Saturday, 2 November 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XXII, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-7) (இறுதிப்பகுதி) Kulothunga Chozhan I ( 7th & last part).



                                                                                    (சோழ மன்னர்கள் -41.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!
           
முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).  (ஏழாம் பகுதி)
இறுதிப் பகுதி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன், புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன். }
 
சூரியனுக்குக் கோயில்-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
          கன்னோசி மன்னர்கள் சூரியனுக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்யும் வழக்கமுள்ளவர்கள். அவர்களைப்போல குலோத்துங்கனும் சோழப்பேரரசில் சூரியனுக்கு ஒரு கோயில் எழுப்பி அதற்கு குலோத்துங்க சோழமார்த்தாண்டாலயம் எனப் பெயரிட்டு அதற்கு நாள் வழிபாட்டிற்காக நிவந்தங்களும் வழங்கியுள்ளான் சூரியனுக்குத் தனிக் கோயில் அமைக்கப் பெற்ற காரணத்தால் அவ்வூர் இன்றளவும் சூரியனார் கோயில் என்று அழைக்கப் படுவதைக் காணமுடிகின்றது.
           இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது கன்னோசி இராச்சியத்திற்கும் சோழப் பேரரசிற்கும் குலோத்துங்கனது ஆட்சிக்காலத்தில் நட்பு நிலவியதை அறியலாம்.
       முதலாம் குலோத்துங்கனது ஆட்சியின் தொடக்க காலங்களில் ஈழ நாடு சோழ இராச்சியத்திலிருந்து விலகிவிட்டதை அறியமுடிகின்றது. கி.பி 1070 ல்   மன்னன்  அதிராசேந்திர சோழன் மகப்பேறு இல்லாத நிலையில் இறந்த காரணத்தாலும், சோழர் மரபில் வேறு அரசகுமாரன் ஒருவனும் இல்லாததாலும் ஒருசிலகாலம்  மன்னன் இல்லாது சோழப்பேரர அவதியுற்றவேளையில் ரோகணத்தில் இருந்து கலகம் செய்து வந்த சிங்களர் ஈழத்தை தம் வசப்படுத்தியிருத்தல் வேண்டும்.
       குலோத்துங்கனது ஆட்சியின் இறுதி ஆண்டுகளில் வேங்கி நாடும் சோழ இராச்சியத்தின் ஆளுகையில் இல்லை என்பதையும்
அறியமுடிகின்றது.
சுங்கந் தவிர்த்த சோழன்-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
        ஒட்டக்கூத்தர் தம் மூவர் உலாவில் ‘புவிராச ராசர்மனு முதலோர் நாளில் தவிராத சுங்கந் தவிர்த்தோன்’ என முதலாம் குலோத்துங்க சோழனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
‘உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள் 
எனும் குறட்பாவிற்கு பொருள் கூறும் பரிமேலழகர், ‘உல்கு பொருள்’ என்பது சுங்கமாகிய பொருள்- அதாவது கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது (வரியானது)-என்கின்றார். நச்சினார்க்கினியரின் பட்டினப்பாலை உரையினின்றும் இதனை அறியலாம்.
      அதாவது, வாணிபத்தின் பொருட்டு சாலைகள் வழியாய் வண்டிகளாலும் கடல் வழியாய் கப்பல்களினாலும் எடுத்துச் செல்லப்படும் மற்றும் கொண்டுவரப்படும் பொருட்களுக்கு அரசாங்கத்தினர் வாங்கிய வரிவகை ‘சுங்கம்’ என்று குறிக்கப்பெற்றது என்பதையும் அவ் வரிவிதிப்பானது வள்ளுவரது காலந்தொட்டே இருந்ததையும் அறிய முடிகின்றது.
      அவ்வாறு காலங் காலமாய் விதிக்கப்பட்ட வரியினை மக்களுக்கு நலம்புரியும் வகையில் சோழப்பேரரசனாக முடிசூடிக்கொண்ட பின் முற்றிலும் நீக்கிவிட்டான் முதலாம் குலோத்துங்க சோழன் என்பதை அறிய முடிகின்றது. இதன் காரணமாகவே ‘சுங்கந் தவிர்த்த சோழன்’ என மக்களால்  பாராட்டப் பெற்றான் முதலாம் குலோத்துங்கன்.

சோழப் பேரரசு முழுவதும் நிலம் அளக்கப்பட்டமை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
       முதலாம் குலோத்துங்க சோழன் தனது ஆட்சிக்காலத்தில் செய்த மற்றுமொரு சிறப்பான செயல் என்னவெனில் சோழ இராச்சியம் முழுதிலும் உள்ள நிலங்களை அளக்கச் செய்தாகும்.
       கி.பி. 1086 ம் ஆண்டில் தொடங்கப் பெற்ற இந்த நில அளவை இரண்டாண்டுகள் மேற்கொள்ளப்பட்டு சோழ இராச்சியத்தின் நிலப்பரப்பு முழுமையும் அளந்து முடிக்கப்பட்டது என்பதை திருவீழிமிலைக் கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகின்றது.
     இந்நில அளவையின் மூலம் சோழப் பேரரசு முழுவதிலும் இருந்த நிலங்களை அளந்து அதன்மூலம் விளைநிலங்களின் சரியான பரப்பளவினை அறிந்து அவற்றின் மீதான நிலவரி ஒழுங்கு படுத்தப்பட்டது.
     முதலாம் குலோத்துங்கனின் தாய்வழிப் பாட்டன் முதலாம் இராசேந்திரனின் தந்தையாகிய இராசராச சோழனுக்கு அடுத்ததாக,    ஏறத்தாழ எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், சோழப் பேரரசு முழுவதையும் அளந்த சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் ஆவான்.
     இவ்வாறு அளக்கப்பட்ட நிலங்களில் விளைநிலங்கள் மீது மட்டிலுமே இம்மன்னனால் வரி விதிக்கப்பட்டது என்பதையும் ஏனைய
நிலங்கள் வரிவிதிப்பிலிருந்து நீக்கபட்டிருந்ததையும் அறியமுடிகின்றது.
 
நீர்வளம் மேம்படுத்தியது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     சோழ இராச்சியத்திற்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த பகுதிகளின் இயற்கை அமைப்பிற்கு ஏற்ப ஆறுகளையும் ஏரிகளையும் வெட்டி அப்பகுதிகளை வளப்படுத்திய தம் முன்னோர்களைப் போலவே முதலாம் குலோத்துங்கனும் சோழப்பேரரசினில் நீர் வளத்தினை மேம்படுத்தும் பொருட்டு (இக்காலத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலிருக்கும்) புங்கனூரில் சோழப்பேரேரி எனும் பெயரில் ஓர் ஏரியையும், (இக்காலத்தில் தஞ்சை மாட்டம் பாபநாசம் பகுதியில் உள்ள) முனியூரில் குலோத்துங்க சோழப்பேரேரி எனும் பெயரில் ஓர் ஏரியையும் அமைத்தான் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றது.
 
கிராம சபை ஆட்சி
~~~~~~~~~~~~~~~~~~~~
     முதலாம் பராந்தக சோழனால் தோற்றுவிக்கப்பட்ட, குடவோலை மூலம் கிராமசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படும், கிராம சபையின் கிராம ஆட்சி முறை இவ் வேந்தனது ஆட்சிக்காலத்தில் இருந்தன என்பதை தொண்டை மண்டலத்தில் அமைந்திருந்த (இக்காலத்தில் புதுச்சேரி மாநிலத்தின் பகுதியாய் விளங்கும்)  திருபுவனையில் உள்ள வரதராசப் பெருமாள் கோயிலில் கி.பி.1113 ல் வரையப்பெற்ற கல்வெட்டு ஒன்றினால் அறியலாம்.
   அக் கல்வெட்டு அவ்வூர் சபையோர் எடுத்த முடிவு ஒன்றினைக் குறிப்பிடுகின்றது. அஃது என்னவெனில், அவ்வூர் பட்டர், தச்சர்,கொல்லர்,உபாத்தியாயர், கணக்கர் முதலானோர் அவரவர் தொழிலினை அவ்வூரிலேயே செய்ய வேண்டும் என்றும் மீறி அவ்வூரைவிட்டு வேறு ஊருக்குச் சென்று செய்தால் குற்றம் புரிந்தவர்களாய், கிராமத்தை அழித்த துரோகம் செய்தவர்களாய் கருதப்படுவார்கள் என்பதாகும்.
     அநேகமாக இதற்குக் காரணம், மேற்சொன்னவர்கள் அக்கிராமத்தில் குடியிருந்துகொண்டு அரசால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களை, மான்யங்களை கிராம சபை மூலமாகப் பெற்றுக்கொண்டு அக்கிராம மக்கள் வளர்ச்சிக்கு தத்தமது தொழில் சார்ந்த உதவிகளைச் செய்யாது பிற கிராமங்களில் தொழில்புரிந்து பொருளீட்டுவதில் அக்கறை காட்டியிருத்தல் வேண்டும்.
முதலாம் குலோத்துங்கனின் புதல்வர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    இம்மன்னனுக்கு நான்கு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் முறையே இராசராச சோழகங்கன், இராசராச மும்முடிச் சோழன், வீர சோழன் மற்றும் விக்ரம சோழன் ஆகியோர் ஆவர்.
    இவர்களுல் இராசராச சோழகங்கன், இராசராச மும்முடிச் சோழன், வீர சோழன் ஆகியோர் முதலாம் குலோத்துங்கனது காலத்திலேயே இறந்து போன காரணத்தால் இளையவனான விக்ரம சோழன் இளவரசு பட்டம் ஏற்றான்.
     ஐம்பது ஆண்டுகாலமாக பிற சமயங்களையும் ஆதரித்து நாட்டு மக்களிடையே பெருமதிப்பு பெற்று விளங்கி, நல்லாட்சி புரிந்துவந்த முதலாம் குலோத்துங்க சோழன் கி.பி 1120 ஆம் ஆண்டு இறந்தனன்.

Wednesday, 3 July 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XXI, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-6) Kulothunga Chozhan I (part-6).



                                         (சோழ மன்னர்கள் -40.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!
முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).  (ஆறாம் பகுதி)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன், புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன். }

வட கலிங்கப் போர்
~~~~~~~~~~~~~~~~~~~
     இம்மன்னது ஆட்சியின் நாற்பத்திரெண்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட திருச்சி மாவட்ட சீனிவாசநல்லூர் கல்வெட்டும்,     இம்மன்னது ஆட்சியின் நாற்பத்தைந்தாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட, தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஊரான, ஆலங்குடி கல்வெட்டும் இவனது வட கலிங்கப் போர் குறித்துக் கூறுகின்றன. கலிங்கத்துப் பரணியில் அதன் ஆசிரியர் செயங்கொண்டனாரும் வட கலிங்கப் போர் குறித்து விரிவாகக் கூறுகின்றார்.

    இவ் வட கலிங்கப் போர் குறித்த செய்திகள் முதலாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் நாற்பத்திரெண்டாவது ஆண்டின் கல்வெட்டுக்கள் சிலவற்றில் காணப்படாத காரணத்தால் இப்போர் இம்மன்னனது ஆட்சியின் நாற்பத்திரெண்டாவது ஆண்டின் பிற்பகுதியில், அதாவது, கி.பி.1112ன் ஆண்டின் இறுதியில் நடைபெற்றிருத்தல் வேண்டும்.

அயல் நாட்டு உறவு
~~~~~~~~~~~~~~~~~~~~~
கடாரம்

      முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலத்தில், கி.பி.1090ஆம் ஆண்டில் கடாரத்தரசன், இராச வித்யாதர சாமந்தன்; அபிமானதுங்க சாமந்தன் என்னும் இரு தூதுவர்கள் மூலம் வேண்டிக் கொண்டவாறு நாகப்பட்டினத்தில் இருந்த இராசராச பெரும்பள்ளி மற்றும் இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்னும் இரண்டு புத்த விகாரங்களுக்கு குலோத்துங்கன் தானும் தனது முன்னோரும் இறையீலியாக வழங்கிய ஊர்களைச் செப்பேடுகளில் வரைந்து அளித்திருப்பதைக் காணும்போது முதலாம் குலோத்துங்க சோழனும் கடாரத்து மன்னனும் உற்ற நண்பர்களாய் விளங்கியிருந்ததைப் புலப்படுப்படுத்துகின்றது. இம் மன்னனுடைய மெய்கீர்த்தியும் இவ்வுண்மையை வலியுறுத்துகின்றது.

சீனம்

         கி.பி. 1077 ஆம் ஆண்டில் சோழ நாட்டிலிருந்து எழுபத்திரண்டு வணிகர்கள் அடங்கிய தூதுக்குழு சீன நாட்டிற்கு சென்றிருந்தது குறித்த செய்தி  அந்நாட்டு வரலாற்றில் காணப்படுகின்றது என்றும் அவ்வாறு சென்ற வணிகர்கள் தந்தங்கள், காண்டாமிருக கொம்புகள், கற்பூரம், பட்டுத் துணிகள், பன்னீர், வத்திகள், கிராம்பு, பெருங்காயம் போன்ற பொருட்களைக் கொண்டு சென்றனர் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதிலிருந்து முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சோழ இராச்சியத்துக்கும் சீன நாட்டிற்கும் இடையே நல்லுறவு நிலவி வந்ததை அறிந்துகொள்ள முடிகின்றது.

காம்போசம் (கம்போடியா)

        காம்போச’ நாடென்பது இக்காலத்தில் கம்போடியா என்னும் பெயரில் அறியப்படும் நாடாகும்.

         முதலாம் குலோத்துங்கனுக்கு கம்போச நாட்டின் மன்னன்  காட்சிப் பொருளாகக் காட்டிய கல் ஒன்றினை குலோத்துங்கன் சோழ இராச்சியத்திற்குக் கொணர்ந்து தில்லை நடராஜர் கோயிலில் வைத்தான் என்பதை ’’ ஶ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்கு காம்போச ராஜன் காட்சியாகக் காட்டின கல்லு இது - உடையார் இராசேந்திர சோழ தேவர் திருவாய் மொழிந்தருளி உடையார் திருச்சிற்றம்பல முடையார் கோயிலில் முன் வைத்தது - ’’ என்று சிதம்பரத்தில் உள்ள கல்வெட்டொன்று குறிப்பிடுவதிலிருந்து முதலாம் குலோத்துங்க சோழன் கம்போச நாட்டோடு நட்புடன் விளங்கியதை அறியமுடிகின்றது.

        காண்பதற்கரிய கல்லினை முதலாம் குலோத்துங்கனுக்கு காட்சிப் பொருளாகக் காட்டிய அக் கம்போச நாட்டின் மன்னன் ஹர்ஷவர்மன் என்பதை அந்நாட்டின் வரலாற்றிலிருந்து அறியமுடிவதாய் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கானோஜ் நாடு

        கன்னோசி மற்றும் கன்னியா குப்ஜம் என்று அறியப்படும் நாடு
கானோஜ் நாடு ஆகும். அந்நாடு, வடக்கே, காசிமாநகருக்கு வடமேற்கே அமைந்திருந்த நாடாகும்.

        கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியின் நாற்பத்தியோராம் ஆண்டாகிய கி.பி.1111 ல் வடமொழியில் வரையப்பெற்ற கன்னோசி நாட்டு மன்னனின் கல்வெட்டொன்று உள்ளது.

        ஆயினும் அக் கல்வெட்டானது முற்றுப் பெறாதிருப்பதால் அது எக்காரணத்தால் அங்கு வரையப்பெற்றது என்பதையும் அது அவ்வாறு முற்றுப் பெறாதிருப்பதன் காரணத்தையும் அறிய இயலவில்லை.  சோழப்பேரரசின் தலைநகருக்கு வர நேர்ந்த தருணத்தில் அங்குள்ள கோயிலுக்கு வந்த அக் கன்னோசி நாட்டு மன்னன் அக்கோயிலின் இறைவனுக்கு நிவந்தம் அளித்து அவ்வறச்செயலைக் கல்வெட்டில் வரையச் செய்திருத்தல் வேண்டும்.

     உத்திரப்பிரதேசத்தின் இலக்ஷமணபுரியில் உள்ள பொருட்காட்சியகத்தில் காணப்படும் கன்னோசி நாட்டு மன்னன் கோவிந்த சந்திரத்தேவனின் செப்பேடுகளில் முதலிலுள்ள ஏடுகளில் காணப்படும் வடமொழி சுலோகங்களே கங்கைகொண்ட சோழபுரத்தில் முற்றுபெறாது உள்ள கல்வெட்டிலும் காணப்படுகின்ற காரணத்தால் அது கன்னோசி மன்னனின் கல்வெட்டுதான் என்பதை அறியமுடிகின்றது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும். )
 [ ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது ]

Sunday, 7 April 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XX, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-5) Kulothunga Chozhan I (part-5).


                                 (சோழ மன்னர்கள் -39.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).  (ஐந்தாம் பகுதி)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன், புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன். }

     முதலாம் குலோத்துங்க சோழன் பாண்டியர் ஐவரையும் வென்றபோதும் தனது முன்னோரைப்போன்று போரில் வென்ற பகுதிகளைச் சோழப் பிரதிநிதி மூலம் ஆட்சிபுரியாமல் அவற்றை அவ்வேந்தர்களிடமே அளித்து தனக்குத் திறை செலுத்தும் மன்னராக்கினான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

சேரருடன் போர்
~~~~~~~~~~~~~~~~~

      பாண்டியர்களைப் போலவே, அதிராசேந்திர சோழனின் இறப்பிற்குப் பின்னர் அரசனின்றி சோழ இராச்சியத்தில் நிலவிய குழப்ப நிலையைப் பயன்படுத்தி, சேரர்களும் தம் நாட்டுப்பகுதியினைத் தாமே ஆட்சி புரியத் தொடங்கினர்.

      பாண்டியரை வென்று தனக்குக் கப்பம் செலுத்துமாறு செய்தது போன்றே சேரரையும் வென்று அந்நிலைக்குக் கொண்டுவர முதலாம் குலோத்துங்க சோழன் சேரர் மீது படையெடுத்துச் சென்றான். குலோத்துங்கன் ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டிலேயே இப்படையெடுப்பும் நிகழ்ந்துள்ளது. பாண்டியர் மற்றும் சேரருடனான  குலோத்துங்கனின்  போர் ஓராண்டிலேயே நிகழ்ந்தது என்பது இவனது மெய்கீர்த்தியிலிருந்து புலப்படுகின்றது.

        சேரர் மீது படையெடுத்துச் சென்ற குலோத்துங்க சோழன் திருவனந்தபுரத்திற்குத் தெற்கே உள்ள விழிஞ்சியத்திலும், காந்தளூர்ச் சாலையிலும், குமரிமுனைக்கு வடக்கேயுள்ள கோட்டாறு என்னுமிடத்திலும் போர்புரிந்து பெரு வெற்றியடைந்தான்.

       காந்தளூர்ச் சாலையில் இருந்த சேரரின் கப்பற்படையை அழித்து கோட்டாற்றினை எரியூட்டினான் என்பதை கலிங்கத்துப் பரணியும் விக்ரம சோழனுலாவும் கூறுகின்றன. தோல்வியுற்ற சேரமன்னன், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்திவர ஒப்புக்கொண்டு சோழ இராச்சியத்திற்குட்பட்ட குறுநில மன்னனாய் ஆனான்.

      சோழ இராச்சியத்திற்குட்பட்ட குறுநில மன்னராய் விளங்கும்  சேரரும், பாண்டியரும் மீண்டும் தம் படை வலிமையைப் பெருக்கிக்கொண்டு சோழ இராச்சியத்தோடு முரண்படாதவாறு இருக்கும்படியாக அவர்தம் பகுதியில் தனது சிறந்த தளபதிகளின் கீழ் நிலைப் படைகளை நிறுவினான் குலோத்துங்க சோழன். அவ்வாறு கோட்டாற்றில் அமைக்கப்பட்ட படை ‘கோட்டாற்று நிலைப்படை’ என்னும் பெயரைப் பெற்றது என்பதைhf கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது.

கலிங்கப் போர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~

       முதலாம் குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்திகளிலிருந்து அவன் இரு கலிங்கப் போர்களில் ஈடுபட்டு வெற்றி கண்டான் என்பதை அறியமுடிகின்றது. இரு கலிங்கப் போர்களுள் ஒன்று இம்மன்னனது ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டிலும் மற்றொன்று இம்மன்னனது ஆட்சியின் நாற்பத்தியிரண்டாம் ஆண்டிலும் நடைபெற்றதாய் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

தென் கலிங்கப் போர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
       முதலாம் குலோத்துங்க சோழனின் முதல் கலிங்கப் போர் கி.பி.1096-ல் நடைபெற்றிருக்க வேண்டும். அம் முதல் கலிங்கப் போர் தென் கலிங்கப் போராகும்.

       தென் கலிங்கம் என்பது கோதாவரி ஆற்றிற்கும் மகேந்திர மலைக்குமிடையே அமைந்திருந்த, வங்காள விரிகுடாக்கடல் சார்ந்த பகுதிகளை உள்ளடக்கிய நாடாகும். அக்காலத்தில் அந்நாடு வேங்கி நாட்டு மன்னருக்குட்பட்ட குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது.

     வேங்கி நாட்டினை அக்காலத்தில் முதலாம் குலோத்துங்க சோழனின் புதல்வனான விக்ரமசோழன் குலோத்துங்கனின் பிரதிநிதியாக இருந்து ஆண்டுவந்தான். இளஞ்ஞனான அவனை வீழ்த்தி தென்கலிங்கத்தைத் தானே ஆளும்பொருட்டு தென்கலிங்கக் குறுநில மன்னன் வீமன் இராச்சியத்தில் குழப்பமும் கலகமும் செய்யலானான். இதனையறிந்த விக்ரமசோழன், சோழ இராச்சியத்திற்குட்பட்ட பாண்டிமன்னன் சடையவர்மன் பராந்தகன் என்பவனையும் உதவியாகக்கொண்டு பெரும்படையோடு சென்று வீமனை வீழ்த்தி வெற்றிவாகை சூடினான் என்பதை விக்ரமசோழனின் மெய்கீர்த்தியிலிருந்து அறியமுடிகின்றது.

      தென் கலிங்க நாடு மீண்டும் சோழரின் ஆட்சிக்குட்பட்டுவிட்டது என்பதை அந்நாட்டிற்குட்பட்ட சிம்மாசலம், திராட்சாராமம் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டுக்களும் உறுதிசெய்கின்றன.

      இப்போர் முதலாம் குலோத்துங்க சோழனின் புதல்வன் விக்ரமசோழனின் தலைமையில் நடைபெற்றிருந்தாலும் அது சோழ சாம்ராச்சியத்தினை ஆண்டுவந்த முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதால் அவ்வெற்றி சோழமன்னன் முதலாம் குலோத்துங்கனின் வெற்றியாகக் கருதப்பட்டது இயல்பேயாகும்.

வடகலிங்கப் போர்
~~~~~~~~~~~~~~~~~~~

( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும். )
[ ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது ]