Thursday, 11 October 2012

சோழ மன்னர்கள் Later Chola Kings-XI, Rajendra Chozhan I


                                 (சோழ மன்னர்கள் -21,22,23,24,25,26,27.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம்…. பேசுகின்றோம்… நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் இம்முயற்சி !
முதலாம் இராசேந்திர சோழன் கி.பி.1012-1044.
( முதல் பகுதி )
திருவாதிரையில் பிறந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      இம்மன்னன், சோழப்பேரரசன் முதலாம் இராசராசனுக்கு அவனது தேவியருள் ஒருவரான வானவன்மாதேவி எனும் திரிபுவனமாதாவியின்பால் பிறந்த புதல்வன் ஆவான். 

      திருவொற்றியூரில் உள்ள கல்வெட்டொன்று இவன் மார்கழித்திங்கள்
திருவாதிரை நாளில் பிறந்தான் என்று கூறுகின்றது. விருத்தாசலம் கல்வெட்டொன்று திருமுதுகுன்றமுடயார் கோயிலில் திங்கள் தோறும் திருவாதிரை நாளில் விழா நடத்துவதற்கு நிலம் அளிக்கப்பெற்ற செய்தியைக் கூறுகின்றது. இவற்றால் இம்மன்னன் திருவாதிரை நாளில் பிறந்தவன் என்பதை அறியலாம்.

இயற்பெயர்.
~~~~~~~~~~~~~   
     இம்மன்னனுக்கு இவன் தந்தை இட்டபெயர் மதுராந்தகன் என்பதை திருவாலங்காட்டுச் செப்பேடுகளாலும் கன்னியாகுமரிக் கல்வெட்டும் கூறுகின்றன.

      இராசராச சோழன் தனது சிறிய தந்தை உத்தமசோழன் எனும் மதுராந்தகன் மீது தனக்கிருந்த பேரன்பின் காரணமாய் தன் மகனுக்கும் அவன் பெயரையே சூட்டினான் என்பதை இதனால் உணரலாம்.

      திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இவனை “நெற்றிக்கண் காணாத காமவேள்” என்று கூறுவதால் இவன் தன் பாட்டனாகிய சுந்தரசோழனைவிட அழகில் சிறந்தவனாய் இருந்திருத்தல் வேண்டும்.

   கி;பி. 1012 –ஆம் ஆண்டில் இராசராசசோழன் இவனுக்கு இளவரசுப்பட்டம் கட்டிய நாளில் இராசேந்திரன் என்ற அபிஷேகப் பெயர் வழங்கியமையால் இவன் தன் ஆட்சிக்காலம் முழுமையும் அப்பெயருடன் விளங்கினான்.

       கி.பி.1014- ஆம் ஆண்டு இராசராசசோழன் இறந்தவுடன் இவன் முடிசூட்டப்பெற்று சோழ இராச்சியத்திற்கு சக்ரவர்த்தியானான். இவன் ஆட்சிக்கு வந்தபோது சோழ இராச்சியம், இக்கால முழுமைமையான தமிழகத்தோடு, ஆந்திரா மற்றும் மைசூர்ப் பகுதிகளையும், ஈழநாட்டின் ஒரு பகுதியையும் தன்னகத்தே கொண்ட ஒரு சிறந்த இராச்சியமாய் இருந்தது எனலாம்.

பரகேசரி
~~~~~~~~~     
      சோழ மன்னர்கள் தாம் ஆட்சிக்கு வரும்பொது ஒருவர் பின் ஒருவராய் மாறி மாறி புனைந்து வைத்துக்கொண்ட இராசகேசரி, பரகேசரி எனும் பட்டப்பெயர்களில் இவன் தனக்கு பரகேசரி எனும் பட்டம் புனைந்து கொண்டான்.

மெய்க்கீர்த்தி
~~~~~~~~~~~~~
      இவனது மெய்க்கீர்த்தி ‘திருமன்னி வளர இரு நில மடந்தையும்- போர்ச்சயப் பாவையும் சீர்த் தனிச் செல்வியும்- நன்பெருந் தேவியராகி இன்புற’ என்று தொடங்குகின்றது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
       இவனது ஆட்சிக்காலத்தில் வட திருவாலங்ககாட்டுக் கோயிலுக்கு விடப்பட்ட நிவந்தங்களை உணர்த்தும் இவனது திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இவனது முன்னோர் வரலாற்றை நன்கு விளக்குகின்றன.    
       
      இச்செப்பேடுகள், இவனது மெய்க்கீர்த்தியில் காணப்படும் செய்திகளை உறுதிப்படுத்துவதாலும் பண்டைச் சோழ மன்னர்களின் வரலாற்றைக் கூறுவதாலும் வரலாற்று ஆராய்ச்சிக்கு இன்றியமையாதனவாகும்.

இடைதுறை நாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மண்ணைக் கடக்கம்
வென்றது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      முதலாம் இராசேந்திர சோழன் கிருஷ்ணா மற்றும் துங்கபத்திரா ஆகிய நதிகளுக்கிடையான இடைதுறை நாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மண்ணைக் கடக்கம் ஆகியவற்றை வென்று தன்னடிபடுத்தினான் என்று இவனது ஆட்சிக்காலத்தின் மூன்றாமாண்டுக்
கல்வெட்டுக்கள் கூறுகின்றன.           

இடைதுறை நாடு
~~~~~~~~~~~~~~~~~~
       இடைதுறை நாடு என்பது இக்காலத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ரெய்ச்சூர் மாவட்டமும் முன்னர் பம்பாய் மாகாணத்திலிருந்த ரெய்ச்சூரின் பகுதிகளையும் உள்ளடக்கியது. அதனை ‘எடத்தோர் இரண்டாயிரம்’ என்றும் அந்நாட்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

வனவாசி
~~~~~~~~~~
       வனவாசி என்பது கங்கபாடி நாட்டிற்கு வடக்கிலும் நுளம்பாடி நாட்டிற்கு மேற்கிலும் இருந்த ஒரு நாடாகும். அதனை வனவாசிப் பன்னீராயிரம் என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

கொள்ளிப்பாக்கை
~~~~~~~~~~~~~~~~~~     
       கொள்ளிப்பாக்கை என்பது முந்நாள் ஹைதராபாத் மாகாணத்தின்  ஒருபகுதியாய் இருந்த, தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பார்க் மாவட்டமாகும். இது மேலைச்சாளுக்கியரது ஆட்சியின் கீழிருந்த நாடாகும்.

       “சுள்ளிச்சூழ் மதில் கொள்ளிப்பாக்கை” என்று கல்வெட்டுகள் கூறுவதால் அது சிறந்த மதில்களை அரணாய்க்கொண்ட ஒன்றாய் விளங்கியிருத்தல் வேண்டும்.

மண்ணைக் கடக்கம்
~~~~~~~~~~~~~~~~~~~~~      
        மண்ணைக் கடக்கம் என்பது குல்பார்க் மாவட்டத்தில் உள்ள மான்யகேடா என்பதாகும். இது இராஷ்ட்ரகூடர்களுக்கும் பின்னர் மேளைச்சாளுக்கியர்களுக்கும் தலைநகராய் விளங்கியதாகும்.

       வடக்கிலிருந்து பரமாரக்குலத்து மன்னர்களும் தெற்கிலிருந்து சோழ மன்னர்களும் அதன் மீது அடிக்கடி படையெடுத்து வந்தமையால் மேளைச்சாளுக்கியர் தம் தலைநகரை கல்யாணபுரத்திற்கு மாற்றிகொண்டனர்.

       மேலைச்சாளுகியரது ஆட்சிக்குட்பட்ட இடைதுறை நாடு, வனவாசி, கொள்ளிப்பாகை, மண்ணைக்கடக்கம் என்பனவற்றின் மீது
முதலாம் இராசேந்திர சோழன் படையெடுத்துச்சென்று வெற்றி எய்திய
செய்தி இவன் ஆட்சியின் தொடக்கத்திலேயே வரையப்பட்டுக் காணப்படுகின்றன.

       இராசேந்திரனின் மெய்கீர்த்தியில் அடுத்து கூறப்படுவது அவனது ஈழப்படையெடுப்பு பற்றியதாகும்.

                                                                                                                             

( இரண்டாம் பகுதி )

ஈழப் போர்.
~~~~~~~~~~~~
       முதலாம் இராசராச சோழனின் ஈழப் படையெடுப்பில் தொல்வியுற்று ஓடி ஒளிந்த இலங்கையின் சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன் சில ஆண்டுகளுக்குப் பிறகு, சோழர் ஆட்சிகுட்படாத அத்தீவின் தென்கிழக்கிலிருந்த ரோகண நாட்டிலிருந்துகொண்டு பெரும்படையொன்றைத் திரட்டி சோழர்கள் மீது படையெடுத்து, தான் இழந்த நாட்டைக் கைப்பற்ற முயன்றான்.

       இதனாலேயே முதலாம் இராசேந்திர சோழன் கி.பி.1017 –ல் ஈழ நாட்டின்மேல் மீண்டும் படையெடுத்துச் செல்ல வேண்டியது இன்றியமையாததாயிற்று.

        அப்படையெடுப்பினால் ஈழத்தில் நிகழ்ந்த போரில் இவன் வெற்றிபெற்றதோடு சிங்கள மன்னர்களுக்கு வழிவழி உரிமையுள்ள சிறந்த முடியையும் [ கிரீடம் ] கைப்பற்றிக்கொண்டுச் சோழ நாட்டிற்குத் திரும்பினான்.

       அதோடு மட்டுமில்லாது முன்னர், முதலாம் பராந்தக சோழன் காலத்தில் வாழ்ந்த மூன்றாம் இராசசிம்ம பாண்டியன், சோழர் படையிடம் தோல்வியுற்று,  அப்போதிருந்த இலங்கை வேந்தனிடம் அடைக்கலமாய் புகுந்த காலத்தில் வைத்துச்சென்ற ‘பாண்டியர் முடி’யையும், அம் மன்னர்குல முன்னோர்க்குச் சொந்தமான ‘இந்திரன் ஆரத்தையும்’ முதலாம் இராசேந்திரன் கைப்பற்றிக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

      முதலாம் பராந்தக சோழனிடம் போரில் தோற்றதால் இலங்கை வேந்தனிடம் அடைக்கலம் புகுந்த பாண்டிய மன்னன், பின்னர்,  தன் முன்னோரின் முடியினையும், அவர்தம் குலத்திர்க்குரிய இந்திரன் ஆரத்தையும் சிங்கள வேந்தனிடம் அடைக்கலமாய்  வைத்துச் சென்றதறிந்த பராந்தக சோழன், அவற்றைக் கைப்பற்றவே, ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னர், ஈழம் மீது போர்தொடுத்தான்.

       அப்போரில் பராந்தக சோழன் வென்றாலும், பாண்டியர் குல முடியும் ஆரமும் சிங்களரால் பதுக்கப்பட்டதால், அக்காலத்தில், பராந்தக சோழனால் அவற்றை சோழ நாட்டிற்கு கொண்டுவர முடியவில்லை.

       எனினும், அவன் பேரனுக்குப் பேரனாகிய முதலாம் இராசேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் அது நிறைவேறியது.

       முதலாம் இராசேந்திர சோழனோடு நடந்த போரில் புறங்காட்டி தொல்வியுற்ற, சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன் சோழர் படையால் சிறைபிடிக்கப்பட்டு சோழ நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டான் என்றும் அங்கு பன்னிரெண்டு ஆண்டுகள் வாழ்ந்து, அங்கேயே அம்மன்னன் உயிர்துறந்தான் என்றும் இலங்கையின் மஹாவம்சம் கூறுகின்றது.

       சிறைபிடிக்கப்பட்டுச் சோழநாட்டிற்கு கொண்டுவந்தபின், சிங்கள மன்னன் மகிந்தன், சோழமன்னன் முதலாம் இராசேந்திரனுக்கு பணிந்துவிட்டான் என்று தஞ்சாவூர் கோனேரிராசபுரத்திலுள்ள கல்வெட்டொன்று கூறுவது அதனை உறுதிசெய்கின்றது. 

       ஆகவே, முதலாம் இராசேந்திர சோழனின் அப்படையெடுப்பின் பயனாக ஈழநாடு முழுவதும் இராசேந்திரனது ஆட்சிக்குட்பட்டுவிட்டது என்பது திண்ணம். ஈழநாட்டில் காணப்படும் முதலாம் இராசேந்திரனது கல்வெட்டுக்கள் சிலவற்றாலும் இதனை அறிய முடிகின்றது.

சேரர் மீது படையெடுப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

       முதலாம் இராசேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தின் ஆறு, மற்றும் ஏழாம் ஆண்டுகளில் வரையப்பெற்றக் கல்வெட்டுக்கள் இவன் சேரநாட்டின் மேல் படையெடுத்துச் சென்று அந்நாட்டரசர்க்கு வழிவழி உரிமையானவையாய் இருந்த முடியையும், மாலையையும் கைப்பற்றிக்கொண்டு வந்தானென்றும், எவருக்கும் கிடைத்தற்கரிய, மிகுந்த அரண்களையுடைய சாந்திமத்தீவில் பரசிராமனால் வைக்கப்பட்டிருந்த செம்பொன் முடியையும் கவர்ந்து வந்தான் என்றும் உணர்த்துகின்றன.
    
       பரசிராமனால் பண்டை வேந்தர்கள் அடைந்த அல்லல்களைக் கேள்வியுற்ற முதலாம் இராச்ந்திர சோழன், அவன் அமைத்த நாட்டைக் கைப்பற்ற விரும்பி மலையமலையைக் கடந்துசென்று சேர மன்னரோடு பெரும்போர் புரிந்து வெற்றி எய்தினானென்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுவதும் இதையே உறுதிசெய்கின்றன.

(மூன்றாம் பகுதி )

சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன்.

         புதுச்சேரி மாநிலம், திருவண்டார் கோயிலில் வரையப்பட்டுள்ள இவனது ஆட்சியின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டொன்று “பாரது நிகழப் பாண்டி மண்டலத்து மதுரையில் மாளிகை எடுப்பித்துத் தன்மகன் சோழ பாண்டியன் என்றபிஷேகஞ் செய்து தண்டாற்சாலைக் கலமறுத்த கோப்பரகேசரி” என்று கூறுகின்றது.

        இதிலிருந்து  மதுரைமாநகரில் ஓர் அரண்மனை எடுப்பித்து அங்கு தன் மகனை ‘சோழ பாண்டியன்’ எனும் பட்டத்துடன் முடிசூட்டி பாண்டி நாட்டை ஆண்டுவருமாறு செய்தனன் என்பது தெரியவருகின்றது. தந்தையின் ஆணைப்படி மதுரையிலிருந்து பாண்டி நாட்டை ஆண்டு வந்த சோழர்குலத்தோன்றலாகிய அவனுக்குச் சுந்தரசோழ பாண்டியன் என்ற பட்டத்துடன் அந்நாட்டின் வழக்கப்படி ‘சடையவர்மன்’ என்ற பட்டமும் இராசேந்திரனால் வழங்கப்பட்டு விளங்கியது. திருநெல்வேலி மன்னார்கோயிலில் வரயப்பட்டுள்ள கல்வெட்டொன்று கூறுவதிலிருந்து அது கி.பி.
1018 –ல் நடைபெற்றிருக்க வேண்டுமென அறியலாம்.

       பாண்டி நாட்டை ஆண்டுவந்த சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியனுக்கு சேரநாட்டின் ஆட்சிப்பொறுப்பும் இராசேந்திரனால் அளிக்கப்பட்டிருந்தமை சேரநாட்டில் காணப்படும் கல்வெட்டுக்களால் புலனாகின்றது.

       இராசேந்திர சோழனின் இச்செயல் பிற்காலத்திய ஆங்கிலேய அரசர்கள் அவர்தம் பேரரசின் பகுதியை ஆள ‘வைஸ்ராய்’ ஒருவரை நியமித்ததற்கு இணையாய்க் கருதலாம்.

இராசேந்திரனின் ‘கங்கை கொண்ட’ வடதிசைப் போர்.

      முதலாம் இராசேந்திர சோழனின் ஆட்சியின் பதினொன்றாம்
ஆண்டுக் கல்வெட்டில் இவனது வடநாட்டு படையெடுப்பும், வீர்ச்செயல்களும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. அந்நிகழ்வுகள் யாவும் கி.பி. 1023 ம் ஆண்டிற்கு முன்னர் நடைபெற்றிருக்கவேண்டும்.

      முதலாம் இராசேந்திர சோழனின் வடநாட்டு படையெடுப்பிற்கு காரணம் அவன் தனது ஆட்சியின்போது தனது நாட்டிற்கானப் புதிய தலைநகர் ஒன்றை அமைக்கத் தொடங்கியிருந்தான், அது நிறைவேறியவுடன் அந்நகரம் தூய்மையுடையதாகக் கருதி மக்கள் அங்கு குடியேறும் பொருட்டு அந்நகரைக் கங்கை நீரால் புனிதமாக்குவதற்கு இவன் எண்ணியிருக்கவேண்டும், அவ்வாறு கொண்டுவரும்போது அத்திசையில் உள்ள வேந்தர்களையும் போரில் வென்று அதனைக் கொணர நினைப்பது வீரம் நிறைந்த குடியில் தோன்றிய பேரரசன் ஒருவனுக்கு இயல்பேயாகும்.

         இதனையே, திருவாலங்காட்டுச் செப்பேடுகள் ‘கங்கை நீரைக் கொணர்ந்து தன் நாட்டை தூய்மையாக்குவதற்குக் கருதினமையேயாம்‘ எனக் கூறியிருத்தல் வேண்டும்.

        அன்றியும், கங்கை நீரைச் சோழநாட்டிற்குக் கொண்டு வருவது அதன் கரைவரையிலுள்ள மன்னர்களைப் போரில் வென்று வாகை சூடினால்தான் எளிதில் நிறைவேறும் என்றும் அவன் கருதியிருக்கலாம்.
எனவே தன் படைத் தலைவனைப் பெரும்படையுடன் வடக்கே அனுப்பி, கங்கை வரையிலுள்ள அரசர்களை வென்று அவர்களது தலைகளில் கங்கை நீர் நிறைந்த குடங்களைக் கொண்டுவருமாரு ஆணையிட்டனன். சோழர் படையும் புறப்பட்டது.

         கோதாவரி, கிருஷ்ணை ஆகிய பேராறுகளுக்குமிடையே உள்ள வேங்கிநாடு சோழர்க்கு நெருங்கிய உறவினரான கீழைச்சாளுக்கிய மன்னர்களால் அந்நாட்களில் ஆளப்பட்டு வந்தமையாலும் அந்நாட்டுக்குத் தெற்கேயிருந்த நாடுகள்யாவும் இராசேந்திரனின் ஆட்சிக்குட்பட்டிருந்ததாலும் அப்படையெழுச்சி வேங்கி நாட்டிற்கு வடக்கே தொடங்கிற்று எனலாம். அதில் முதலில் கைப்பற்றப்பட்டது சக்கரக்கோட்டமேயாகும்.

சக்கரக்கோட்டம்.

     சக்கரக்கோட்டம் என்பது, தற்போதய ஆந்திர மாநிலத்திற்கும் வடமேற்கே, அப்போதைய, வத்ச இராச்சியத்தில் இருந்த ஒரு
நகரமாகும். அது அவ்விராச்சியத்தின் தலைநகராகிய இராசபுரத்திற்கு அருகிலே இருந்தவொன்று. இந்திராவதி ஆற்றின் தென்கரையில் உள்ளது.

       இக்காலத்தில் சட்டீஷ்கர் மாநிலத்தில் உள்ள அந்நகரம், தற்போது, ‘சின்ன நயாகரா’ என்று கூறப்படும் “சித்திரக்கூட்” ஆகும்.

        நாகர் மரபினர் எனவும் போகவதி புரத்தலைவர் எனவும் கூறிக்கொண்ட அரச வழியினர் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் அச் சக்கரகோட்டத்திலிருந்து ஆண்டு வந்தனர். இராசேந்திரனுடைய படைத்தலைவனால் கைப்பற்றப்பட்ட மதுரைமண்டலம் நாமணைக்கோணம், பஞ்சப்பள்ளி ஆகிய இடங்கள் அந்த வத்ச இராச்சியத்தில் இருந்திருத்தல் வேண்டும்.



( நான்காம் பகுதி )

கங்கை கொண்ட சோழன்.

     பின்னர் சோழர் படையின் தளபதி, இந்திராதன் என்பவனை தோற்கடித்து, ஒட்டர நாட்டையும் மற்றும் மகா கோசலம் என்றழைக்கப்பட்ட கோசல நாட்டையும் வென்றான்.

      பின்னர் அச்சோழத் தளபதி, ஒட்டர நாட்டிற்கும் வங்காளத்திற்கும் இடையில் அமைந்திருந்ததும் சொர்ணரேகை ஆற்றின் இருகரையிலும் பரவியிருந்த தன்மபாலனுடைய தண்டபுத்தியயையும் [தற்போதைய மேற்கு வங்க மாநிலத்திலுள்ள உள்ள மிதினாபூர் (
Midnapore) மாவட்டம் அடங்கிய நிலப்பரப்பு ஆகும்], இரணசூரனது தக்கணலாடத்தையும் [ஹூக்ளி ஹவுரா மாவட்டங்கள் அடங்கியது], கோவிந்த சந்தனுக்குரிய வங்காள தேசத்தினையும் [தற்போதைய மேற்கு வங்க மற்றும் வங்காள தேசத்தையும் கொண்ட பகுதியின் கீழ் பகுதியாகும்], வென்று கங்கை நதிக்கரையை அடைந்தான் என்று இராசேந்திரனின் மெய்கீர்த்தி கூறுகின்றது.

      தற்சமயம், விழுப்புரம் மாவட்டதில் உள்ளதான ‘ஈசாலம்’ எனும் சிற்றூரில் உள்ள சிவன் கோயில் பகுதியில் கி.பி. 1987 –ல் தற்செயலாய் கண்டெடுக்கப்பெற்ற, 34.செ.மீ. நீளமும் 16.5 செ.மீ.  அகலமும் கொண்ட  பதினைந்து  ஏடுகளைத் தன்னுள் கொண்ட சமஸ்கிரத மற்றும் கிரந்த எழுத்துக்களால் வரையப்பெற்ற முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய செப்பேடுகளும் இதனைக் கூறுகின்றன.
 
      கி.பி. பதினோறாம் நூற்றாண்டில், பால மரபினர் வழி வந்த மகிபாலகன் என்பவன் வடக்கே காசி முதல், தண்டபுத்தி, தக்கணலாடம், வங்காள நாடு உள்ளிட்ட  நாடுகளின் குறுநில மன்னர்களைக் கொண்ட பேரரசை ஆண்டுவந்த பேரரசனாகத் திகழ்ந்தனன்.


     சோழர்படை, முதலில் அப்பக்கத்திலிருந்த குறுநில மன்னர்கள் எல்லோரையும் வென்று இறுதியில் பேரரசனான மகிபாலகனையும் போரில் புறங்காட்டி ஓடும்படி செய்து, மேற்கண்டவாறு கங்கையை அடைந்தது என்ற செய்தி அவர்தம் போர் யுக்தியை பறைசாற்றுகின்றது.

    அப்படையெடுப்பின்போது இராசேந்திரனின் படைத்தலைவன் கங்கைப் பேராற்றில் யானைகளை வரிசையாக நிறுத்திப் பாலம் அமைத்து அவற்றின் மீது தன் படைகளைச் செலுத்தி அவ்வாற்றை எளிதில் கடந்தான் எனும் அரிய செய்தியை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுவதன் மூலம் இராசேந்திர சோழனது படையின் வலிமையை அறியலாம்.

    பின்னர், போரில் தோல்வியுற்ற மன்னர்களின் தலைகளில் கங்கைநீர் நிரம்பிய குடங்களையும் வைத்துக்கொண்டு தன் நாட்டிற்கு திரும்பினான் சோழர்படைத் தளபதி.

     வெற்றி பெற்ற நாடுகளைச் சோழர் படை கடந்து முன்னேறிய பின்னர் அங்கு கலகங்கள் ஏற்படின் அவற்றை அடக்கவும் தனது படை எவ்வித இடர்பாடும் இல்லாது நாடு திரும்ப ஏதுவாகவும் முதலாம் இராசேந்திரன் பெரும்படையுடன் சென்று கோதாவரி ஆற்றின் கரையோரம் காத்திருந்து கங்கை நீரை நாட்டிற்குக் கொண்டுவந்தான் எனும் செய்தி அவனது இராஜதந்திரத்தையும், பராக்கிரமத்தையும் கூறுவதாய் உள்ளது.

      தற்சமயம், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தென்மேற்கே பத்து மைல் தொலைவில் உள்ளதும் திருலோக்கி என்றழைக்கப்படும் திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்களத்திலுள்ள கல்வெட்டொன்றில் இராசேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்துத் திருவடி தொழுதுஎன்றுக் கூறப்படுறது.

      தற்சமயம், விழுப்புரம் மாவட்டம், எண்ணாயிரம் எனும் ஊரில் காணப்படும் கல்வெட்டொன்றில்
உடையார் ஶ்ரீ இராசேந்திர சோழத்தேவர் உத்தராபதத்தில் பூபதியரை ஜயித்தருளி யுதோச்வ விபவத்தால் கங்காபரிக்கிரகம் பண்ணியருளின கங்கை கொண்ட சோழனென்னுந் திருநாமத்தால் இத்திருமுற்றத்தில் வைத்தருளின என்னும் செய்தி வரையப்பெற்றுள்ளது.

       இவ்வேந்தன் கங்கையைக் கொண்டுவந்தமையும் அதுபற்றிப்

புரிந்த வீரச் செயலும், அறச் செயலும் அதில் எழுதப் பட்டிருத்தல் அறியத்தக்கது. வடவேந்தரை வென்று கங்கை நீரைத் தம் நாட்டிற்கு கொண்டு வந்த அருஞ்செயல் காரணமாய் முதலாம் இராசேந்திரன் கங்கை கொண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயர் எய்தினான் என்பதும் அக்கல்வெட்டால் அறியமுடிகின்றது.

      அப்படையெடுப்பின் காரணமாக படையுடன் சென்ற சோழர் படைத் தலைவர்களுள் ஒருவன் வங்கத்திலேயே தங்கிவிட்டனன் என்றும் அவன் வழியில் வந்த சாமந்தசேனன் என்பவனே பிற்காலத்தில் வங்கத்தை ஆட்சிபுரிந்த சேன மரபினரின் முதல்வன் என்றும் வரலாற்று அறிஞர் கூறுவர்.

      மேலும், அப்படையெடுப்பின் பயனாக தமிழர் நாகரீகம் வங்காள நாட்டில் புகுந்தது என்பதை ஐயமறக் கூறலாம்.




( ஐந்தாம் பகுதி )


கடாரம் கொண்ட சோழன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     முதலாம் இராசேந்திர சோழனது ஆட்சியின் பதிமுன்றாம் ஆண்டில் வரையப்பெற்ற கல்வெட்டுக்களில் காணப்படும் மெய்கீர்த்தி, இவன் தனது கப்பற்படைகளைக் கடலில் செலுத்திக் கடாரம் கொண்ட செய்தியை விரிவாகக் காணமுடிகின்றது.
இராசராச சோழனின் ஆட்சியின் பிற்பகுதியிலும் முதலாம் இராசேந்திரனின் ஆட்சியின் முற்பகுதியிலும் சோழ இராச்சியமும் கடார இராச்சியமும் தம்முள் நட்புகொண்டிருந்தன என்பதை ஆனைமங்கலச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகின்றது. அவ்வாறிருந்த நிலயில் அவ்விரு இராச்சியங்களும் சில ஆண்டுகளில் பகமை கொண்டு ஒன்றின் மேல் மற்றொன்று போர் புரியும் நிலைமைக்கு, இராசேந்திர சோழன் படையெடுப்பைத் தொடர்ந்திருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதின் காரணம் வணிகத்திற்காக கடாரத்தில் தங்கியிருந்த தமிழ் மக்களின் உரிமையைக் காக்கும் பொருட்டாகாவே இருந்திருக்கவேண்டும்.

    இவ்வேந்தன், தன்னுடைய சிறந்த கப்பற்படையினால் கடல் நடுவிலுள கடராத்தினை ஆண்ட அரசனான சங்கிராம விசயோத்துங்கவர்மனைப் போரில் புறங்கண்டு ஶ்ரீவிசயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம் இலங்காசோகம், பப்பாளம், இலிம்பங்கம், வலைப்பந்தூர், தக்கோலம், தமாலிங்கம், இலாமுரிதேசம், நக்கவாரம், கடாரம் ஆகிய இடங்களைக் கைப்பற்றினன் என அவனது மெய்கீர்த்திகள் மூலம் அறியமுடிகின்றது.

ஶ்ரீவிசயம்
~~~~~~~~~~~
       ஶ்ரீவிசயம் என்பது சுமத்ரா என்று இக்காலத்தில் அழைக்கப்படும், 
சொர்ண தீவின் பாலம்பாங் என்னும் இராச்சியமாகும். அது கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினோறாம் நூற்றாண்டுவரை சிறந்து விளங்கியதோடு தமிழகத்துடன் வணிகத் தொடர்பு கொண்டு விளங்கியது.

பண்ணை
~~~~~~~~~~
      பண்ணை என்பது சுமத்ரா தீவின் கீழ்க்கரையில் உள்ள பகுதியாகும். இந்நாளில் pani, pane என்று அழைக்கப்படுகின்றது.

மலையூர்
~~~~~~~~~~
  மலையூர் என்பது மலையு ஆற்றின் கரையோரம் இருந்த பகுதியென்றும், பாலம்பாங் இராச்சியத்திற்கு அண்மையில் இருந்தது  என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றது.

மாயிருடிங்கம்
~~~~~~~~~~~~~~~~
     மாயிருடிங்கம் என்பது மலேயாவின் நடுவில் இருந்ததாகும். அதனை ஜிலொடிங் என்று சீன தேயத்தினர் அழைக்கின்றனர்.

இலங்கா சோகம்
~~~~~~~~~~~~~~~~~~
      இலங்கா சோகம் என்பது மலேயா நாட்டிலிருந்த கெடாவிற்குத் தெற்கே இருந்தது எனத்தெரிகின்றது. அது லிங்-யா-சென்-கியா என்/று சீனத் தேயத்தினரால் அழைக்கப்படுகின்றது.

பப்பாளம்
~~~~~~~~~
     பப்பாளம் என்பது பப்பாளமா என்று இலங்கையின் மகாவம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பப்பளம் என்ற ஒரு நாடு முற்காலத்தில் இருந்ததென்பது குலோத்தூங்கச்சோழன் பிள்ளைத் தமிழில்’மளவம் சோனகம் பப்பளம்’ என்று ஒட்டக்கூத்தர் குறுவதால் அறியலாம்.

தக்கோலம்

~~~~~~~~~~~~
     தக்கோலம் என்பது மலேயாவின் மேற்கு கரையில் அமைந்த தகோபா நகரமாகும். அது தற்போதைய தாய்லாந்து நாட்டின்
Takua Pa மாவாட்டமாகும்.

தமாலிங்கம்
~~~~~~~~~~~~
        தமாலிங்கம் என்பது மலேயாவின் கீழ்க்கரையில் குவான்டன் ஆறு கடலோடு கலக்குமிடத்தில் அமைந்துள்ள பகுதியாகும்.

இலாமுரி
~~~~~~~~~
     இலாமுரி என்பது சுமத்ராவின் வடபகுதியிலிருந்த நாடாகும். அனேகமாய் இது தற்போதய இந்தோனெசிய நாட்டிலுள்ள Banda Aceh பகுதியாருத்தல்வேண்டும்.

நக்கவாரம்
~~~~~~~~~~~~
     நக்கவாரம் என்பது இக்காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்திற்குரியதான, அந்தமானுக்கருகேயுள்ள, நிகோபர் தீவுகள் என்று அழைக்கப்படுகின்ற தீவுகளாகும். இன்றளவும் தென்னையில் ஒரு வகையினை, நக்கவாரப் பிள்ளை என்றும் நக்கவாரி என்றும் காணப்படுவதை அறிக.
     மேற்கூறியவற்றில், இலங்காசோகம் (இன்றைய சொங்லா-Songla), மாடமலிங்கம் (இன்றைய நாகோன் சிதம்மாரட் - Nakkhon Sithammarat), ஸ்ரீவிசயா (இன்றைய நாகோன் பத்தோம்-Nakhon Pathom) ஆகிய மூன்று பகுதிகளும் தற்போதைய தாய்லாந்து நாட்டில் உள்ளனவாகும்

கடாரம்
~~~~~~~~
     கடாரம் என்பது “பரக்கு மோதக் கடாரம்” என்றும், “குளிரு தெண்டிரைக் குரை கடாராம் என்றும் கலிங்கத்துப்பர்ணியில் கூறப்பட்டிருத்தலால் அது கடற்கரை நகரம் என்பது தெளிவாகின்றது.

       பத்துப்பாட்டில் ஒன்றாகிய பாலையில் “காழகம்” எனக்கூறப்படுவது கடாரமே என்பார் நச்சினார்கினியார். இவற்றிலிருந்து கடைச்சங்க காலத்திலேயே அந்நாட்டோடு தமிழர்களின் வாணிப தொடர்பு இருந்ததை அறிய முடிகின்றது.
     
   முதலாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்தியும், தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயக் கல்வெட்டுக்களும் சோழர்களுக்கும் கடாரமாகிய தாய்லாந்துக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

    
சோழர்கள் கடாரத்தைக் கைப்பற்றிய பின் தாய்லாந்தின் சில பகுதிகள் சோழர்களின் மேலாட்சியின் கீழ் வந்தன என நம்பப்படுகிறது. ஏனென்றால் தென் தாய்லாந்தும் இணைந்த பகுதிதான் கடாரம் என்று ஒருசாரர் குறிப்பிடுகின்றனர். 10 ஆம் நூற்றாண்டில் தென் தாய்லாந்தில் கடாரம் என்ற பெயரில் சோழர்களின் மேலாதிக்கம் இருந்தது என புகிட்சுங்கோலா (Bukit Sungala) போன்ற பகுதிகளிலிருந்து கிடைக்கும் சான்றுகளிலிருந்து தெரிகிறது. கடாரப் படையெடுப்பு விவரங்கள் தஞ்சை பெரிய கோயிலின் உள்ளே  நடுவிலமைந்த மேற்குச் சுவரிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

 
    தாய்லாந்திற்கு வெகு அருகில் இருக்கும் நாடு கம்போடியா. கம்போடியா அரசர், அருகே, தாய்லாந்தில் அமைந்திருந்த ஸ்ரீவிசயா அரசின் தாக்குதலிலிருந்து தன்னுடைய நாட்டைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் சோழ அரசரின் உதவியை நாடியதாகவும், சோழ அரசருக்கு ஒரு தேர் அன்பளிப்பாக அனுப்பியதாகவும் தஞ்சாவூர் கரந்தை செப்பேடுகள் கூறுகின்றன. இராசேந்திரனின் எட்டாம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1020) இந்தக் கரந்தைச் செப்பேடுகள் வெளியிடப் பட்டன.

 
  கடாரப் படையெடுப்பினால் முதலாம் இராசேந்திர சோழன் கைப்பற்றினதாகக் கூறப்படும் நாடுகளும் ஊர்களும் அப்போதய சுமத்ரா மற்றும் முந்தைய மலேயா நாடுகளும் அவற்றைச் சுழ்ந்ததுமான பகுதிகளாகும்.

       அவையாவும், தற்போதய, மலாய் தீபகற்பத்தில் ( Malay Peninsula ) அடங்கிய மலேசிய நாட்டின் பகுதிகளும், மேற்கு இந்தோனேசியாவும், சிங்கப்பூர், புருனை, தெற்கு மியான்மர் (பர்மா) மற்றும் தாய்லாந்து முதலான நாடுகள் ஆகும்.
 
    
அவைகள் யாவும் அந்நாளில் இருந்த ஶ்ரீவிஜய ராச்சியத்திற்கு உட்பட்டிருந்த பகுதிகளாகும். இது பற்றிக் கூறும் இராசேந்திரனது மெய்கீர்த்தியைக் கூர்ந்து நோக்கின் இம்மன்னன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் ஒரே படையெடுப்பில் பெற்றவை என்பதும், கைபெற்றப்பட்ட நாடுகளும், பகுதிகளும் ஒரே அரசனின் ஆளுகைக்குட்பட்டிருந்தன என்பதையும்  அறியலாம்.
   
     முதலாம் இராசேந்திர சோழன் தனது ஆட்சிக்காலத்தில் எத்தனையோ போர்கள் நிகழ்த்தியிருந்தாலும் மக்கள் மனத்தையும் புலவர் உள்ளங்களையும் ஒருங்கே பிணைத்து நீங்கா இடம்பிடித்து நிற்பது அவன் கங்கை கொண்டதும், கடாரம் வென்றதும்தான்.

  
  அவனது வெற்றிச் சிறப்பினைக் கலிங்கத்துபரணி
          “களிறு கங்கைநீ ருண்ண மண்ணையில்  
          காய்சினத் தொடே கலவு செம்பியன்
          குளிறு தெண்டிரைக் குறைக டாரமுங்
          கொண்டு…..…”
என்றும்,
     கவிச்சகரவர்த்தி ஒட்டக்கூத்தர் தனது உலாவில்
         “கங்கா நதியும் கடாரமுங் கைக்கொண்டு
          சிங்கா தனத்திருந்த செம்பியர் கோன்”
என்றும் குறிக்கும்போது இராசேந்திர சோழனின் அவ்விரு வீரச்செயல்கள் பற்றியே புகழ்ந்தமைக் குறிப்பிடத்தக்கது.

     முதலாம் இராசேந்திர சோழனுக்கு அவன் கடாரத்தை வென்றதால் 'கடாரம் கொண்டான்' என்ற பட்டப் பெயர் வந்தது.
    
    முதலாம் இராஜேந்திர
சோழனே முதன் முதலில் கடல்கடந்து அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல்  இந்திய மன்னன் ஆவான்.

( ஆறாம் பகுதி )

     முதலாம் இராசேந்திர சோழனின் மகனான முதலாம் இராசாதிராசனின் மெய்கீர்த்தியின் உதவியொடு பார்க்கும்போது, இராசேந்திரனின் கடார வெற்றிக்குப்பின் மீண்டும் சோழருக்கும் பாண்டியர், சேரர், ஈழ மற்றும் மேலைச்சாளுக்கியரோடு போர்கள் நிகழ்ந்ததை அறியமுடிகின்றது.

பாண்டியரோடு மீண்டும் போர் புரிந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     இராசேந்திர சோழன் தன் மகனான சுந்தரசோழனை மதுரையிலிருந்து பாண்டி நாட்டையும் சேரநாட்டையும் சோழப்பேரரசின் அரசப்பிரதிநிதியாக இருந்து ஆளச்செய்தனன் என்பதைப் பார்த்தோம். அங்ஙனம் செய்யக்காரணம், சோழரிடம் தோல்வியுற்றப் பாண்டியர், தாம்சிறிது வலிமை பெற்றதும், சோழருக்குத் திறை செலுத்தாதிருந்ததே என்று அறியப்படுகின்றது.

     இந்நிலையில், சோழர்வசமிருந்தப் பாண்டி நாட்டைக் கைப்பற்றித் தாமே ஆட்சிபுரியவேண்டும் என்னும் எண்ணமுடையவராய்த் தக்க காலத்தை எதிர்நோக்கியிருந்த, சோழப்பேரரசிற்குத் திறை செலுத்தி வந்த பாண்டியக் குறுநில மன்னரான மானாபரணன், சுந்தரபாண்டியன் ஆயோர் உள்நாட்டுக் கலகம் புரியத்தொடங்கினர். இதன்பொருட்டு, சோழரைப் பாண்டிநாட்டை விட்டுத்துரத்த நினைக்கும் பாண்டியரை வென்றடக்க சோழர்படை இளவரசன் இராசாதிராசன் தலைமையில் சென்று போரிட வேண்டிய நிலையாயிற்று.

     அவ்வாறே, இளவரசன் இராசாதிராசன், சோழரின் பெரும்படையுடன் சோழப்பேரரசின் கீழிருந்தப் பாண்டி நாட்டிற்குச் சென்று போர்புரிந்ததோடு போரில் மானாபரணனைக்     கொன்று சுந்தரபாண்டியன் போர்க்களத்தில் எல்லாவற்றையும் இழந்து முல்லையூர் புகுந்து ஒளிந்துகொள்ளுமாறு செய்தனன்.


சேரரோடு மீண்டும் போர் புரிந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     முதலாம் இராசேந்திர சோழனின் ஆளுகைக்கு உட்பட்டு, அவனது அரசப்பிரதிநிதியால் ஆட்சிபுரியப்பட்ட சேரநாட்டுப் பகுதிகளில், சோழரது பெரும்படையானது வடக்கே கங்கைக்கும் பின்னர் கடல் கடந்து கடாரம் வரையிலும் சென்றிருந்தச் சூழலைப் பயன்படுத்தி, சேரநாட்டை சோழரிடமிருந்து விடுவித்துவிட பெரிதும்விரும்பி சேரர்கள் சோழருக்கு எதிராய் கலகம் விளைவித்தனர்.

      சேரார்களின் அம்முயற்சியை முறியடிக்கவும், சோழரது வலிமையைச் சேரருக்குப் பறைசாற்றவும் அவர்மீது மீண்டும் படையெடுக்கவேண்டியது முதலாம் இராசேந்திரனுக்கு இன்றியமையாத ஒன்றாயிற்று. எனவே, கடராத்தினின்று திரும்பியதும் சோழர் படையினை தனது மகன் இராசாதிராசன் தலைமையில் சேரநாட்டிற்கு அனுப்பினான். 

     அக்காலத்தில், சோழப்பேரரசின் ஆளுகைக்குட்பட்ட சேர நாடானாது குறுநில நாடுகளாய்ப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வோர் சேர அரசவம்சாத்தாரால் ஆளப்பட்டுவந்தது. அவற்றுள் முக்கியமானவை குலசேகர வம்ச, வேனாடு வம்ச மன்னர்களால் ஆளப்பட்டவையாகும்.

     முதலில் குலசேகர வம்சத்தினனும், சேரன் இரண்டாம் பாஸ்கர ரவிவர்மனுக்கு அடுத்து அரியணையெறிய, வீரகேரளா என்பவனோடு போரிட்டு இராசாதிராசன் வென்றான். அப்போரில் வீரகேரளா யானையால் மிதிக்கப்பட்டு இறந்தான் என்று அறியப்படுகின்றது.

      இராசாதிராசன் பின்னர், வேனாட்டின்மீது படையெடுத்துச்சென்று அம்மன்னனையும், அவனுக்குதவிய கூபக நாட்டின் மன்னனையும் வென்றனன்.

      பின்னர் அவன், எலிமலைக்கருகேயுள்ள இராமகுட நாட்டு மன்னனும், “அரசகுலத்தினர் எல்லோரையும் அழித்த” பரசுராமனால் முடிசூட்டப்பெற்றவர்கள் என்று அறியப்படும் ‘மூஷக’ வம்சத்தினைச் சேர்ந்தவனுமான கண்டன் காரிவர்மனையும் போரில் வென்றான்.

     தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ளதும், தாம்பரம் மற்றும்
வண்டலூருக்கு அருகேயுள்ளதுமான, மணிமங்கலத்தில் உள்ள இராசகோபால பெருமாள்கோயிலின் வடக்கு மற்றும் மேற்கு மதில்களில் காணப்படும்,     இராசாதிராச சோழன்  காலத்தில்

வரையப்பெற்றக் (ஆங்கில ஆண்டின்படி கி.பி.1046, டிசம்பர் 3- ந் தேதியிட்ட) கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துவதோடு, சோழர்படை, முன்னர், முதலாம் இராசராச சோழன் காலத்தில் செய்ததுபோலவே, இராசாதிராசன் காலத்துப் போரின்போதும் காந்தளுர்ச்சாலையில் இருந்த போர்க்கப்பல்களை அழித்தன என்பதையும் குறிப்பிடுகின்றது.


( இறுதிப் பகுதி )

மீண்டும் ஈழப் போர்

~~~~~~~~~~~~~~~~~~~~~~

    இலங்கை மன்னன், ஐந்தாம் மகிந்தனின் மகனான, விக்ரமபாகு எனப் பெயர் சூட்டிக்கொண்ட காசிபன் என்பவன், ஈழத்தில் சோழர்களோடு போர்புரிந்து ஈழமண்டலம் முழுவதையும் கைப்பற்றித் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரத் திட்டமிட்டுப் பெரும்படையைத் திரட்டிய காரணத்தால் இராசேந்திர சோழன் மீண்டுமொருமுறை ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்று போர்புரிய வேண்டியதாயிற்று. மேலும், அவ்வப்போது சேர மற்றும் பாண்டியர்க்கு இலங்கையிலிருந்து படையுதவி செய்துவந்த காரணத்தாலும் இச்சோழமன்னன் மீண்டுமொருமுறை ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்று போர்புரிய வேண்டியதாயிற்று என்று வரலாற்று ஆசிரியர் கூறுவர்.

     சோழர்களோடு நிகழ்த்திய அப்போரில் விக்ரமபாகு கொல்லப்பட்டான் என்றும் அவனுடைய முடி முதலான அரச சின்னங்கள் இராசாதிராச சோழனால் கைப்பற்றப்பட்டன என்றும் கல்வெடுகள் உணர்த்துகின்றன. இப்போர் கி.பி. 1041 ஆம் ஆண்டில் நடைபெற்றிருத்தல்வேண்டும். முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தின் இறுதியில் இராசாதிராசன் இளவரசனாய் இருந்த காலத்தில் நடைபெற்ற இரண்டாம் ஈழப்போர் இவ்வாறு முடிவெய்திற்று.

மேலைச் சாளுக்கிய போர்
    
      முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சியின் இறுதிக்காலத்தில்  மேலைச் சாளுக்கியரோடு மீண்டும் போர் தொடங்கிற்று. மேலைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜயசிங்கன் இறக்கவே, அவன் மகன் சோமேசுவரன் முடிசூட்டப்பட்டான். சோழர் கல்வெட்டுக்கள் அவனை ஆகவமல்லன் என்றே குறிப்பிடுகின்றன.
        சாளுக்கியன் ஆகவமல்லன் காலத்தில், துங்கபத்ரை ஆற்றின் தெற்கே, சோழ இராச்சியத்தில் அடங்கியிருந்த சில பகுதிகளை மேலை சாளுக்கியர் கவர்ந்துகொள்ள மேலைச் சாளுக்கியருக்கும் சோழருக்கும் பகை ஏற்பட்டது. இதன்பொருட்டு சோழ இளவரசன் இராசாதிராசன் தலைமையில் சோழரின் பெரும்படை மேலைச் சாளுக்கிய நாட்டிற்குச் சென்று கிருஷ்ணா ஆற்றின்கரையோரம் இருக்கும், இப்போது அமராவதி என்றழைக்கப்படும், அக்காலத்தில் ‘தன்னாடை’ என அழைக்கப்பட்ட இடத்தில் போரிட்டுச் சாளுக்கியரைத் தோற்கடித்து வெற்றிகொண்டது. இப்போரானது கி.பி. 1042-43 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கவேண்டும்.

      முதலாம் இராசேந்திர சோழன் மேலைச்சாளுக்கியரின் தலைநகராகிய மான்யகேடத்தைக் கைப்பற்றித் தன் தந்தை இராசராச சோழனின் கருத்தை நிறைவேற்றினான் என்ற செய்தியை கரந்தைச் செப்பேடுகள் கூறுகின்றன.

முதலாம் இராசேந்திர சோழனின் பட்டப்பெயர்கள்

      பெற்றோரால் மதுராந்தகன் என்ற பெயரிடப்பெற்ற இம்மன்னன் முடிசூடியபோது பெற்ற அபிஷேகப்பெயர் இராசேந்திரன் என்பதாகும். இப்பெயரோடு உத்தமசோழன், சோழேந்திர சிம்மன், விக்கிரம சோழன், முடிகொண்டசோழன், பண்டித சோழன், கடாரங்கொண்டான், கங்கை கொண்ட சோழன் என்பனவும் இவனது பெயராக விளங்கிவந்தனவாகும்.

 
முடிகொண்ட சோழப் பேராறு

   சோழர்களது முடிசூட்டுவிழா நடைபெற்ற நகரங்களில் ஒன்றான ‘பழையாறை’ மாநகர் இவ்வேந்தனது காலத்தில் ‘முடிகொண்ட சோழபுரம்’ என்று அழைக்கப்பட்டது. இந்நகருக்கு தென்புறம் ஓடும் ஆறு இம்மன்னனால் வெட்டப்பட்டு “முடிகொண்ட சோழப் பேராறு” என்னும் பெயர்பெற்று இவனது புகழ்கூறுகின்றது.

“சோழ கங்கம்” எனும் பொன்னேரி
   முதலாம் இராசேந்திரசோழன் தனது இராச்சியத்திற்கு புதிய தலைநகராய்க் கொண்ட கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகே பெரியதோர் ஏரி ஒன்றினை வெட்டுவித்து தன் மக்களுக்கு தண்ணீர்க் குறை இல்லாதவாறு செய்தனன். தெற்கு வடக்கில் பதினாறு மைல் நீளமுள்ள இவ்வேரி அக்காலத்தில் “சோழகங்கம்” என்று அழைக்கப்பட்டதென்று திருவாலங்காட்டு செப்பேடுகள் கூறுகின்றன. இக்காலத்தில்  அது “பொன்னேரி” என்று அழைக்கப்படுகின்றது.

பிற சமயங்களை ஆதரித்தவன்

     கடாராத்து அரசனால் நாகப்பட்டினத்தில் ஏற்படுத்தப்பட்ட புத்தகோயிலுக்கு பள்ளிச்சந்தமாய் இராசராச சோழனது காலத்தில்  அளிக்கப்பட்ட ஆனைமங்கலம் எனும் ஊர் இராசேந்திரன் ஆட்சிக்காலத்தில்தான் சாசனம் செய்தளிக்கப்பட்டது என்பதிலிருந்து  இம்மன்னன்  சைவ சமயத்தில் பெரிதும்   ஈடுபாடுகொண்டு வாழ்ந்திருந்தாலும் பிற சமயங்களையும் ஆதரித்தவன் என்பதை அறியமுடிகின்றது.

சீனநாட்டுக்குத் தூது

    கடல் கடந்த வணிகத்தைப் பெருக்கும் எண்ணத்தோடு தன் ஆட்சிக்காலத்தே கி.பி. 1033-ல் தூதர்குழு ஒன்றைச் சீனதேசத்திற்கு முதலாம் இராசேந்திரன் அனுப்பினான் என்று கூறப்படுகின்றது. அந்நாட்டுடன்  இவ்வாறு ஏற்பட்ட வாணிகத்தொடர்பு தடையின்றி நடைபெற்றது என்றும் இம்மன்னன் கடாரம் வரை சென்று போர்புரிந்தது இவ்வணிகத்தொடர்பு தடையின்றி நீடிக்கவே என்பதும் வரலாற்று ஆசிரியர் கருத்து.

நிலங்களின் நான்கெல்லை

     முதலாம் இராசேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழ இராச்சியத்தில் இருந்த நிலங்களைக் குறிப்பிடும்போது அந்நிலங்களின் நான்கெல்லைகளைக் குறிப்பிட்டுக்கூறும் வழக்கம் இருந்திருப்பதை அம்மன்னனது காலத்திய ‘ஈசாலம்’ செப்பேடுகள் மூலம் அறியமுடிகின்றது.

வரிவிதிப்பு
 
     இம்மன்னன் காலத்தில் நிலவரி முதலான வரிகளைச் செலுத்தாமல் நாட்டையும் ஊரையும் விட்டுவிட்டு வேறு நாட்டிற்குப்போய் குடிபுகுந்தவர்களின் நிலத்தை ஊர்ச்சபை மூலம் கைப்பற்றி  பெருவிலைமூலம் (ஏலம் மூலம்) விற்று அதன்மூலம் வந்த தொகையை நிலவரி முதலானவற்றிற்கு ஈடு செய்தமையை கல்வெட்டுக்கள் முலம் அறியமுடிகின்றது.

முன்னர் திருச்சி மாவட்டத்தில் இருந்ததும் தற்போது கரூர் மாவட்டத்தில் உள்ளதுமான இரத்தினகிரி என்றழைக்கப்படும்
அரிஞ்சிகைச் சதுர்வேதிமங்கலத்திலிருந்த அந்தணர் மூவர் தம் நிலங்களுக்குரிய வரியைப் பதினைந்து ஆண்டுகள் செலுத்தாது ஊரைவிட்டுப் போய்விட்டனர். அவர்களுடைய நிலங்களை கி.பி 1033 –ல் அரசாங்கத்தார் பரிமுதல் செய்து “இராசேந்திரப்பெருவிலையில்” விற்று அத்தொகையை அரசின் வரிக்கு ஈடுசெய்து கொண்டனர் என்ற செய்தி இரத்தினகிரியிலுள்ள கல்வெட்டால் அறியலாம்.


மனைவிகளும் மக்களும்
    
    இம்மன்னனுக்கு மனைவிமார்கள் ஐவர் என அறியமுடிகின்றது. அவர்கள், முக்கோக்கிழானடிகள், அரிந்தவன்மாதேவி, வானவன்மாதேவி, வீரமாதேவி, பஞ்சவன்மாதேவி என்போராவர்.
  
    இவனுக்கு இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன், சுந்தர சோழபாண்டியன் என்ற புதல்வர்களும்  அருண்மொழிநங்கை, அம்மங்கைதேவி என்ற புதல்விகளும் உண்டு.

    இதில் அம்மங்கைதேவி, கிழைச்சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும் இராசராசசோழனின் மகள் குந்தவைக்கும் பிறந்த நரேந்திரன் என்னும் அரசகுமாரனுக்கு மணஞ் செய்துவிக்கபட்டனள். இவர்களுக்குப் பிறந்த புதல்வனே, பிற்காலத்தே சோழசாம்ராச்சியத்திற்கு சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பெற்று அரசாண்ட, பெருவீரனாகிய முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆவான்.

இறப்பு

    தனது தந்தை இராசராச சோழனிடமிருந்து பெற்றச் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாகி, அதனை ஒப்பற்ற உயர் நிலைக்குக் கொண்டுவந்து புகழுடன் பெருவாழ்வு வாழ்ந்த முதலாம் இராசேந்திர சோழன் முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்து கி.பி. 1044-ல் மரணமடைந்தான். இவன் மரணத்தால் ஏற்பட்ட பெரும் பிரிவை தாங்காத அவனது மனிவியருள் ஒருத்தியான வீரமாதேவி உடன் உயிர் துறந்தாள் என்று பிரம்மதேசம் எனும் (முன்னர் வடஆர்காடு மாவட்டத்திலிருந்த) ஊரில் காணப்படும் கல்வெட்டொன்றால் அறியப்படுகின்றது.

2 comments:

  1. very nice.informative. keep posting.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகையும் பின்னூட்டமும்/கருத்தும் மகிழ்ச்சி அளிக்கின்றது.

      தொடர்ந்து எழுதுவேன்.

      நன்றி.

      Delete