Wednesday, 3 July 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XXI, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-6) Kulothunga Chozhan I (part-6).



                                         (சோழ மன்னர்கள் -40.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!
முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).  (ஆறாம் பகுதி)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன், புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன். }

வட கலிங்கப் போர்
~~~~~~~~~~~~~~~~~~~
     இம்மன்னது ஆட்சியின் நாற்பத்திரெண்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட திருச்சி மாவட்ட சீனிவாசநல்லூர் கல்வெட்டும்,     இம்மன்னது ஆட்சியின் நாற்பத்தைந்தாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட, தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஊரான, ஆலங்குடி கல்வெட்டும் இவனது வட கலிங்கப் போர் குறித்துக் கூறுகின்றன. கலிங்கத்துப் பரணியில் அதன் ஆசிரியர் செயங்கொண்டனாரும் வட கலிங்கப் போர் குறித்து விரிவாகக் கூறுகின்றார்.

    இவ் வட கலிங்கப் போர் குறித்த செய்திகள் முதலாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் நாற்பத்திரெண்டாவது ஆண்டின் கல்வெட்டுக்கள் சிலவற்றில் காணப்படாத காரணத்தால் இப்போர் இம்மன்னனது ஆட்சியின் நாற்பத்திரெண்டாவது ஆண்டின் பிற்பகுதியில், அதாவது, கி.பி.1112ன் ஆண்டின் இறுதியில் நடைபெற்றிருத்தல் வேண்டும்.

அயல் நாட்டு உறவு
~~~~~~~~~~~~~~~~~~~~~
கடாரம்

      முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலத்தில், கி.பி.1090ஆம் ஆண்டில் கடாரத்தரசன், இராச வித்யாதர சாமந்தன்; அபிமானதுங்க சாமந்தன் என்னும் இரு தூதுவர்கள் மூலம் வேண்டிக் கொண்டவாறு நாகப்பட்டினத்தில் இருந்த இராசராச பெரும்பள்ளி மற்றும் இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்னும் இரண்டு புத்த விகாரங்களுக்கு குலோத்துங்கன் தானும் தனது முன்னோரும் இறையீலியாக வழங்கிய ஊர்களைச் செப்பேடுகளில் வரைந்து அளித்திருப்பதைக் காணும்போது முதலாம் குலோத்துங்க சோழனும் கடாரத்து மன்னனும் உற்ற நண்பர்களாய் விளங்கியிருந்ததைப் புலப்படுப்படுத்துகின்றது. இம் மன்னனுடைய மெய்கீர்த்தியும் இவ்வுண்மையை வலியுறுத்துகின்றது.

சீனம்

         கி.பி. 1077 ஆம் ஆண்டில் சோழ நாட்டிலிருந்து எழுபத்திரண்டு வணிகர்கள் அடங்கிய தூதுக்குழு சீன நாட்டிற்கு சென்றிருந்தது குறித்த செய்தி  அந்நாட்டு வரலாற்றில் காணப்படுகின்றது என்றும் அவ்வாறு சென்ற வணிகர்கள் தந்தங்கள், காண்டாமிருக கொம்புகள், கற்பூரம், பட்டுத் துணிகள், பன்னீர், வத்திகள், கிராம்பு, பெருங்காயம் போன்ற பொருட்களைக் கொண்டு சென்றனர் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதிலிருந்து முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சோழ இராச்சியத்துக்கும் சீன நாட்டிற்கும் இடையே நல்லுறவு நிலவி வந்ததை அறிந்துகொள்ள முடிகின்றது.

காம்போசம் (கம்போடியா)

        ‘காம்போச’ நாடென்பது இக்காலத்தில் கம்போடியா என்னும் பெயரில் அறியப்படும் நாடாகும்.

         முதலாம் குலோத்துங்கனுக்கு கம்போச நாட்டின் மன்னன்  காட்சிப் பொருளாகக் காட்டிய கல் ஒன்றினை குலோத்துங்கன் சோழ இராச்சியத்திற்குக் கொணர்ந்து தில்லை நடராஜர் கோயிலில் வைத்தான் என்பதை ’’ ஶ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்கு காம்போச ராஜன் காட்சியாகக் காட்டின கல்லு இது - உடையார் இராசேந்திர சோழ தேவர் திருவாய் மொழிந்தருளி உடையார் திருச்சிற்றம்பல முடையார் கோயிலில் முன் வைத்தது - ’’ என்று சிதம்பரத்தில் உள்ள கல்வெட்டொன்று குறிப்பிடுவதிலிருந்து முதலாம் குலோத்துங்க சோழன் கம்போச நாட்டோடு நட்புடன் விளங்கியதை அறியமுடிகின்றது.

        காண்பதற்கரிய கல்லினை முதலாம் குலோத்துங்கனுக்கு காட்சிப் பொருளாகக் காட்டிய அக் கம்போச நாட்டின் மன்னன் ஹர்ஷவர்மன் என்பதை அந்நாட்டின் வரலாற்றிலிருந்து அறியமுடிவதாய் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கானோஜ் நாடு

        கன்னோசி மற்றும் கன்னியா குப்ஜம் என்று அறியப்படும் நாடு
கானோஜ் நாடு ஆகும். அந்நாடு, வடக்கே, காசிமாநகருக்கு வடமேற்கே அமைந்திருந்த நாடாகும்.

        கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியின் நாற்பத்தியோராம் ஆண்டாகிய கி.பி.1111 ல் வடமொழியில் வரையப்பெற்ற கன்னோசி நாட்டு மன்னனின் கல்வெட்டொன்று உள்ளது.

        ஆயினும் அக் கல்வெட்டானது முற்றுப் பெறாதிருப்பதால் அது எக்காரணத்தால் அங்கு வரையப்பெற்றது என்பதையும் அது அவ்வாறு முற்றுப் பெறாதிருப்பதன் காரணத்தையும் அறிய இயலவில்லை.  சோழப்பேரரசின் தலைநகருக்கு வர நேர்ந்த தருணத்தில் அங்குள்ள கோயிலுக்கு வந்த அக் கன்னோசி நாட்டு மன்னன் அக்கோயிலின் இறைவனுக்கு நிவந்தம் அளித்து அவ்வறச்செயலைக் கல்வெட்டில் வரையச் செய்திருத்தல் வேண்டும்.

     உத்திரப்பிரதேசத்தின் இலக்ஷமணபுரியில் உள்ள பொருட்காட்சியகத்தில் காணப்படும் கன்னோசி நாட்டு மன்னன் கோவிந்த சந்திரத்தேவனின் செப்பேடுகளில் முதலிலுள்ள ஏடுகளில் காணப்படும் வடமொழி சுலோகங்களே கங்கைகொண்ட சோழபுரத்தில் முற்றுபெறாது உள்ள கல்வெட்டிலும் காணப்படுகின்ற காரணத்தால் அது கன்னோசி மன்னனின் கல்வெட்டுதான் என்பதை அறியமுடிகின்றது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும். )
 [ ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது ]

Sunday, 7 April 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XX, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-5) Kulothunga Chozhan I (part-5).


                                 (சோழ மன்னர்கள் -39.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).  (ஐந்தாம் பகுதி)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன், புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன். }

     முதலாம் குலோத்துங்க சோழன் பாண்டியர் ஐவரையும் வென்றபோதும் தனது முன்னோரைப்போன்று போரில் வென்ற பகுதிகளைச் சோழப் பிரதிநிதி மூலம் ஆட்சிபுரியாமல் அவற்றை அவ்வேந்தர்களிடமே அளித்து தனக்குத் திறை செலுத்தும் மன்னராக்கினான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

சேரருடன் போர்
~~~~~~~~~~~~~~~~~

      பாண்டியர்களைப் போலவே, அதிராசேந்திர சோழனின் இறப்பிற்குப் பின்னர் அரசனின்றி சோழ இராச்சியத்தில் நிலவிய குழப்ப நிலையைப் பயன்படுத்தி, சேரர்களும் தம் நாட்டுப்பகுதியினைத் தாமே ஆட்சி புரியத் தொடங்கினர்.

      பாண்டியரை வென்று தனக்குக் கப்பம் செலுத்துமாறு செய்தது போன்றே சேரரையும் வென்று அந்நிலைக்குக் கொண்டுவர முதலாம் குலோத்துங்க சோழன் சேரர் மீது படையெடுத்துச் சென்றான். குலோத்துங்கன் ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டிலேயே இப்படையெடுப்பும் நிகழ்ந்துள்ளது. பாண்டியர் மற்றும் சேரருடனான  குலோத்துங்கனின்  போர் ஓராண்டிலேயே நிகழ்ந்தது என்பது இவனது மெய்கீர்த்தியிலிருந்து புலப்படுகின்றது.

        சேரர் மீது படையெடுத்துச் சென்ற குலோத்துங்க சோழன் திருவனந்தபுரத்திற்குத் தெற்கே உள்ள விழிஞ்சியத்திலும், காந்தளூர்ச் சாலையிலும், குமரிமுனைக்கு வடக்கேயுள்ள கோட்டாறு என்னுமிடத்திலும் போர்புரிந்து பெரு வெற்றியடைந்தான்.

       காந்தளூர்ச் சாலையில் இருந்த சேரரின் கப்பற்படையை அழித்து கோட்டாற்றினை எரியூட்டினான் என்பதை கலிங்கத்துப் பரணியும் விக்ரம சோழனுலாவும் கூறுகின்றன. தோல்வியுற்ற சேரமன்னன், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்திவர ஒப்புக்கொண்டு சோழ இராச்சியத்திற்குட்பட்ட குறுநில மன்னனாய் ஆனான்.

      சோழ இராச்சியத்திற்குட்பட்ட குறுநில மன்னராய் விளங்கும்  சேரரும், பாண்டியரும் மீண்டும் தம் படை வலிமையைப் பெருக்கிக்கொண்டு சோழ இராச்சியத்தோடு முரண்படாதவாறு இருக்கும்படியாக அவர்தம் பகுதியில் தனது சிறந்த தளபதிகளின் கீழ் நிலைப் படைகளை நிறுவினான் குலோத்துங்க சோழன். அவ்வாறு கோட்டாற்றில் அமைக்கப்பட்ட படை ‘கோட்டாற்று நிலைப்படை’ என்னும் பெயரைப் பெற்றது என்பதைhf கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது.

கலிங்கப் போர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~

       முதலாம் குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்திகளிலிருந்து அவன் இரு கலிங்கப் போர்களில் ஈடுபட்டு வெற்றி கண்டான் என்பதை அறியமுடிகின்றது. இரு கலிங்கப் போர்களுள் ஒன்று இம்மன்னனது ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டிலும் மற்றொன்று இம்மன்னனது ஆட்சியின் நாற்பத்தியிரண்டாம் ஆண்டிலும் நடைபெற்றதாய் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

தென் கலிங்கப் போர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
       முதலாம் குலோத்துங்க சோழனின் முதல் கலிங்கப் போர் கி.பி.1096-ல் நடைபெற்றிருக்க வேண்டும். அம் முதல் கலிங்கப் போர் தென் கலிங்கப் போராகும்.

       தென் கலிங்கம் என்பது கோதாவரி ஆற்றிற்கும் மகேந்திர மலைக்குமிடையே அமைந்திருந்த, வங்காள விரிகுடாக்கடல் சார்ந்த பகுதிகளை உள்ளடக்கிய நாடாகும். அக்காலத்தில் அந்நாடு வேங்கி நாட்டு மன்னருக்குட்பட்ட குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது.

     வேங்கி நாட்டினை அக்காலத்தில் முதலாம் குலோத்துங்க சோழனின் புதல்வனான விக்ரமசோழன் குலோத்துங்கனின் பிரதிநிதியாக இருந்து ஆண்டுவந்தான். இளஞ்ஞனான அவனை வீழ்த்தி தென்கலிங்கத்தைத் தானே ஆளும்பொருட்டு தென்கலிங்கக் குறுநில மன்னன் வீமன் இராச்சியத்தில் குழப்பமும் கலகமும் செய்யலானான். இதனையறிந்த விக்ரமசோழன், சோழ இராச்சியத்திற்குட்பட்ட பாண்டிமன்னன் சடையவர்மன் பராந்தகன் என்பவனையும் உதவியாகக்கொண்டு பெரும்படையோடு சென்று வீமனை வீழ்த்தி வெற்றிவாகை சூடினான் என்பதை விக்ரமசோழனின் மெய்கீர்த்தியிலிருந்து அறியமுடிகின்றது.

      தென் கலிங்க நாடு மீண்டும் சோழரின் ஆட்சிக்குட்பட்டுவிட்டது என்பதை அந்நாட்டிற்குட்பட்ட சிம்மாசலம், திராட்சாராமம் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டுக்களும் உறுதிசெய்கின்றன.

      இப்போர் முதலாம் குலோத்துங்க சோழனின் புதல்வன் விக்ரமசோழனின் தலைமையில் நடைபெற்றிருந்தாலும் அது சோழ சாம்ராச்சியத்தினை ஆண்டுவந்த முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதால் அவ்வெற்றி சோழமன்னன் முதலாம் குலோத்துங்கனின் வெற்றியாகக் கருதப்பட்டது இயல்பேயாகும்.

வடகலிங்கப் போர்
~~~~~~~~~~~~~~~~~~~

( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும். )
[ ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது ]

Monday, 25 March 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XIX, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-4) Kulothunga Chozhan I (part-4).



                                            (சோழ மன்னர்கள் -38.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).  ( நான்காம் பகுதி)
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன், புகழ்பெற்ற, இம்
முதலாம் குலோத்துங்க சோழன். }

       விக்ரமாதித்தனோ தனது தம்பி சயசிங்கனை தனது பக்கம் இருக்கும்படி செய்துகொண்டு சோழ இராச்சியத்துடன் போர்புரியப் புறப்பட்டான்.

      சோழ சாம்ராச்சியத்தின் வடக்கு எல்லையான மைசூர் பகுதியில் இருதரப்பினருக்கும் கடும் போர் நடந்தது. போரில் சோமேஸ்வரன் தோற்கடிக்கப்பட்டு விக்ரமாதித்தனால் சிறைபிடிக்கப்பட்டுத் தன்னிடம் இருந்த குந்தளப்பகுதியையும் இழந்தான்.

      எனினும், இருதரப்பினருக்கும் தொடர்ந்து போர் நடந்துவர, கோலாரில் உள்ள நங்கிலி என்னும் இடத்தில் நடைபெற்றப் போரில் குலோத்துங்க சோழன் வெற்றி பெற்று விக்ரமாதித்தனைத் துங்கபத்ரை ஆற்றின் கரைவரையில் துரத்தினன். இறுதியில் துங்கபத்ரை ஆற்றின் கரையோரம் நடைபெற்ற போரிலும் வெற்றி வாகைசூடி விக்ரமாதித்தனையும் அவனது தம்பி சயசிங்கனையும் தோற்கடித்து குந்தள நாட்டின் ஒருபகுதியினைச் சோழ இராச்சியத்துடன் இணைத்த புகழுடன் தலைநகர் திரும்பினான் குலோத்துங்க சோழன்.
      
        குலோத்துங்க சோழன் ஆட்சியின் ஏழாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில் அவன் விக்ரமாதித்தனையும் சயசிங்கனையும் வென்ற செய்திகள் குறிக்கப்பெற்றுள்ளமையால்  அப்போர் கி.பி.1076 ல் நடைபெற்றிருத்தல் வேண்டும் .

பாண்டியருடனான போர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    மேலைச்சாளுக்கியரோடு நடத்திய வடதிசைப் போருக்குப் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் நடத்திய போர் பாண்டியருடனான போராகும்.

    பாண்டி நாட்டை ஆண்டுவந்த  பாண்டி மன்னர்கள் தமது நிலையில் தாழ்ந்திருந்த காரணத்தால், முதலாம் பராந்தக சோழன்  மற்றும்  முதலாம் இராசராச சோழன் ஆகியோரது காலங்களில் சோழச் சக்கரவர்த்திக்குத் திறை செலுத்தும் குறுநில மன்னர்களாய் வாழ்ந்து வந்தனர்.

     ஆயினும், தாங்கள் சிறிது படை வலிமை பெற்றபோதெல்லாம் தாம் சுயேட்சையான முடிமன்னர்களாக விளங்கவேண்டும் என்ற கருத்தில் சோழரோடு முரண்படத்தொடங்கினர்.

     இக்காரணத்தாலேயே சோழ சாம்ராச்சியத்தை ஆண்டுவந்த  சோழ மன்னர்கள் அவ்வப்போது தம் சாம்ராச்சியத்திற்குட்பட்ட பாண்டி நாட்டுப்பகுதிக்குப் படைகளை அனுப்பி பாண்டியரது முயற்சியை முறியடித்து வந்தனர்.

     இதுபோன்று அவ்வப்போது நடைபெறுவதால் ஏற்படக்கூடிய இன்னல்களைத் தவிர்க்கும் எண்ணத்துடனேயே முதலாம் இராசேந்திர சோழன், தன்னால் போரில் வென்றடக்கப்பட்ட பாண்டி நாட்டுப்பகுதியில் மீண்டும் கலவரங்கள் எழாதவண்ணம், தனது புதல்வருள் ஒருவனுக்கு  ‘சோழபாண்டியன்’ என்ற பட்டம் கட்டி சோழ இராச்சியத்திற்குட்பட்ட பாண்டி நாட்டை தனது பிரதிநிதியாக இருந்து ஆளும்படியாகச் செய்தனன்.

     அவ்வாறே, முதலாம் இராசேந்திர சோழனின் இரு புதல்வர்களும் அவனது பேரன்களும் பாண்டி நாட்டுப்பகுதியை ஆண்டுவந்தனர்.

     எனினும், கி.பி.1070ல் அதிராசேந்திர சோழனின் மறைவிற்குப் பின்னர் அம்மன்னனுக்குப் புதல்வர் இல்லாத காரணம்தொட்டு சிலகாலம் சோழஇராச்சியத்தில்  நிலவிய குழப்பச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பாண்டி மன்னர்குலத்தோன்றலான ஐவர் பாண்டி நாட்டுப்பகுதியினைத் தமக்குள் ஐந்து பகுதிகளாய் பிரித்துக்கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினர். அவ்வாறான அவர்களது ஆட்சி ஏறத்தாழ ஐந்தாண்டுகள் நடைபெற்றிருக்க வேண்டும்.

     முதலாம் குலோத்துங்க சோழன், மேலைச்சாளுக்கிய போருக்குப்
பின்னர் ஐந்தாண்டுகாலம் தனது படையினைத்திரட்டி கி.பி.1081ல் பாண்டி நாட்டின்மீது படையெடுத்துச் சென்றான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

       முதலாம் குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தி

          “ வடகடல் தென்கடல் படர்வது போலத்
            தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர்
            ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி
            வெரிநளித் தோடி அரணெணப் புக்க
            காடறத் துடைத்து நாடடிப்படுத்து…”

என்று கூறுவதிலிருந்தும், கலிங்கத்துப்பரணியிலிருந்தும் அவன் கடல்போன்று தோற்றமளித்த பெரும்படையோடு சென்று பாண்டியர் ஐவரையும் தோற்றோடச்செய்து பாண்டி நாட்டைக் கைப்பற்றினான் என்பதை அறியமுடிகின்றது.

( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும். )
 
[ ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது ]


Tuesday, 12 March 2013

சோழ மன்னர்கள் Later Chola Kings-XVIII, முதலாம் குலோத்துங்க சோழன் (பகுதி-3) Kulothunga Chozhan I (part-3).



                                          (சோழ மன்னர்கள் -37.)
    பல நாட்டு மன்னர்களைப் பற்றி அறிகின்றோம், பேசுகின்றோம், நம் தமிழ்நாட்டு மன்னர்கள் பற்றித் தெரிந்து கொள்ளும்வகையில் இம்முயற்சி!

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120).  (மூன்றாம் பகுதி)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
{ இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சிபுரிந்து புகழ்பெற்ற அக்பர் (49 ஆண்டுகள்), ஒளரங்கசீப் (49+ ஆண்டுகள்) போன்ற மாமன்னர்களை விட அதிக ஆண்டுகள் (ஐம்பது ஆண்டுகள்) ஆட்சிபுரிந்தவன் புகழ்பெற்ற இம் முதலாம் குலோத்துங்க சோழன். }

       கீழைச் சாளுக்கிய அரசகுமாரனான இராசேந்திரன் குலோத்துங்க சோழன் என்னும் பெயரோடு சோழ இராச்சியத்திற்கு சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டதும் சோழ இராச்சியம் முழுமையிலும் அமைதி நிலவத்தொடங்கியது. சோழ இராச்சியத்திற்குட்பட்ட குறுநிலமன்னர்களும் இவனுக்கு அடங்கி நடக்கத்தொடங்கினர்.

       இம்மன்னன் சோழ இராச்சியத்திற்கு இன்றியமையாத போர்களில் மட்டுமே ஈடுபட்டு ஏனைய பயனற்ற போர்களைத் தவிர்த்தமையை அறியும்போது, இம்மன்னன் நாட்டு மக்களின் நலனை மட்டுமே தனது குறிக்கோலாகக் கொண்டு ஆட்சிபுரிந்தான் என்பதை உணரமுடிகின்றது.

       தனக்குமுன்னர் ஆண்ட தனது மாமன்மார்கள் துங்கபத்திரை ஆற்றிற்கு வடக்கே அமைந்த சாளுக்கிய நாட்டைக் கைப்பற்றி அதனை சோழ சாம்ராச்சியத்தின் ஒரு அங்கமாக ஆக்கவேண்டும் என்ற வேட்கையில் நடத்திய போர்களினால் உற்ற இன்னல்களை இளமைக்காலந்தொட்டே கண்ணுற்ற முதலாம் குலோத்துங்க சோழன் அவ்வண்ணெத்தை முற்றிலும் விட்டொழித்தான்.

       மாறாக, சோழ இராச்சியத்தின் குடிமக்களுக்கு நலம் தருவனவற்றை செய்து ஆட்சி புரிவதே சிறப்பெனக் கருதினான். இதனால் அவனது ஆட்சியின் கீழ் சோழ இராச்சியத்தில் மேலும் அமைதி நிலவத்தொடங்கியது.

      இம்மன்னன் சோழ நாட்டிற்குச் சக்ரவர்த்தியாக ஆகிய காலத்தில் சோழ இராச்சியத்தின் வடக்கு எல்லையில் அமைந்திருந்த வேங்கிநாடு இவனுக்குரியதாக இருந்து இவனது பிரதிநிதியால் ஆட்சி செய்யப்பட்டதால் வடக்கு எல்லைவழியாக இராச்சியத்தின்மீது பகைவர்
படையெடுத்து வருவதென்பது இயலாத காரியமாயிற்று. இக்காரணத்தாலும் சோழ இராச்சியத்தில் அமைதி தழைத்தோங்கியது எனலாம்.

        முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் மிகுதியாகக் காணப்படுகின்றன. மேலும், தற்போதைய ஆந்திர, கர்நாடாக மாநிலங்களில் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. அக் கல்வெட்டுக்களில் இம்மன்னனது நீண்டகால ஆட்சியின் காரணமாய் வரையப்பெற்ற பல மெய்கீர்த்திகள் காணப்படுகின்றன.

         இம்மன்னனது மெய்கீர்த்திகளின் உதவியோடு ஆராயும்போது அவன் நிகழ்த்திய போர்கள் குறித்த செய்திகளை ஆறியமுடிகின்றது.

         இவன் தனது இளமைப் பருவத்திலேயே சக்கரகோட்டப் பகுதியை ஆட்சிபுரிந்த தாராவர்ஷன் என்பவனைப் போரில் வென்று வாகை சூடினான் எனபதையும் வயிராகாரம் என்ற ஊரில் எண்ணற்ற யானைகளை கைப்பற்றினான் என்பதையும் ‘வஞ்சனை கடந்து வயிராகாரத்து’ எனத் தொடங்கும் மெய்கீர்த்தியின் மூலம் அறியமுடிகின்றது.

        சக்கரகோட்டம் என்பது முன்னர் வத்ச இராச்சியமாகும், இக்காலத்தே அது ‘சித்திரகூட்’ என்று அறியப்படுகின்றது.

         முதலாம் குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தியிலுள்ள   ‘கொந்தளவரசர் தந்தனம் இரிய-வாளுறை கழித்துத் தோள்வலி காட்டி…போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி’ எனும் பகுதியை  நோக்கும்போது இம்மன்னன் சோழநாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் முன்னரே வடக்கே மேலைச்சாளுக்கியருடன் போர்புரிந்து வெற்றியடைந்தவன் என்பது புலப்படும். செல்லூர் செப்பேடுகள் குறிப்பிடுவன இதனைப் பற்றியதாயிருக்கலாம்.

         முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற போர்களை ஆராய்ந்து பார்த்தால் அவன் நிகழ்த்திய போர்களுள் ஒன்றிரண்டைத்தவிர மற்றவையெல்லாம் இம்மன்னனது ஆட்சியின் முற்பகுதியிலேயே நடைபெற்றிருந்தன என்பதை அறியலாம்.

மேலைச்சாளுக்கியருடன் போர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      மேலைச்சாளுக்கிய குந்தள மன்னன்  ஆறாம் விக்ரமாதித்தன் தனது மைத்துனனான அதிராசேந்திர சோழன் இறந்தபின்னர் கீழைச்சாளுக்கிய அரசகுமாரனாகிய இராசேந்திரன் ‘குலோத்துங்கன்’ எனும் பெயரில் சோழநாட்டிற்கு முடிசூட்டப்பட்டதை அறிந்து, கீழைச்சாளுக்கியமாகிய வேங்கி நாடும் சோழ இராச்சியமும் ஒருங்கிணைந்து ஓர் அரசனின் கீழ் இருப்பது தன் ஆளுகைக்கு பேரிடராய் ஆகும் என்று கருதி சோழ இராச்சியத்தின் வலிமையைக் குறைக்கும் எண்ணத்தோடு ஐந்தாண்டு காலம் முயன்று ஒரு பெரும் படையினைத் திரட்டிவந்தான்.           

     இதனையறிந்து, குந்தள நாட்டின் ஒரு பகுதியை ஆண்டுவந்தவனும், மற்றொரு பகுதியை ஆளும் விக்ரமாதித்தனின் பகையாய் விளங்கிய, இரண்டாம் சோமேசுவரனைத் தன் பக்கம் இணைத்துக்கொண்டான் குலோத்துங்கன்.



( -தொடரும், முதலாம் குலோத்துங்க சோழன் குறித்த எனது பதிவின் பகுதிகள் பின்னர் ஒற்றைத் தொகுப்பாக ஒருங்கிணைக்கப்படும். )
[ ஓவியம் ம.செ.வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது ]