Wednesday 3 July 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XXI, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-6) Kulothunga Chozhan I (part-6).



                                         (சோழ மன்னர்கள் -40.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!
முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).  (ஆறாம் பகுதி)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன், புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன். }

வட கலிங்கப் போர்
~~~~~~~~~~~~~~~~~~~
     இம்மன்னது ஆட்சியின் நாற்பத்திரெண்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட திருச்சி மாவட்ட சீனிவாசநல்லூர் கல்வெட்டும்,     இம்மன்னது ஆட்சியின் நாற்பத்தைந்தாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட, தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஊரான, ஆலங்குடி கல்வெட்டும் இவனது வட கலிங்கப் போர் குறித்துக் கூறுகின்றன. கலிங்கத்துப் பரணியில் அதன் ஆசிரியர் செயங்கொண்டனாரும் வட கலிங்கப் போர் குறித்து விரிவாகக் கூறுகின்றார்.

    இவ் வட கலிங்கப் போர் குறித்த செய்திகள் முதலாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் நாற்பத்திரெண்டாவது ஆண்டின் கல்வெட்டுக்கள் சிலவற்றில் காணப்படாத காரணத்தால் இப்போர் இம்மன்னனது ஆட்சியின் நாற்பத்திரெண்டாவது ஆண்டின் பிற்பகுதியில், அதாவது, கி.பி.1112ன் ஆண்டின் இறுதியில் நடைபெற்றிருத்தல் வேண்டும்.

அயல் நாட்டு உறவு
~~~~~~~~~~~~~~~~~~~~~
கடாரம்

      முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலத்தில், கி.பி.1090ஆம் ஆண்டில் கடாரத்தரசன், இராச வித்யாதர சாமந்தன்; அபிமானதுங்க சாமந்தன் என்னும் இரு தூதுவர்கள் மூலம் வேண்டிக் கொண்டவாறு நாகப்பட்டினத்தில் இருந்த இராசராச பெரும்பள்ளி மற்றும் இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்னும் இரண்டு புத்த விகாரங்களுக்கு குலோத்துங்கன் தானும் தனது முன்னோரும் இறையீலியாக வழங்கிய ஊர்களைச் செப்பேடுகளில் வரைந்து அளித்திருப்பதைக் காணும்போது முதலாம் குலோத்துங்க சோழனும் கடாரத்து மன்னனும் உற்ற நண்பர்களாய் விளங்கியிருந்ததைப் புலப்படுப்படுத்துகின்றது. இம் மன்னனுடைய மெய்கீர்த்தியும் இவ்வுண்மையை வலியுறுத்துகின்றது.

சீனம்

         கி.பி. 1077 ஆம் ஆண்டில் சோழ நாட்டிலிருந்து எழுபத்திரண்டு வணிகர்கள் அடங்கிய தூதுக்குழு சீன நாட்டிற்கு சென்றிருந்தது குறித்த செய்தி  அந்நாட்டு வரலாற்றில் காணப்படுகின்றது என்றும் அவ்வாறு சென்ற வணிகர்கள் தந்தங்கள், காண்டாமிருக கொம்புகள், கற்பூரம், பட்டுத் துணிகள், பன்னீர், வத்திகள், கிராம்பு, பெருங்காயம் போன்ற பொருட்களைக் கொண்டு சென்றனர் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதிலிருந்து முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சோழ இராச்சியத்துக்கும் சீன நாட்டிற்கும் இடையே நல்லுறவு நிலவி வந்ததை அறிந்துகொள்ள முடிகின்றது.

காம்போசம் (கம்போடியா)

        காம்போச’ நாடென்பது இக்காலத்தில் கம்போடியா என்னும் பெயரில் அறியப்படும் நாடாகும்.

         முதலாம் குலோத்துங்கனுக்கு கம்போச நாட்டின் மன்னன்  காட்சிப் பொருளாகக் காட்டிய கல் ஒன்றினை குலோத்துங்கன் சோழ இராச்சியத்திற்குக் கொணர்ந்து தில்லை நடராஜர் கோயிலில் வைத்தான் என்பதை ’’ ஶ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்கு காம்போச ராஜன் காட்சியாகக் காட்டின கல்லு இது - உடையார் இராசேந்திர சோழ தேவர் திருவாய் மொழிந்தருளி உடையார் திருச்சிற்றம்பல முடையார் கோயிலில் முன் வைத்தது - ’’ என்று சிதம்பரத்தில் உள்ள கல்வெட்டொன்று குறிப்பிடுவதிலிருந்து முதலாம் குலோத்துங்க சோழன் கம்போச நாட்டோடு நட்புடன் விளங்கியதை அறியமுடிகின்றது.

        காண்பதற்கரிய கல்லினை முதலாம் குலோத்துங்கனுக்கு காட்சிப் பொருளாகக் காட்டிய அக் கம்போச நாட்டின் மன்னன் ஹர்ஷவர்மன் என்பதை அந்நாட்டின் வரலாற்றிலிருந்து அறியமுடிவதாய் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கானோஜ் நாடு

        கன்னோசி மற்றும் கன்னியா குப்ஜம் என்று அறியப்படும் நாடு
கானோஜ் நாடு ஆகும். அந்நாடு, வடக்கே, காசிமாநகருக்கு வடமேற்கே அமைந்திருந்த நாடாகும்.

        கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியின் நாற்பத்தியோராம் ஆண்டாகிய கி.பி.1111 ல் வடமொழியில் வரையப்பெற்ற கன்னோசி நாட்டு மன்னனின் கல்வெட்டொன்று உள்ளது.

        ஆயினும் அக் கல்வெட்டானது முற்றுப் பெறாதிருப்பதால் அது எக்காரணத்தால் அங்கு வரையப்பெற்றது என்பதையும் அது அவ்வாறு முற்றுப் பெறாதிருப்பதன் காரணத்தையும் அறிய இயலவில்லை.  சோழப்பேரரசின் தலைநகருக்கு வர நேர்ந்த தருணத்தில் அங்குள்ள கோயிலுக்கு வந்த அக் கன்னோசி நாட்டு மன்னன் அக்கோயிலின் இறைவனுக்கு நிவந்தம் அளித்து அவ்வறச்செயலைக் கல்வெட்டில் வரையச் செய்திருத்தல் வேண்டும்.

     உத்திரப்பிரதேசத்தின் இலக்ஷமணபுரியில் உள்ள பொருட்காட்சியகத்தில் காணப்படும் கன்னோசி நாட்டு மன்னன் கோவிந்த சந்திரத்தேவனின் செப்பேடுகளில் முதலிலுள்ள ஏடுகளில் காணப்படும் வடமொழி சுலோகங்களே கங்கைகொண்ட சோழபுரத்தில் முற்றுபெறாது உள்ள கல்வெட்டிலும் காணப்படுகின்ற காரணத்தால் அது கன்னோசி மன்னனின் கல்வெட்டுதான் என்பதை அறியமுடிகின்றது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும். )
 [ ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது ]

2 comments: