( சோழ மன்னர்கள் -44.)
பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் இம்முயற்சி!
விக்ரம சோழன். (கி.பி.1118- 1135)
~~~~~~~ **** ~~~~~~~
(மூன்றாம் பகுதி)
தலைநகரம், அரண்மனை, கொட்டகாரங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விக்ரம சோழனின்
ஆட்சிக்காலத்தில் சோழப்பேரரசின் தலை நகரமாக விளங்கியது இம்மன்னனின் தந்தைக்கு தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரமே ஆகும். அதேவேளையில் இம்மன்னனது காலத்தில் இரண்டாவது தலைநகராக, தற்போது முடிகொண்ட சோழபுரம் என்று அறியப்படும், பழையாறை
நகரம் இருந்து வந்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகின்றது.
விக்ரம சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் அரண்மனை தில்லைமாநகரிலும் (சிதம்பரத்திலும்), காட்டுமன்னார்கோயிலிலும் இருந்தன என அறியமுடிகின்றது.
இவை தவிர்த்து தனது பேரரசைப் பார்வையிட மன்னன் வருகின்ற காலத்தில் தங்குவதற்காக, அரண்மனை இல்லாத பகுதிகளில் பெரும் மண்டபங்கள் அமைக்கப் பெற்றிருந்தன. அக்காலத்தில் அம் மண்டபங்கள் யாவும் கொட்டகாரங்கள் என்று அழைக்கப்பட்டன.
தில்லை(சிதம்பரம்) பெரிய கோயிலுக்கு விக்ரம சோழனின் திருப்பணிகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விக்ரம சோழன் தனது
ஆட்சிக்காலத்தில்,
தனது
ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்கள் அளித்த திறையினைக் கொண்டு, தில்லை(சிதம்பரம்) பெரிய
கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்தான் என்பதை அவனது மெய்கீர்த்திகள் தெளிவாக்குகின்றன. மேலும்
அத்திருப்பணிகள் யாவும் இம்மன்னனது ஆட்சிக்காலத்தின் பத்தாம் ஆண்டின் சித்திரை மாதத்தில்
முடிவுபெற்ற செய்தியையும் அவை தெரிவிக்கின்றன. தில்லை
சிற்றம்பல திருச்சுற்று மாளிகைக்கு,
(அதாவது, தற்போது உற்சவ
மூர்த்தி நடராஜர் சிலை அமைந்துள்ள மண்டபத்திற்கு) பொன்னாலான கூரை
வேய்ந்தது, மேலும், அங்குள்ள கோபுர
வாயிலுக்கும், பலி
பீடத்திற்கும், கூடசாலைக்கும் பொன் வேய்ந்ததையும் அறியமுடிகின்றது.
மேலும், விக்ரம சோழன் தான் பிறந்த உத்திரட்டாதி நாளில் நடைபெரும் விழாவில் வலம் வரும் திருத்தேருக்குப் பொன்வேய்ந்து அதற்கு முத்துக்களால் ஆன வடங்கள் (தேரை இழுத்துச்செல்ல அமைக்கப்படும் கயறு) அளித்தான் என்பதையும் அறியமுடிகின்றது. இவையன்றி, அக்கோயிலின் இறைவனுக்கு அமுது படைக்க பொன்னாலான கலன்களையும்(பாத்திரங்களையும்) அளித்தான் என்பதையும் அறியமுடிகின்றது.
தில்லை(சிதம்பரம்) பெரிய கோயிலில் பொன்னால் செய்யப்பட்ட கற்பகத்தரு (தற்போது உற்சவ மூர்த்தி நடராஜர் சிலை அமைந்துள்ள இடத்திற்கு அருகே, சிதம்பர ரகசியமாகக் காட்டப்படும் சிறு அறையில் காணப்படும் வில்வ மரம்) ஒன்றையும் அமைத்தான் என்கின்ற செய்தியையும் அவனது மெய்கீர்த்தி மூலம் அறியமுடிகின்றது.
தில்லை சிற்றம்பலத்தையொட்டி அமைந்துள்ள முதலாம் திருச்சுற்றை(பிராகாரத்தை)ச் சூழ்ந்துள்ள திருமாளிகை “விக்கிரம சோழன் திருமாளிகை” என்று கல்வெட்டுக்கலால் அறியப்படுவதால் அத்திருப்பணி விக்கிரம சோழனால் நிறைவேற்றப்பட்டிருத்தல் வேண்டும்.
தில்லை(சிதம்பரம்) பெரிய கோயிலில் நூற்றுக்கால் மண்டபத்தினை மன்னன் விக்ரம சோழன் அமைத்தான் என்பதையும் கல்வெட்டுக்கள் தெளிவுபடுத்துகின்றன.
இம்மன்னனின் கட்டளையின்படி இவனது படைத்தலைவன் அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவன் பொன்னம்பலவாணர் எனப் போற்றப்படும் தில்லை இறைவன் மாசிமாதம் மக நாளில் எழுந்தருளி கடலாடி வீற்றிருக்க பெரிய மண்டபமும் பெரு வழியையும் அமைத்தான் என்பதும் அம்மண்டபம் தில்லை(சிதம்பரம்) அருகே உள்ள கிள்ளை எனும் ஊரில் இருப்பதும் அறியமுடிகின்றது.
முதலாம் பராந்தகனது காலந்தொட்டே சோழமன்னர்கள் தில்லை நகர் கோயிலிலும் திருவரங்க கோயிலிலும் திருப்பணிகள் செய்து வந்ததை விக்ரம சோழனும் மேற்கொண்டான் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
விக்ரம சோழனது பிற சிறப்பு பெயர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இம்மன்னனது ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்
வெட்டுக்கள் மூலமாகவும்,
இம்மன்னனைக்
குறித்து இயற்றப்பட்ட விக்ரம சோழனுலாவின் மூலமாகவும் அறியக்கூடிய சிறப்பு பெயர்கள்
இரண்டாகும். அவை “தியாகசமுத்திரம்” என்பதுவும் “அகளங்கன்” என்பதுவும்
ஆகும்
“தியாகசமுத்திரம்”
~~~~~~~~~~~~~~~~~~~
விக்ரம சோழன் தனது ஆட்சிக்காலத்தின் ஏழாம் ஆண்டில் திருஇடைமருதூர்(திருவிடைமருதூர்) எனும் ஊருக்குச்
சென்றிருந்த வேளையில் அந்நகரைச் சார்ந்த வண்ணக்குடி எனும் ஊரினைத் தியாகசமுத்திர
சதுர்வேதி மங்களம் எனம் புதிய பெயரினை சூட்டி திருஇடைமருதூர் கோயிலுக்கு இறையிலி
நிலமாக தேவதானமாக அளித்தான் என்று அவ்வூர் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. அதுமுதல்
அவனுக்கு அச்சிறப்பு பெயர் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.
“அகளங்கன்”
~~~~~~~~~~~~~
இம்மன்னனை, கவிச்சக்கரவர்த்தி
ஒட்டக்கூத்தர் தனது விக்ரம சோழனுலாவில் ஏழு இடங்களில் “அகளங்கன்” எனக்
குறிப்பிடுகின்றார்.
மேலும்
அக்காலத்தில் “அகளங்காபுரம்” என்ற பெயரில்
சில ஊர்கள் இருந்து வந்தமையாலும் இம்மன்னனுக்கு “அகளங்கன்” என்ற சிறப்பு
பெயர் வழங்கப் பெற்றுவந்ததை அறியமுடிகின்றது.
விக்ரம சோழனின் அவைப் புலவர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விக்ரம சோழனின் அவைக்களப் புலவராக
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டக்கூத்தர்
விக்ரம சோழன் மீது நூல் ஒன்றை இயற்றி அதற்கு
விக்ரம சோழனுலா என்ற பெயரையும் இட்டார். இதுவன்றி, இக்
கவிச்சக்கரவர்த்தி,
இரண்டாம்
குலோத்துங்க சோழன் மீது குலோத்துங்க சோழனுலாவையும் இரண்டாம் இராசராச சோழன் மீது இராசராச
சோழனுலாவையும் பாடியுள்ளார் என்பதும் சிறப்பாகும். இவர் இயற்றிய
இம்மூன்று நூல்கள்தான் “
மூவர் உலா “ என்று
அறியப்படுகின்றது.
பேரரசை வாட்டியப் பெரும் பஞ்சம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“இவ்வூர்
யாண்டாவது ஆறாவது பெருவெள்ளம் கொண்டு ஊரும் போகமும் அழிந்து அநர்த்தப்பட்டு” என்று வட
ஆர்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள திருவொத்தூரில் கிடைத்த கல்வெட்டில்
காணப்படும் செய்தியின் மூலமும்,
“மகாசபையோம் இவ்வூர்த் திருமேற் கோயிலான நியாய பரிபாலன விண்ணகராழ்வார் கோயிலிலே கூட்டம் குறைவறக் கூடியிருந்து நம்மூர் யாண்டு 6வது கடமைத் தட்டுண்டாய் இத்தட்டுக்குச் சமுதாயமான நிலத்திலே சிறிது நிலம் விற்றாயினும் கடமைத்தட்டுபோக்கறுக்க வேணுமென்று மகாசபையோம் சம்மதித்து” என்று தென் ஆர்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள திருவதிகை எனும் ஊரில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டில் காணப்படும் செய்தியின் மூலமும் விக்ரம சோழனது ஆட்சிக்காலத்தின் ஆறாம் ஆண்டில் சோழராச்சியத்தின் தொண்டை மண்டலத்திலும், நடுநாட்டிலும் பெரியவெள்ளம் ஏற்பட்டு அதனால் அப்பகுதிகளில் கொடிய பஞ்சம் உண்டாகியிருந்தது என்பதை அறியமுடிகின்றது.
மேலும், விக்ரம சோழனது ஆட்சிக்காலத்தின் பதினோராம் ஆண்டில் சோழராச்சியத்தில் பஞ்சம் ஏற்பட்டதை தஞ்சை, கோவிலடியில் கிடைக்கப்பெற்றக் கல்வெட்டில் காணப்படும் “ இவ்வூர் வடபிடாகை திருச்சடை முடியுடைய மகாதேவர் கோயிலில் திருமண்டபத்தில் கூட்டம் குறைவறக்கூடியிருந்த்து பண்ணின பரிச்சாவது காலம் பொல்லாதாய் நம்மூர் அழிந்து குடியோடிப்போய் கிடந்தமை” என்கின்ற செய்தியின் மூலமும் அறியமுடிகின்றது.
இவ்வாறாக பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மன்னனும் பெருந்தனக்காரர்களும் பெருமளவு பொருள்களை அளித்து மக்களின் துயரைப்போக்கியதையும் அறியமுடிகின்றது.
(தொடரும்)