Saturday, 23 February 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XVII, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-2) Kulothunga Chozhan I (part-2).


                                              (சோழ மன்னர்கள் -36.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!
முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).   (இரண்டாம் பகுதி)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன் புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன். }

உள்நாட்டுக் குழப்பமும் முடிசூடலும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     சோழ நாடு அரசன் இல்லாது அல்லலுற்ற வேளையில், குறுநில மன்னர்களின் கலகம் ஒருபுறமாயும், உள்நாட்டில் குழப்பம் மறுபுறமுமாயிருக்க சோழ நாட்டு மக்கள் யாவரும் அரசன் இல்லாது பெரும் துன்பத்தில் ஆழ்ந்தனர்.

      இவ்வாறு சோழ நாடு மன்னன் இல்லாது நிலைகுலைந்து இருந்த செய்தியை அறிந்த, அக்காலத்தே வடபுலத்தில் போரில் ஈடுபட்டிருந்த, முதலாம்
குலோத்துங்கனாகிய இராசேந்திரன் கங்கைகொண்ட சோழனின் மகள் வழிப்பேரன் எனும் உரிமையை அடிப்படையாகக் கொண்டு சோழ நாட்டின் அரச உரிமையைப் பெற்று அந்நாட்டினை ஆளலாம் எனும் எண்ணத்தோடு கங்கைகொண்ட சோழபுரம் விரைந்தான்.

    அங்கிருந்த அமைச்சர்கள், படைத்தளபதி முதலான அரசியல் அதிகாரிகள் அனைவரும் இவ்வரசகுமாரன் சரியான தருணத்தில் வந்தமைக்கு மகிழ்ந்து, சோழ நாட்டினை ஆள இவனுக்குள்ள அரச உரிமையையும் ஏற்றுக் கோண்டு சோழர் மரபில் அந்நாட்டினை ஆள வேறு எவரும் இல்லாத காரணத்தால் சோழ நாட்டினை ஆளும் உரிமையை இவனுக்கே அளிப்பது என்று உறுதி செய்தனர்.

   அவ்வறே, இவனுக்கு முடிசூட்டுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன.

       கி.பி.1070 ஆம் ஆண்டு சூன் திங்கள் 9 ஆம் நாளில் சோழ நாட்டின் தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்தில் இராசராச
நரேந்திரனின் மகனாகிய இராசேந்திரன் சோழ நாட்டின் மன்னனாய் முறைப்படி முடிசூட்டப்பெற்றான். முடிசூட்டப்பெற்ற அந்நாளில் முதலாம் குலோத்துங்கன் என்னும் அபிடேகப் பெயரும் பெற்றான்.

முதலாம் குலோத்துங்கன் முடிசூட்டப்பெற்றது குறித்த ஐயங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      இம்மன்னன் சோழ நாட்டு ஆட்சியைப் பெற்றது குறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடத்தே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
     
              
அதில் ஒன்று, பில்ஹணர் எனும் வடமொழிப் புலவர், தான் எழுதிய, மேலைச்சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்ரமாதித்தனின் வரலாற்றில், அதிராசேந்திர சோழனுக்கு முடிசுட்டுவிழா நடக்கவிருந்தபோது ஏற்பட்ட உள்நாட்டு கலகத்தில் அவன் கொல்லப்பட்டதாய்  கூறுகின்றார் என்பது.

              
பில்ஹணர் கூறியவாறு இருக்க வாய்ப்பில்லை என்பதற்கு சான்றாய் விளங்குவது, அதிராசேந்திர சோழனது தந்தையின் காலத்திலேயே  அவனுக்கு அடுத்து ஆட்சிக்கு வருபவன் இவனே’ என்று அறிவிப்பதாய் சோழர் குல வழக்கபடி இளவரசு பட்டம் சூட்டப்பட்டது என்பதே.

      மேலும்,  சோழமன்னன் அதிராசேந்திர சோழனது ஆட்சிக்காலத்தில் கலகம் விளைந்ததாய்  கல்வெட்டுக்கள் இல்லை மாறாக அவனது அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் அவனோடு இருந்து கோவிலுக்கு இறையிலி அளித்தார்கள் என்றும் மக்களால் போற்றப்பட்டவன் என்பதுவுமே கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.

      அவ்வாறே மக்களால்
 பெரிதும் போற்றப்பட்டு பெரும்புகழுடன் வாழ்ந்து வந்தவன் அம்மன்னன் என்பது அதிராசேந்திர சோழனின் மெய்கீர்த்தியிலிருந்தும் புலப்படும்.

     மேலும், முதலாம் குலோத்துங்கன், சோழ இராச்சியத்தைக்  கைப்பற்ற சோழ நாட்டில் கலகம் ஏற்படச்செய்து அதிராசேந்திர சோழனைக் கொன்றிருக்கக் கூடும் என்றும் ஒரு சாரார் கூறுவர்.  

         அரசன் இன்றி அவதியுற்றது சோழநாடு”  என்று கலிங்கத்துப் பரணியும், “நோய்வாய்ப்பட்டிருந்தான் மன்னன்” என்ற அதிராசேந்திர சோழன் காலத்துக்  கல்வெட்டுச்செய்தியும்  உறுதிசெய்வதால் அச்செய்தியும்  உண்மையல்ல என்பதையே புலபடுத்துகின்றது.

     இவையன்றி, கங்கைகொண்ட சோழனின் மனைவி, தன்
 பேரனாகிய இவனை சுவீகாரம் எடுத்துக்கொண்டாள் என்றும் சிலர்
கூறுவர். கங்கைகொண்ட சோழனுக்கு இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன்,  சுந்தர சோழபாண்டியன்  என்றழைக்கப்பட்ட  இராசமகேந்திரன் எனும் புதல்வர்கள்  இருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுவதால் அவன் மனைவி இவனை
சுவீகாரம் எடுத்துக்கொண்டாள் என்பதும் பொருந்தாமல் போகின்றது.

   மேலும், கலிங்கத்துப் பரணி இவனை அவள் பாராட்டியதாய்க் கூறுகிறதே அன்றி சுவீகாரம் எடுத்துக்கொண்டாள் என்பதை உணர்த்தவில்லை என்பதை காண்க.

இராசகேசரி
~~~~~~~~~~~~~
     முதலாம் குலோத்துங்க சோழன் முடிசூட்டப் பெற்றதும், சோழர் குல மரபையொட்டி, இராசகேசரி என்ற பட்டப் பெயர் புனைந்து ஆட்சிபுரியலானான்.

( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும். )

[ ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது ]

No comments:

Post a Comment