.846-881)


முத்தரையர் என்ற குறுநில மன்னர்கள் தஞ்சையையும் தஞ்சைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட ஒரு சிறு நாட்டை, தஞ்சை மாநகருக்கு மேற்கே தற்போது செந்தலை என்றழைக்கப்படும், சந்திரலேகைச் சதுர்வேதி மங்கலத்தில் இருந்து கொண்டு ஆட்சி செய்துகொண்டிருந்தனர்.

முன்பு பல்லவ மன்னர்களின் கீழ் ஆட்சி செய்துவந்த இவர்கள் பாண்டிய மன்னர்கள் பக்கம் சேரவே சோழ இராச்சியத்தை மீட்க தக்க சமயம் பார்த்துக்கொண்டிருந்த விசயாலயன் கி.பி 846 ம் ஆண்டில் முத்தரைய மன்னனைத் தாக்கி தஞ்சையைக் கைப்பற்றிக்கொண்டான். அதிலிருந்து சற்றேறக்குரைய 400 ஆண்டுகள் தஞ்சை சோழர் வசத்திலியே இருந்தது.

பாண்டியர் வசமிருந்த சோழ மண்டலத்தின் தென்பகுதியை திரும்ப கைப்பற்றுவதற்காக சோழன் விசயாலயன், பல்லவர் கங்க நாட்டு மன்னர் ( கங்க நாடென்பது மைசூர் ராஜ்ஜியத்தின் தென்பகுதியும் சேலம் மாவட்டதின் வட பகுதியும் அடங்கிய நாடு) மற்றும் மகதர் ஆகியோரின் துணை கொண்டு பாண்டியன் மாறவர்மனை எதிர்த்து கி.பி.854-ஆம் ஆண்டில் குடமூக்கில் (இப்போதய கும்பகோணம்) போரிட்டான்.

ஆனால் அம்முயற்சியில் தொல்வியுற்ற விசயாலயன், பல்லவன் நிருபதுங்க வர்மன், இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனுடன் சேர்ந்து கி.பி. 862-ம் ஆண்டில் அரிசிலாற்றங்கறையில் நடைபெற்ற போரில் பாண்டியன் மாறவர்மனை தோற்கடித்தான்.

இவ்வெற்றியால் கைப்பற்றப்பட்ட சோழ மண்டலத்தின் ஒரு பகுதி சோழன் விசயாலயனது ஆட்சிக்கும் மற்றொரு பகுதி பல்லவன் ஆட்சிக்கும் உட்பட்டதாயிற்று.

சோழ மன்னர்கள் எல்லோரும் இராசகேசரி, பரகேசரி எனற பட்டங்களையும் ஒருவர்பின் ஒருவராக மாறி மாறி புனைந்து கொண்டிருந்தனர் அவற்றுள் பரகேசரி எனும் பட்டத்தை புனைந்து கொண்டவன்தான் விசயாலயன்!

விசயாலயன் சற்றேறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கின்றான்.

பல்லாண்டுகளாய் தாழ்ந்த நிலையில் புகழ் குன்றிக் கிடந்த சோழ இராச்சியத்தை மீண்டும் நிறுவி அதனை உயர் நிலைக்கு கொண்டுவர, சோழப் பேரரசுக்கு அடிகோலிய முதல் மன்னன் ஆனதால் தன் வாழ்நாள் முழுதும் பல போர்களைப் புரிந்து காலங்கழித்த நிலையால் விசயாலயன் தன் மார்பில் தொண்ணூற்றாறு புண்கொண்டவன்.

இதை “தொண்ணூற்றின் மேலுமிரு மூன்று புண்கொண்ட வென்றிப் புரவலனுங்..” எனப் புகழ்ந்து பாடுவர் ஒட்டக்கூத்தர்!

கி.பி.871-ம் ஆண்டு தன் புதல்வன் ஆதித்த சோழனுக்கு இளவரசு பட்டம் கட்டி அரசியலில் ஈடுபடச்செய்தான்.

மாறவர்ம பாண்டியன் இறந்தபின் அவனது மகன் இரண்டாம் வரகுனன் தன் தந்தை இழந்த சோழ நாட்டுப் பகுதியை மீண்டும் கைப்பற்ற எண்ணினான். அச்சமயம் சோழமண்டலத்தின் ஒரு பகுதியை ஆண்டுவந்த பல்லவன் நிருபதுங்கன் இறக்கவே அவன் புதல்வன் அபராஜிதன் முடிசூடி ஆட்சியை கைக்கொண்டான்.

மற்றொரு பகுதியை ஆளும் விசயாலயன் முதுமை எய்தி வலி குன்றிருக்கவே இதுவே தக்க சமயம் என்றெண்ணிய இரண்டாம் வரகுன பாண்டியன் கி.பி.880-ம் ஆண்டில் சோழர் பகுதியை தாக்கினான்.

கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் தொலைவில் உள்ள மணியாற்றின் வடகரையிலுள்ள திருப்புறம்பயத்தில் பெரும் போர் நடைபெற்றது.

விசயாலயனின் புதல்வனும் இளவரசனுமாகிய முதல் ஆதித்த சோழன் பல்லவர் மற்றும் கங்கர் படைகளின் துணையோடு பாண்டியனைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடினான்.

இவ்வெற்றியால் மகிழ்ச்சியுற்ற பல்லவன் அபராஜித வர்மன் பல்லவர் ஆட்சிக்குட்பட்டிருந்த சோழமண்டலத்தின் மற்றொரு பகுதியை ஆதித்த சோழனுக்கு அளித்தான்.

இவ்வாறு, இப்போரின் பயனாக சோழர் முடி மன்னராகி சோழ மண்டலம் முழுமையும் ஆட்சிபுரியும் பேறு பெற்றனர்.

சோழர் ஆட்சி மிண்டும் நிலை பெற ஏதுவாயிருந்த இத் திருப்புறம்பயப் பெரும் போரை ஆங்கிலேயர் நடத்திய பிளாசிப் போருக்கு ஒப்பாகக் கூறலாம்.

தன் வாழ் நாள் முழுதும் போர் புரிந்து சோழப் பேரரசுக்கு அடிகோலிய விசயாலய சோழன் கி.பி.881-ம் ஆண்டு இறந்தான்.

புதுகோட்டை, நார்த்தமலைப் பகுதியில் ஒரு குன்றின் மேல் சோழன் விசயாலயன் ஏற்படுத்திய விசயாலய சோழேச்சுரம் என்ற கோயிலை இன்றும் காணலாம்.

(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)

5 comments:

  1. அவ்வப்போது கதைகள் படிக்கும் போது.. இவ் அரச பெயர்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. 2வதும் வாசித்தேன் மிக்க நன்றி நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. :)மிக்க நன்றி திருமதி.வேதா.இலங்கா திலகம்!

    ReplyDelete
  3. சோழம் சோழம் சோழம்.. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. 😊

    ReplyDelete
    Replies
    1. தங்களது கரும்பிற்கு மிக்க நன்றி. ஏனைய பதிவுகளையும் படித்து மகிழ வேண்டுகிறேன்.

      Delete
    2. கரும்பிற்கு* -கருத்திற்கு என படிக்கவும்.

      Delete