(சோழ மன்னர்கள் -35.)
பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!
முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120). (முதலாம் பகுதி)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற
அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக
ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன் புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன்.
}
பிறப்பு.
~~~~~~~
இம்மன்னன் தந்தை வழியிற் சோழர்குல மரபினன் அல்ல, ஆயினும் தாய் வழியிற் சோழர் குல மரபினன் என்பதில்
அய்யமில்லை.
முதலாம் இராசராச சோழனுக்கு இராசேந்திரன்
என்ற ஒரே புதல்வனும் இரு புதல்வியரும் பிறந்தனர்.
புதல்வியருள் மூத்தவள் மாதேவடிகள், இளையவள் குந்தவை ஆவர். இக்குந்தவை
கீழச்சாளுக்கிய மன்னனாகிய விமலாத்தித்தனுக்கு மணமுடிக்கப்பட்டாள்.
இராசராச சோழன் மகனும் ‘ கடாரங்கொண்டான் ’, ‘ கங்கை கொண்ட சோழன் ‘ என்றெல்லாம் அறியப்பட்ட முதலாம் இராசேந்திரனின் இரு புதல்விகளுள் அம்மங்கைதேவி என்பவள், கிழைச்சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும் இராசராச சோழனின் மகள் குந்தவைக்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்னும் அரசகுமாரனுக்கு மணஞ் செய்துவிக்கபட்டனள். இவர்களுக்குப் பிறந்த புதல்வனே, பெருவீரனாகிய முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆவான்.
பூச நாள்
~~~~~~~~~
குண்டூர், பாபட்லாவிலுள்ள கோயில் கல்வெட்டினாலும், தற்போது பெண்ணாடம் என அழைக்கப்படும் பெண்ணாகடம் எனும் ஊரின் கோயிலில், இம்மன்னனின் நலன்பொருட்டு, திங்கள்தோறும் பூச நாளில் விழா நடத்திவர நிவந்தம் அளிக்கப்பட்ட செய்தியிலிருந்தும் இம்மன்னன் பூச நாளில் பிறந்தவன் என்பதை அறியமுடிகின்றது.
குண்டூர், பாபட்லாவிலுள்ள கோயில் கல்வெட்டினாலும், தற்போது பெண்ணாடம் என அழைக்கப்படும் பெண்ணாகடம் எனும் ஊரின் கோயிலில், இம்மன்னனின் நலன்பொருட்டு, திங்கள்தோறும் பூச நாளில் விழா நடத்திவர நிவந்தம் அளிக்கப்பட்ட செய்தியிலிருந்தும் இம்மன்னன் பூச நாளில் பிறந்தவன் என்பதை அறியமுடிகின்றது.
இயற்பெயர்
~~~~~~~~~~~~
இம்மன்னது இயற்பெயர் இராசேந்திரன் என்பதை செல்லூர் செப்பேடுகளினால்
அறியலாம். பாட்டன் பெயர் பேரனுக்கு
இடப்படுவது
பண்டையகால வழக்கம் என்பதால் இவனுக்கு அவனது
பாட்டன் இராசேந்திரனது பெயரே சூட்டபட்டது இயல்பே. அதோடு, இவன் தனது வடிவால் கங்கை
கொண்ட சோழன் போன்றே இருந்ததாலும் அவனுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது என்றும்
அறியப்படுகின்றது.
இளமைப்பருவம்
~~~~~~~~~~~~~~~~~~
முதலாம்
குலோத்துங்கன் தனது தந்தைவழியில் கீழைச்சாளுக்கிய
மரபினனாய்
இருந்தாலும்
அவன் சோழ மண்டலத்தில் தன் தாய்வழிப் பாட்டனது அரண்மனையிற் பிறந்து வளரந்து,
தமிழ்மொழியைத் தன் தாய்மொழியாகக் கொண்டு பயின்று தமிழ் மக்களின் பண்புகளையும்
வழக்கங்ஙளையும் மேற்கொண்டிருந்தான் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
இவன், தனது தந்தையும் வேங்கி நாட்டு அரசனுமான இராசராச நரேந்திரனது ஆட்சிக்காலத்திலேயே அந்நாட்டின் இளவரசனாய் பட்டம் சூட்டப்பெற்று, ‘விஷ்ணுவர்த்தனன்’ என்னும் அபிஷேகப் பெயர் கொண்டவனாவான் என்பதை வேங்கி நாட்டில் காணப்படும் இவனது கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகின்றது.
இவன், இளவரசனாய் பட்டம் சூட்டப்பட்டிருந்தாலும், இவனது தந்தையின்
மறைவுக்குப்பின் வேங்கி நாட்டின் ஆட்சி உரிமையைப் பெற இயலாமல் போனதற்குக் காரணம் இவனது
சிறியதந்தையான விசயாதித்தன் என்பவன் வேங்கி நாட்டினை ஆள பெரு விருப்பம் காட்டியதே
ஆகும். அக்காலத்தே, சோழ இராச்சியத்தை ஆண்டுவந்த இவனது மாமன் இரண்டாம் இராசேந்திரன்
மேளைச் சாளுக்கியரோடு போர் புரிவதில் ஈடுபட்டிருந்ததாலும், தன் நாட்டின் நலன்கருதி
கலகம் விளைவிக்க விரும்பாததாலும், இவனால்
வேங்கியின் மீது தனக்கிருந்த ஆட்சி உரிமையை நிலை நிறுத்துவது இயலாமல் போயிற்று
எனலாம்.
விசயாதித்தன் வேங்கியில் ஆட்சிபுரிந்துவந்தபோது குலோத்துங்கன் சோழச்சக்ரவர்த்தியாக வீற்றிருந்து பல மன்னர்களோடு ஈடுபட்ட போர்களுள்
சிலவற்றில் தனது அம்மானுக்கு உதவியாயிருந்தான்
என்றும் அறியப்படுகின்றது.
மேலும், சோழச்சக்ரவர்த்தி வீரராசேந்திரன் கடாரத்து அரசனுக்கு உதவ அனுப்பிய, கடராத்துக்குச் சென்ற, பெரும் படையின்
தலைவர்களுள் இக் குலோத்துங்கனும் ஒருவனாவான்
என்பதிலிருந்தும் இவன் தனது இளமைக்காலத்தே, சிறப்பான போர்ப் பயிற்சி பெற்ற, ஒப்பற்ற
வீரணாகத் திகழ்ந்தான் என்பதை அறியலாம்.
சோழநாட்டில், வீரராசேந்திரனது காலத்திற்குப்பின், சிலதிங்கள் வரையில் அரசாண்ட வீரராசேந்திரனது புதல்வன் அதிராசேந்திர சோழன் கி.பி.1070 ஆம் ஆண்டின் இடைக்காலத்தில் கடும் நோய்வாய்ப்பட்டு இறந்தனன்.
அதிராசேந்திர சோழனுக்கு மகப்பேறு இல்லாத காரணத்தாலும், சோழர் மரபில் வேறு அரசகுமாரன் ஒருவனும் இல்லாமையாலும் சோழநாடு ஒருசில காலம் அரசன் இல்லாது அல்லலுற்றது.
( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும்)
No comments:
Post a Comment