Sunday 23 December 2012

சோழ மன்னர்கள் Later Chola Kings-XIII, Rajendra Chozhan II.


                                 (சோழ மன்னர்கள் -30,31.)
   பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம்,நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!

இரண்டாம்
இராசேந்திர சோழன் கி.பி.1051-1063.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(முதலாம் பகுதி )



     இம்மன்னன் ‘கங்கை கொண்ட சோழன்’ என்று அழைக்கப்படும் முதலாம் இராசேந்திர சோழனின் புதல்வர்கள் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன்,  சுந்தர சோழபாண்டியன்  என்றழைக்கப்பட்ட இராசமகேந்திரன் மற்றும் விரராசேந்திரன் என்போருள் இரண்டாம் புதல்வன் ஆவான் .

இளவரசுப் பட்டம்
~~~~~~~~~~~~~~~~~~~
     இவனுக்கு கி.பி. 1051-ஆம் ஆண்டு முடி சூட்டபட்டதாய் மைசூர் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது.  சோழ இராச்சியத்தை ஆண்டுவந்த இவனது தமையன் முதலாம் இராசாதிராசன் கி.பி. 1054 ஆம் ஆண்டில்தான் உயிர் துறந்தான் என்பதால், அம்முடிசுட்டுதல், இராசாதிராச சோழன் தனது ஆட்சிக்காலத்திலேயே  தன் தம்பியாகிய  இவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டபட்டமையைக் குறிக்கின்றது  என்பதை  அறியலாம்.

    பிற்கால சோழமன்னரது காலத்தில், ஆட்சிக்கு வரும் மன்னனது காலம் அவன் இளவரசு பட்டம் பெற்ற  காலந்தொட்டே கணக்கிடப்படுவது வழக்கமாகும்.

போர்க்களத்தில் முடிசூடல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  
        கிபி. 1054-ஆம் ஆண்டில் முதலாம் இராசாதிராசன் கொப்பத்தில் மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனுடன் நிகழ்த்திய போரில்  போர்க்களத்திலேயே இராசாதிராசன் வீர மரணம்  அடைந்ததும், சோழரின் ஆயத்தநிலைப் படையோடிருந்த இரண்டாம் இராசேந்திரன் போர்க்களம் புகுந்து, தம் மன்னனை இழந்த  சோழற்படையில் அமைதி நிலவுமாறு

செய்தமையும், பின்னர், அஞ்சா நெஞ்சோடு பெருவீரம்காட்டிப் போர்புரிந்து வெற்றிபெற்று அக்குந்தள நாட்டுப் போர்க்களத்திலேயே   முடிசூட்டிக்கொண்டமை பற்றியும் திருச்சிராப்பள்ளி திருமழப்பாடியில் காணப்படும் கல்வெட்டு கூறுகின்றது.

இதனைக்  கலிங்கதுபரணியில் செயங்கொண்டனார்

"
ஒருகளிற்றின் மேல் வருகளிற்றை யொத்த
 துலகுயக்கொளப் பொருதுகொப்பையிற்
 பொருகளத்திலே முடிகவித்தவன்

 என்று கூறியிருத்தல் காண்க. இப்போர் இரண்டாம் இராசேந்திரன் நிகழ்த்திய முதலாவது  மேலைச் சாளுக்கியப்  போராகும்.

‘தம்பித் துணைச்   சோழவள நாடு’
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
         இவன் இளவரசனாய்  இருந்து தனது தமையன் இராசாதிராசன்  பல ஆண்டுகள் மேலைச் சாளுக்கியரோடு நிகழ்த்திய போர்களில் பலவகையிலும் அவனுக்கு உதவியாய் இருந்ததை கல்வெட்டுக்களால்  அறிய முடிகின்றது.

                    
சோழர் இராச்சியத்தில் தொண்டை மண்டலத்தில் அமைந்திருந்ததும், இக்காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளதுமான மரக்காணம் எனும் ஊரில் வரையப்பட்டுள்ள இராசாதிராசன் காலத்திய கல்வெட்டில், அவ்வூரானது, "தம்பித்துணைச்   சோழவள நாட்டில் உள்ளது" என்று  குறிப்பிட்டிருப்பதால் சோழ இராச்சியத்தின் தொண்டைமண்டலத்தில் அமைந்த ஒரு வளநாட்டிற்கு  தம்பித்துணைச்   சோழவள நாடு எனப் பெயர் வைத்திருந்ததை நோக்குமிடத்து இவனை இராசாதிராசன் எத்துணையளவு மதிப்புடன் பராட்டியுள்ளான்  என்பது விளங்கும்.


'பரகேசரி இரண்டாம் இராசேந்திரன்'
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

       தனது தமையன் இராசாதிராசன்இராசகேசரி’ எனும் பட்டம் கொண்டு ஆட்சி செய்துவந்தமையால் சோழர் குல வழக்கப்படி இரண்டாம் இராசேந்திரன் 'பரகேசரி'  எனும் பட்டம் புனைந்து கொண்டு ஆட்சி செய்யலானான்.

       இம்மன்னது ஆட்சிக்காலத்தின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டில் இவன் நிகழ்த்திய முதாலாவது மேளைச் சாளுக்கியப் போர் மற்றும் ஈழப் போர் ஆகியவை குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. எனவே இவன் அடுத்து நிகழ்த்தியது ஈழப்போர் என்பதை அறியலாம்.


ஈழப்போர்
~~~~~~~~~~~
        இரண்டாம் இராசேந்திர சோழன் நிகழ்த்திய ஈழப் போர் கி.பி. 1054 ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது கி.பி.1055 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ நிகழ்ந்திருக்கவேண்டும் என்பது கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது.
                                                  

(இறுதிப் பகுதி )

     ஈழநாட்டின் பெரும்பகுதி சோழரின் இராச்சியத்தில் இருந்தாலும் அதன் தென்கீழ்ப் பகுதியில் அமைந்திருந்த ரோகண நாட்டினில் சிங்கள அரசகுல வழியினர் இருந்துகொண்டு வேற்றுநாட்டு அரசர் உதவியோடே சோழருக்கெதிரான கலகங்களை விளைவித்துக் கொண்டு ஈழநாடு முழுதையும் மீண்டும் தாம் கைக்கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
     இரண்டாம் இராசேந்திர சோழன் காலத்திலும் அவ்வாறான கலகங்கள் ஏற்பட்டதால் அவற்றை அடக்கி சோழ இராச்சியத்தில் அமைதி ஏற்படுத்தும்பொருட்டே இரண்டாம் இராசேந்திரன் தனது படைகளை ஈழநாட்டிற்கனுப்பி சிங்களரோடு போர்புரிந்திருக்க வேண்டும்.
      ஈழத்தில் நடைபெற்ற அப்போரில், கலிங்க மன்னனும் அக்காலத்தே இலங்கைக்குச் சென்று சோழராச்சியத்திற்குட்படாத பகுதியை ஆட்சி செய்துவந்த வீரசலாமேகன்  என்பவன் சோழர் படையால் கொல்லப்பட்டான் என்றும், இலங்கையரால் இறைவனாகப் போற்றப்பட்ட மாணாபரனின் இரு மகன்கள் போர்க்களத்தில் சிறைபிடிக்கப்பட்டனர் என்றும் இரண்டாம் இராசேந்திர சோழனின் மெய்கீர்த்தி கூறுகின்றது.
இரண்டாம் மேலைச் சாளுக்கியப் போர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      இம்மன்னனது ஆட்சிக்காலத்தில் மேலைச் சாளுக்கியருடன் இரண்டாம் முறையாகப் போர் நிகழ்ந்ததை இவனது ஆட்சியின் கல்வெட்டினால் அறியமுடிகின்றது. அது கி.பி. 1059-ஆம் ஆண்டில் நிகழ்திருத்தல் வேண்டும்.

              கி.பி.1054-ஆம் ஆண்டில் கொப்பத்தில் நடைபெற்ற போரில்
அடைந்த அவமானத்தை போக்கிக்கொள்ளும் பொருட்டு மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டு கிருஷ்ணை ஆற்றின் கரையில் சோழருடன் கடும் போர் புரிந்தான். இப்போரினை ‘முடக்காற்றுப் போர்’ என்று இம்மன்னனின் கல்வெட்டு கூறுகின்றது.

‘முடக்காற்றுப் போர்’
~~~~~~~~~~~~~~~~~~~~~
      முடக்காற்றுப் போரில், சோழச் சக்ரவர்தியாக  இருந்த இரண்டாம் இராசேந்திரன்,  அவனுடைய தம்பிமார்கள் மும்முடி சோழன் எனும் இராசமகேந்திரன், வீரராசேந்திரன் ஆகியோருடன்  களம் புகுந்தான் என்பதை திருப்பாதிருப்புலியூர் மற்றும் மதுராந்தகத்தைச் சார்ந்த  பெரும்போலூர் கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது.         

     
 தம் மானம் காக்க போரிட்ட மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனும் அவன் மகன் விக்ரமாதித்தனும் முடக்காற்றுப் போரிலும்  சோழரை  வெல்ல முடியாது தோல்வியுற்று புறங்காட்டி ஓடினர்.  

தலை நகர்
~~~~~~~~~~
       இரண்டாம் இராசேந்திர சோழனுக்கும் கங்கை கொண்ட சோழபுரமே  தலைநகராய் விளங்கிற்று என்பது திருமழபாடி கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது .


மனைவியரும் மக்களும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                 இரண்டாம் இராசேந்திர சோழனுக்கு கிழானடிகள், திரைலோக்கிய முடையாள் ஆகிய மனைவியர் இருந்தனர் .

                
இம்மன்னனின் புதல்வர்,  இராசேந்திரன், முகையவிழலங்கல் முடிகொண்ட சோழன், சோழ கேரளன் , கடாரங்கொண்டான், படிகொண்ட பல்புகழ் முடிகொண்டசோழன், இரட்டபாடி கொண்ட  சோழன் எனும் அறுவர் ஆவர்.
 
        இம்மன்னனின்
 புதல்வி மதுராந்தகி என்பவளாவாள். இவள் கீழைச்சாளுக்கிய  மன்னன் இராசராச மகேந்திரனின் மகனும் கங்கை கொண்டசோழனின் மகள்வயிற்று பேரனுமாகிய இராசேந்திரனுக்கு மணஞ்செய்து கொடுக்கப்பெற்றாள். அவ்விராசேந்திரனே   பின்னர் சோழ இராச்சியத்தை ஆண்ட  முதலாம் குலோத்துங்கன் ஆவான்.

       இம்மன்னனின்
  காலத்திலேயேஇளவரசு பட்டம் சூட்டபெற்ற, இவனது தம்பி இராசமகேந்திரன்  மாண்டனன்.
         இரண்டாம் இராசேந்திர சோழனது ஆட்சியின் பன்னிரெண்டாம் ஆண்டின் மைசூர் இராச்சியக் கல்வெட்டொன்று காணப்படுவதாலும் அதன்பிறகு இவனது கல்வெட்டுக்கள் எதுவும் காணப்படாமையாலும் இம்மன்னன் கி.பி.1063-ல் இறந்திருக்கவேண்டும் என்பது திண்ணம். 

(ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)

No comments:

Post a Comment