Tuesday, 12 March 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XVIII, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-3) Kulothunga Chozhan I (part-3).



                                          (சோழ மன்னர்கள் -37.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).  (மூன்றாம் பகுதி)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன் புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன். }

       கீழைச் சாளுக்கிய அரசகுமாரனான இராசேந்திரன் குலோத்துங்க சோழன் என்னும் பெயரோடு சோழ இராச்சியத்திற்கு சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டதும் சோழ இராச்சியம் முழுமையிலும் அமைதி நிலவத்தொடங்கியது. சோழ இராச்சியத்திற்குட்பட்ட குறுநிலமன்னர்களும் இவனுக்கு அடங்கி நடக்கத்தொடங்கினர்.

       இம்மன்னன் சோழ இராச்சியத்திற்கு இன்றியமையாத போர்களில் மட்டுமே ஈடுபட்டு ஏனைய பயனற்ற போர்களைத் தவிர்த்தமையை அறியும்போது, இம்மன்னன் நாட்டு மக்களின் நலனை மட்டுமே தனது குறிக்கோலாகக் கொண்டு ஆட்சிபுரிந்தான் என்பதை உணரமுடிகின்றது.

       தனக்குமுன்னர் ஆண்ட தனது மாமன்மார்கள் துங்கபத்திரை ஆற்றிற்கு வடக்கே அமைந்த சாளுக்கிய நாட்டைக் கைப்பற்றி அதனை சோழ சாம்ராச்சியத்தின் ஒரு அங்கமாக ஆக்கவேண்டும் என்ற வேட்கையில் நடத்திய போர்களினால் உற்ற இன்னல்களை இளமைக்காலந்தொட்டே கண்ணுற்ற முதலாம் குலோத்துங்க சோழன் அவ்வண்ணெத்தை முற்றிலும் விட்டொழித்தான்.

       மாறாக, சோழ இராச்சியத்தின் குடிமக்களுக்கு நலம் தருவனவற்றை செய்து ஆட்சி புரிவதே சிறப்பெனக் கருதினான். இதனால் அவனது ஆட்சியின் கீழ் சோழ இராச்சியத்தில் மேலும் அமைதி நிலவத்தொடங்கியது.

      இம்மன்னன் சோழ நாட்டிற்குச் சக்ரவர்த்தியாக ஆகிய காலத்தில் சோழ இராச்சியத்தின் வடக்கு எல்லையில் அமைந்திருந்த வேங்கிநாடு இவனுக்குரியதாக இருந்து இவனது பிரதிநிதியால் ஆட்சி செய்யப்பட்டதால் வடக்கு எல்லைவழியாக இராச்சியத்தின்மீது பகைவர்
படையெடுத்து வருவதென்பது இயலாத காரியமாயிற்று. இக்காரணத்தாலும் சோழ இராச்சியத்தில் அமைதி தழைத்தோங்கியது எனலாம்.

        முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் மிகுதியாகக் காணப்படுகின்றன. மேலும், தற்போதைய ஆந்திர, கர்நாடாக மாநிலங்களில் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. அக் கல்வெட்டுக்களில் இம்மன்னனது நீண்டகால ஆட்சியின் காரணமாய் வரையப்பெற்ற பல மெய்கீர்த்திகள் காணப்படுகின்றன.

         இம்மன்னனது மெய்கீர்த்திகளின் உதவியோடு ஆராயும்போது அவன் நிகழ்த்திய போர்கள் குறித்த செய்திகளை ஆறியமுடிகின்றது.

         இவன் தனது இளமைப் பருவத்திலேயே சக்கரகோட்டப் பகுதியை ஆட்சிபுரிந்த தாராவர்ஷன் என்பவனைப் போரில் வென்று வாகை சூடினான் எனபதையும் வயிராகாரம் என்ற ஊரில் எண்ணற்ற யானைகளை கைப்பற்றினான் என்பதையும் ‘வஞ்சனை கடந்து வயிராகாரத்து’ எனத் தொடங்கும் மெய்கீர்த்தியின் மூலம் அறியமுடிகின்றது.

        சக்கரகோட்டம் என்பது முன்னர் வத்ச இராச்சியமாகும், இக்காலத்தே அது ‘சித்திரகூட்’ என்று அறியப்படுகின்றது.

         முதலாம் குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தியிலுள்ள   ‘கொந்தளவரசர் தந்தனம் இரிய-வாளுறை கழித்துத் தோள்வலி காட்டி…போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி’ எனும் பகுதியை  நோக்கும்போது இம்மன்னன் சோழநாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் முன்னரே வடக்கே மேலைச்சாளுக்கியருடன் போர்புரிந்து வெற்றியடைந்தவன் என்பது புலப்படும். செல்லூர் செப்பேடுகள் குறிப்பிடுவன இதனைப் பற்றியதாயிருக்கலாம்.

         முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற போர்களை ஆராய்ந்து பார்த்தால் அவன் நிகழ்த்திய போர்களுள் ஒன்றிரண்டைத்தவிர மற்றவையெல்லாம் இம்மன்னனது ஆட்சியின் முற்பகுதியிலேயே நடைபெற்றிருந்தன என்பதை அறியலாம்.

மேலைச்சாளுக்கியருடன் போர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      மேலைச்சாளுக்கிய குந்தள மன்னன்  ஆறாம் விக்ரமாதித்தன் தனது மைத்துனனான அதிராசேந்திர சோழன் இறந்தபின்னர் கீழைச்சாளுக்கிய அரசகுமாரனாகிய இராசேந்திரன் ‘குலோத்துங்கன்’ எனும் பெயரில் சோழநாட்டிற்கு முடிசூட்டப்பட்டதை அறிந்து, கீழைச்சாளுக்கியமாகிய வேங்கி நாடும் சோழ இராச்சியமும் ஒருங்கிணைந்து ஓர் அரசனின் கீழ் இருப்பது தன் ஆளுகைக்கு பேரிடராய் ஆகும் என்று கருதி சோழ இராச்சியத்தின் வலிமையைக் குறைக்கும் எண்ணத்தோடு ஐந்தாண்டு காலம் முயன்று ஒரு பெரும் படையினைத் திரட்டிவந்தான்.           

     இதனையறிந்து, குந்தள நாட்டின் ஒரு பகுதியைண்டுவந்தவனும், மற்றொரு பகுதியை ஆளும் விக்ரமாதித்தனின் பகையாய் விளங்கிய, இரண்டாம் சோமேசுவரனைத் தன் பக்கம் இணைத்துக்கொண்டான் குலோத்துங்கன்.



( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும். )
[ ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது ]

No comments:

Post a Comment