Monday, 14 January 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XIV, Virarajendra Chozhan (part-2) .

                                   (சோழ மன்னர்கள் -33.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!
வீரராசேந்திர சோழன் கி.பி.1063-1070.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(நிறைவுப் பகுதி)

           "வடகடலென்ன வகுத்த அத்தானையைக் கடகளிறொன்றால் கலக்கி " என்ற வீ ரராசேந்திரனின் கல்வெட்டொன்று கூறுவதிலிருந்து இவனின் மேலைச் சாளுக்கியரோடான மூன்றாம் முறையான போர் கிருஷ்ணை துங்கபத்ரை ஆறுகள் சங்கமிக்கும் கூடல் சங்கமம் எனும் இடத்தில்  கி.பி  1064 ஆம் ஆண்டில் நடைபெற்றது என்பதையும் , அப்போரிலும் வீ ரராசேந்திரன் ஆகவமல்லனை வென்று ஆகவமல்லனின் போர்ப்பாசரையை முற்றுகையிட்டு அவனது மனைவியரையும் பட்டத்து யானையையும்  வராகக் கொடியையும் குதிரைகளையும்  யானைகளையும் கைப்பற்றிக்கொண்டு கங்கை கொண்ட சோழபுரத்தை அடைந்து வெற்றி விழாவிற்கான அபிஷேகமும் செய்துகொண்டான் என்பதையும் அறியலாம்.

     விக்ரமசோழன் உலாவும், கலிங்கத்துப்பரணியும் இவனது கூடல் சங்கமத்தின் வெற்றியை பாடுவதிலிருந்து இம்மன்னன் நடத்திய போர்களில் கூடல்சங்கமப் போர் வெற்றியே சிறப்பானதாய் இருந்திருக்கவேண்டும் என்று தெறிகின்றது .

      வீ ரராசேந்திர சோழனின் மற்றொரு கல்வெட்டுக் கூறுவதிலிருந்து இவனின் மேலைச் சாளுக்கியரோடான நான்காம் போரும்  கிருஷ்ணை துங்கபத்ரை ஆற்றங்கரையில் கி.பி  1066 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்  நடை பெற்றிருக்கவேண்டும்.

      கி.பி  1067 ஆம் ஆண்டில், குந்தள மன்னன்  ஆகவமல்லன், தான் தோல்வியுற்ற, கூடல்சங்கமத்திற்கு தன்னோடு மீண்டும் போர்புரிய  வரவேண்டும் என்றும் அவ்வாறு வராது அஞ்சுபவர் மன்னரே அல்ல என்றொரு ஓலையெழுதி அதனை கங்காகேத்தன் என்பவன் மூலம் வீரராசேந்திரனுக்கு  அனுப்ப அதன்பொருட்டு அவனை  வெல்ல பெரும்படையோடு சென்று சங்கமத்தில் ஒரு மாத காலம்  தங்கியிருந்தும் ஓலையில் சொன்னபடி  ஆகவமல்லன் போரிட வரவில்லை.


      
அங்ஙனம்
அவன் வராதமையால் பெருஞ்சினமுற்ற வீரராசேந்திரன்
அப்பகுதி மேலைச் சாளுக்கியத்  தலைவைர்களைத் தோற்கடித்து வெற்றித்தூண்  ஒன்றினை நிறுவினான். அதோடு ஆகவமல்லனின்  உருவம் ஒன்றை ஏற்படுத்தி அதன் கழுத்தில் தன்னிடம் ஐந்துமுறை  புறமுதுகு காட்டித் தோற்றோடியவன் என்று எழுதுவித்து  இன்னும் பிற அவமானங்களும் செய்வித்தான் என்று அவனது கல்வெட்டு கூறுகின்றது.

            அத்தோடு, ஆகவமல்லன் வென்ற வேங்கி நாட்டை  மீண்டும் வென்று மீட்க்காமல் திரும்புவதில்லை என்றும் "வல்லவனாயின் வந்து காக்க" என்று செய்தி அனுப்பிவிட்டு வேங்கி நோக்கி படையோடு சென்ற வீரராசேந்திரனை எதிர்கொண்ட மேலைச் சாளுக்கிய தலைவர்களை விசயவாடை நகருக்கு அண்மையில் நடந்த போரில் தோற்கடித்து கலிங்கம் கடந்து வேங்கி நாட்டை மீண்டும் கைப்பற்றிக் கீழைச் சாளுக்கிய மன்னனாகிய ஏழாம் விசயாதித்தனிடம் அளித்து வெற்றி வேந்தனாய் தலைநகர் திரும்பினான்.

     அவ்வாறு ஆகவமல்லன் போரிட வராதிருக்கக் காரணம் அம்மன்னன் நோய்வாய்ப்பட்டு இறந்தான் என்பது வரலாற்றில் பின்னர் அறியப்படுகின்றது.
    
       ஆகவமல்லன் இறந்தபின்னர் அவனது மூத்த புதல்வன் இரண்டாம் சோமேசுவரன் முடிசூடி ஆட்சி செய்யும்போது அந்நாட்டு மக்கள் பலவகையாலும் இன்னல்பட்ட காரணத்தால் அவனுக்கும் அவனது தம்பி விக்ரமாதித்தனுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இதனால் வீரராசேந்திர சோழனுக்கும் விக்ரமாதித்தனுக்கும் நட்புறவு ஏற்பட  அதன் காரணமாய் வீரராசேந்திர சோழன் இரண்டாம் சோமேசுவரனைப் போரில் வென்று பின்னர் அந்நாட்டினை விக்ரமாதித்தனுக்கு அளித்தான் என்பது அவனின் மெய்கீர்த்தியால் தெரிகின்றது.

ஈழம் மண்டலம்
~~~~~~~~~~~~~~~~~~
    வீரராசேந்திர சோழனுடைய காலத்தில் ஈழநாட்டின் தென்கீழ்ப்பகுதியான ரோகண நாட்டலிருந்து சோழருக்கெதிராய் கலகம் செய்துவந்த விசயவாகு வென்றடக்கப்பட்டு ஈழம் மண்டலம் முழுதும் சோழ இராச்சியத்துக்குட்பட்டதை இவனது கல்வெட்டு கூறுகின்றது. இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சமும் இதை உறுதி செய்கின்றது.

‘கடாரம் எறிந்து கொடுத்தருளி’
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
   வீரராசேந்திர சோழனுடைய ஆட்சிக் காலத்தின் ஏழாம் ஆண்டு கல்வெட்டொன்று ‘மன்னர்க்குக் கடாரம் எறிந்து கொடுத்தருளினான்’
என்று கூறுவதிலிருந்து, கி.பி. 1025-ல் கங்கை கொண்ட சோழன் ஶ்ரீவிஜயராச்சியத்தின்மேல் படையெடுத்து வென்ற கடாரத்தினை சோழராச்சியத்திற்குட்பட்டு ஆண்டுவந்த கடார மன்னன் அதனை பகைவரிடம் இழந்து வீரராசேந்திரனிடம் தஞ்சம் புகுந்தனன் என்பதும் வீரராசேந்திரன் அப்பகைமன்னனை வென்று கடாரத்தை மீட்டளித்தமையும் புலப்படுகின்றது.

இறப்பு
~~~~~~~
     வீரராசேந்திர சோழனது மெய்கீர்த்தி அவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டின் நிலையோடு நின்றிருப்பதால் இம்மன்னன் கி.பி.1070 ஆம் ஆண்டு இறந்திருக்கவேண்டும்.


பட்டங்கள்
~~~~~~~~~~~
       வீரராசேந்திர சோழன் காலத்திய கல்வெட்டுக்களிலிருந்தும் செப்பேடுகளிலிருந்தும் அவனுக்கு ‘சகல புவனாசிரயன்’ ‘ஶ்ரீமேதினி வல்லவன்’ ‘மகாராசாதிராசன்’ ‘பரமேசுவரன்’ ‘பரமபட்டராகன்’ ‘இரவிகுலதிலகன்’ ‘ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்ட ராசசேகரன்’ ‘இராசராசேந்திரன்’ ‘வீரசோழன்’ ‘கரிகாலசோழன்’ எனும் பட்டங்கள் வழங்கிவந்தமை புலப்படுகின்றது.

பட்டத்தரசியும் மக்களும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    இம்மன்னனது பட்டத்தரசி ‘உலக முழுதுடையாள்’  எனுஞ்சிறப்புப் பெயர் கொண்டவள் ஆவாள்.

     இவனுக்கு, மதுராந்தகன், கங்கை கொண்ட சோழன் எனும் இரு புதல்வர்கள் ஆவர். இவனுக்கு ஒரு புதல்வி இருந்தனள் என்பதும் அவளை மேலைச் சாளுக்கிய விக்ரமாதித்தனுக்கு மணஞ்செய்து கொடுத்ததையும் அறியமுடிகின்றது.

தமிழ்மொழியில் ஈடுபாடு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     வீரராசேந்திர சோழனின் விருப்பத்திற்கேற்ப, பாண்டிமண்டல பொன்பற்றி எனும் நகரின் சிற்றரசனாயிருந்த புத்தமித்ரன் என்பான் ஐந்திலக்கணங்களும் அடங்கிய நூல் ஒன்றை எழுதி அதற்கு ‘வீரசோழியம்’ எனும் பெயருமிட்டான். இதிலிருந்து தமிழ்மொழியின்பால் வீரராசேந்திர சோழனுக்கிருந்த ஈடுபாட்டை அறியமுடிகின்றது.

 
(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)


Monday, 7 January 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XIV, Virarajendra Chozhan (part -1).



                                         (சோழ மன்னர்கள் -32.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!
 வீரராசேந்திர சோழன் கி.பி.1063-1070.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     இம்மன்னன் ‘கங்கை கொண்ட சோழன்’ என்று அழைக்கப்படும் முதலாம் இராசேந்திர சோழனின் புதல்வர்கள் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன்,  சுந்தர சோழபாண்டியன்  என்றழைக்கப்பட்ட இராசமகேந்திரன் மற்றும் வீரராசேந்திரன் என்போருள் கடைசீப் புதல்வன் ஆவான் .

     சோழ இராச்சியத்தை இராசாதிராச சோழனுக்குப் பின்னர் அவனின் தம்பியாகிய இரண்டாம் இராசேந்திரன் ஆட்சி செய்தான்.

      இரண்டாம்
இராசேந்திர சோழனின்  காலத்திலேயே,  இளவரசு பட்டம் சூட்டப்பெற்ற, அவனது தம்பி இராசமகேந்திரன்  மாண்டதால், வீரராசேந்திரன் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றான். இவனது ஆட்சிக்காலத்தின் நான்காம் மற்றும் ஏழாம் ஆண்டுகளின் கல்வெட்டுக்களால் இவனுக்குக் கி.பி.1062ம் ஆண்டில் இளவரசுப் பட்டம் சூட்டப்பெற்றிருக்க வேண்டும் என்பதை ஆறியமுடிகின்றது.

ஆவணி ஆயில்யம்
~~~~~~~~~~~~~~~~~~

       
"
ஸ்ரீவீர ராஜேந்திர தேவர் ஆட்டைத் திருநாள் ஆவணித் திங்கள் திருவாயிலியத்தில்" என்று திருமுக்கூடலில் காணப்படும் கல்வெட்டுச் சொற்றொடராலும், தற்சமயம் நாகை  மாவட்டத்தில் உள்ள ஊரான , திருவெண்காட்டில், திங்கள் தோறும் ஆயிலிய நாளில் திருமஞ்சனமாடித் திருவிழா நடத்த இவனது ஆட்சியின் இரண்டாம் ஆண்டில் நிவந்தம் விடப்பட்டிருப்பதாலும், இவனது அதிகாரிகளுள் ஒருவனால் திருவற்றியூர்க் கோவிலில்  ஆயிலிய நாளில் சிறப்புவிழா நடத்த ஏற்பாடு செய்திருப்பதாலும் இம்மன்னன ஆவணி மாதத்தில் ஆயில்ய நாளில் பிறந்தான் என்பது தெரியவருகின்றது.

இராசகேசரி
~~~~~~~~~~~~

     
சோழ
இராச்சியத்தை இவனுக்கு முன் ஆண்ட இவனது தமையன் இரண்டாம் இராசேந்திரன் பரகேசரி எனும் பட்டம் கொண்டு ஆண்டதால்
சோழர் குல வழக்கப்படி இவன் தனக்கு இராசகேசரி எனும் பட்டம் சூட்டிக்
கொண்டு ஆண்டான். 

மெய்கீர்த்தி
~~~~~~~~~~

 
இம்மன்னனது கல்வெட்டுக்களில் இவனுக்குரியதாய் காணப்படும் மெய்கீர்திகளில் ஒன்றில் காணப்படுவதிலிருந்து இவனது சகோதரர்களைப் போன்றே பேராற்றலுடைய பெருவீரனாக வாழ்ந்தான் என்பதும் இவனது ஆட்சிக்காலம் முழுதும் போரிலேயே கழிந்தது என்பதும் தெரிகின்றது.

குந்தளரோடான  ஐந்து போர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

          
"
ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்டு " என்று காணப்படும் இவனது கல்வெட்டுத் தொடரிலிருந்து இம்மன்னன் தனது ஆட்சிக்காலத்தில் மேலைச்சாளுக்கிய ஆகவமல்லனோடு ஐந்துமுறை போர்புரிந்து வென்றிருத்தலை அறியமுடிகின்றது.
   
     அவற்றில் முதலாவது போரானது,  வீரராசேந்திர சோழன் தனது முடிசூட்டு விழாவின்பொருட்டு தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்ததைப் பயன்படுத்திக் குந்தள வேந்தன்   ஆகவமல்லனின் புதல்வன் விக்கிரமாதித்தன் என்பவன் சோழ இராச்சியத்தின் வடபகுதியில் இருந்த கங்கபாடி நாட்டினைக் கைப்பற்ற முயல்வதையறிந்த  வீரராசேந்திர சோழன் பெரும் படையுடன் சென்று விக்கிரமாதித்தனை வென்று துங்கபத்திரை ஆற்றிற்கப்பால் ஒடிவிடச் செய்ததாகும்.

மேலை
- கீழைச் சாளுக்கியரிடையேயான போர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

         
வேங்கி நாட்டினை ஆண்டுவந்த கீழைச் சாளுக்கிய மன்னர் குலமானது முதலாம் இராசராச சோழன் காலத்திலிருந்தே சோழர்  குலத்தோடு நெருங்கிய உறவோடும் பற்றோடும் இருந்துவந்தனர். அக்காரணத்தால் சோழ இராச்சியத்தின் அவ்வடவெல்லையில் அமைதி நிலவியது. இதனை என்றும் நிலை நிறுத்திக்கொள்வதில் சோழமன்னர் முயன்று அதில் முழுதும் வெற்றியடைதிருந்தனர் என்றே சொல்லலாம்.

           
இங்ஙனம் கீழைச் சாளுக்கியர் தம் பகைவராகிய சோழரோடு நெருங்கிய உறவில் இருப்பதை  விரும்பாத மேலைச்சாளுக்கியர்   வேங்கி நாட்டினரை தம்மோடு இணைத்துக்கொள்வதில் பெரும் அக்கறைகாட் டினர். அம்முயற்சியில் வெற்றியடையாத அவர்கள் தக்க தருணம் பார்த்து காத்திருந்தவேளையில், கங்கைகொண்ட சோழனின் மருமகனும், கீழைச் சாளுக்கிய மன்னனுமான  இராசராச மகேந்திரன் வேங்கியில் இறந்தவுடன் கீழைச் சாளுக்கிய நாட்டினை தன் நாட்டோடு இணைக்க அதுவே தக்க தருணம் என்ற எண்ணத்தில் ஆகவமல்லன் பெரும் படையொன்றை அனுப்பினான்.

        இதனை அறிந்த வீரராசேந்திரன், சோழரின் நெருங்கிய உறவாகிய வேங்கியைக் காக்க பெரும் படையோடு சென்று, ஆகவமல்லனின் படையோடு போரிட்டு, அவனது படைத்தலைவனைக் கொன்று மேலைச்சாளுக்கியர்
   கீழைச் சாளுக்கிய நாட்டினைக் கைப்பற்றும் முயற்சியை முறியடித்தான். இப்போர் வீரராசேந்திரன் மேலைச்சாளுக்கியரோடு நடத்திய இரண்டாம் போராகும்.
(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)